“எதிர்காலத்தை மீட்க வேண்டும்” பெரும் செல்வந்தர்கள் மீது வரி விதிக்க செல்வந்தர்களே கோரிக்கை
டாவோஸ்,ஜன.22- சுவிட்சர்லாந்தின் டாவோஸில் உலகப் பொருளாதார மன்றக் (World Economic Forum) கூட்டம் நடை பெற்று வருகிறது. இச்சமயத்தில், “எங்கள் எதிர்காலத்தை நாங்கள் மீட்டெடுக்க வேண்டும். டாவோஸ் தலைவர்களே, பெரும் செல்வந்தர்கள் மீது வரி விதி யுங்கள்” என்ற தலைப்பில் ஒரு கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் தயாரிப்பாளர் அபிகாயில் டிஸ்னி (Abigail Disney), அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் ஹல்க் பாத்திரத்தில் நடித்த கலைஞர் மார்க் ருஃபலோ (Mark Ruffalo), இசைக் கலைஞர் பிரையன் ஈனோ உள்ளிட் டோர் கையெழுத்திட்டுள்ளனர். இக்கடிதமானது தேசபக்தி கோடீஸ்வரர்கள் (Patriotic Millionaires), மனிதநேயத்திற்கான கோடீஸ்வரர்கள் (Millionaires for Humanity),ஆக்ஸ்பாம் (Oxfam) ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் “வெல்ல வேண்டிய நேரம்” என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். 1% பணக்காரர்களிடம் 95% மக்களின் சொத்தைவிட அதிகம் அக்கடிதத்தில் கடந்த 50 ஆண்டு களில் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்தில் நாம் பெரும் முன்னேற்றம் கண்டிருந்தாலும், சமத்துவமின்மையும் அதிகரித்துள் ளது. இன்று உலகின் மிகப் பெரும் பணக்காரர்களாக இருக்கும் 1 சத விகித மக்கள், உலகின் 95 சதவிகித மக்களிடம் உள்ள மொத்தச் செல்வத் தை விட அதிகச் செல்வத்தை வைத் துள்ளனர். ஒருசில உலகளாவிய பெரும் செல்வந்தர்கள் நமது ஜனநாய கத்தை விலைக்கு வாங்கிவிட்டனர். அரசாங்கங்களைக் கைப்பற்றி, ஊடக சுதந்திரத்தை நசுக்கி, தொழில் நுட்பத்தைக் கட்டுப்படுத்தி வரு கின்றனர். “எங்களைப் போன்ற கோடீஷ் வரர்களே இந்த அதீத செல்வக்குவிப்பு மற்றவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாக உணரும்போது, சமூகம் ஒரு ஆபத்தான விளிம்பில் நிற்கிறது என்பதில் சந்தேகமே இல்லை” என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவர்கள் 2026 இல், நாம் விரும்பும் எதிர்காலத்திற்காக வெறும் நம்பிக்கையை மட்டும் கொண்டிருக்கக் கூடாது, அதை நாம் வென்றெடுக்க வேண்டும். உங்க ளிடம் ஒரு எளிய மற்றும் பயனுள்ள தீர்வு உள்ளது. பெரும் செல்வந்தர்கள் மீது வரி விதியுங்கள் என்ற கோரிக்கை யானது செல்வந்தர்கள் மற்றும் பொது மக்களின் ஆதரவைப் பெற்றது. “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பெரும் கோடீஸ்வரர்களின் மீது வரி விதிப்பது உங்கள் கடமையாகும். எவரிடம் அதிக அதிகாரம் குவிந்துள்ளதோ, அவர்களிடமிருந்து அதிகாரத்தை மீட்டெடுத்து, கல்வி, சுகாதாரம் மற்றும் பொதுச் சேவைகளை மீண்டும் வலுப்படுத்த வேண்டும்” என்றும் அக்கடிதத்தில் கோரிக்கையாக வைத்துள்ளனர்.
