புதிய அரசியலமைப்புக்கான பணிகள் 2026 இல் துவங்கும் : திஸாநாயக்க
இலங்கையின் தேசியப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு கொடுப்பதாக அநுர குமார திஸாநாயக்க தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தார். அதன் ஒருபகுதியாக தற்போதைய இலங்கை ஜனாதிபதி திஸாநாயக்க வாக்குறுதியளிக்கப்பட்ட புதிய அரசியலமைப்புக்கான பேச்சுவார்த்தைகளை 2026 ஜனவரி மாதம் தொடங்குவதாக உறுதியளித்துள்ளார். மேலும், மாகாண சபைத் தேர்தல்களை தாமதமின்றி நடத்தப் போவ தாகவும் கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைவர்கள் திஸா நாயக்கவை சந்தித்து பேசிய போது இதனை அவர் தெரிவித்துள்ளார்.
கனமழையால் மோசமடையும் பாலஸ்தீனர்களின் வாழ்க்கை
பாலஸ்தீனர்களுக்கு மிக அதிகளவில் உள்ள தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமான நிவா ரணப்பொருட்களை இஸ்ரேல் அனுமதிக்க மறுத்து வருகிறது. போதிய தங்குமிடங்கள் குளிரில் இருந்து தற்காத்துக் கொள்ளும் போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இல்லாத காரணத்தால் கடந்த வாரம் பெய்த மழை மக்களின் வாழ்நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது. சுமார் 18,600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கானோர் மீண்டும் தங்கள் இடத்தை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர் என ஐ.நா. மனிதாபிமான அமைப்பு தெரிவித்துள்ளது.
கவனமாக இருக்க வேண்டும் : ஜப்பானுக்கு ரஷ்யா எச்சரிக்கை
தைவான் குறித்து ஜப்பான் பிரதமர் ஆபத்தான கருத்துக்களைத் தெரிவிப்பதைத் தவிர்க்க வர லாற்றில் இருந்து பாடம் கற்க வேண்டும். ஜப்பானின் ராணுவவாதம் எப்படி முடிவுக்கு வந்தது என்பது எங்களுக்குத் தெரியும். ஜப்பானை ஆளும் அந்த அரசியல்வாதிகள் இதை நினைவில் வைத்திருப்பது, பொறுப்பற்ற அறிக்கைகள் எங்கு இட்டுச் செல்லும் என்பதைப் புரிந்துகொள்வது மற்றும் அவற்றைத் தவிர்ப் பது நல்லது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா சக்கரோவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியர்கள் மீதான தாக்குதலை தடுக்க சிறப்புக் குழுக்கள்
சமீப காலமாக அயர்லாந்தின் முக்கிய நகரங்களில் வசிக்கும் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் அதி கரித்துள்ளன. இந்தத்தாக்குதல்கள் அனைத்திற்கும் அயர்லாந்து அரசு கண்டனம் தெரிவித்துள்ளதாக வும், இந்திய மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு அயர்லாந்து இனிமையான இடம் எனவும் இந்தி யாவுக்கான அயர்லாந்தின் தூதர் கெவின் கெல்லி கூறியுள்ளார். மேலும் அந்நாட்டில் இந்தியர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக காவல் துறையின் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் பதவியை இழக்கலாம்
பிரிட்டன் பிரதமராக உள்ள ஸ்டார்மர் தனது பதவியை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. ஸ்டார்மர் லேபர் கட்சியை கைப்பற்றி வலதுசாரிப் பாதையில் திருப்பிய பிறகு 2024 ஜூலை மாதம் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானார். பதவியேற்ற பிறகு ராணுவத்திற்கான செலவுகளை அதிகரிப்பது, மக்கள் நலத்திட்ட உதவிகளை வெட்டுவது என மக்கள் விரோதப்போக்கை தொடரும் நிலையில் இவரது செல்வாக்கு வீழ்ந்துள்ளது. இந்நிலையில் இவர் தனது பதவியை இழக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
