உலகில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை வரும் 2030க்குள் 100 கோடியாக உயரும் என்று ஐ.நா ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கடும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டிருந்த நிலையில் கொரோனா பெருந்தொற்றும் அதைத்தொடர்ந்து ஊரடங்கும் மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. இந்நிலையில் ஐக்கியநாடுகள் சபையின் மேம்பாடு திட்டத்தின் ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையில் கொரோனா பெருந்தொற்றைதொடர்ந்து ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக 20 கோடியே 70 லட்சம் பேர் கொடிய வறுமையில் தள்ளப்படும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் வரும் 2030க்குள் வறுமையில் வாழ்வோர் எண்ணிக்கை மொத்தம் 100 கோடிக்கும் அதிகமாக இருக்கும். கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் 80 சதவிகிதம் உற்பத்தி திறன் இழப்பு காரணமாக 10 ஆண்டுகளுக்கு நீடிக்கும். கொரோனாவைத் தொடர்ந்து தலைவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் உலகை மாறுபட்ட திசைகளில் கொண்டு செல்ல வாய்ப்புள்ளது. இது நிலையான வளர்ச்சி இலக்குகள் 14 கோடியே 60 லட்சம் பேரை தீவிர வறுமையில் இருந்து வெளியேற்றும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.