world

img

தீக்கதிர் உலக செய்திகள்

பாக்-ஆப்கன் அதிகாரிகள் கத்தாரில் பேச்சுவார்த்தை

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே தொடர்ந்து மோதல் நடக்கும் நிலையில் இரு தரப்பு பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்த கத்தார் சென்றுள்ளனர். இரு நாடுகளுக்கும்  இடையே 48 மணி நேர போர் நிறுத்தம் அமலான பிறகு வரும் இப்பயணம்  அமைதியை நிலை நாட்டும் நடவடிக்கைக்கு வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆசிஃப், உளவுத் துறை அதிகாரிகள் கத்தார் செல்வதை அந்நாட்டு அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. 

சீனா, அமெரிக்கா இடையே  மீண்டும் பேச்சுவார்த்தை

சீனாவும் அமெரிக்காவும் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தையை மீண்டும் நடத்த உள்ளன. அமெரிக்காவின் வர்த்தக மிரட்டல்களை தொடர்ந்து சீனா அரிய மண் கனிமங்கள் மீதான கட்டுப்பாடுகளை அறிவித்தது. டிரம்ப்பும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடந்த வாரம் 100 சதவீத வரி விதித்தார். சில நாட்கள் கழித்து இந்த வரிகள் நிலையானவை அல்ல என கூறினார். தற்போது இந்த வரி தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.  

செனகல் தியாரோய் படுகொலையை  பிரான்ஸ் திட்டமிட்டு நடத்தியது

செனகல் நாட்டில் 1944 ஆம் ஆண்டு ஊதியம் கேட்டுப் போராடிய ஆப்பிரிக்க ராணுவ வீரர்கள் மீது பிரான்ஸ் ராணுவம் நடத்திய தாக்குதல் “திட்டமிட்ட படுகொலை” தான் என அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் இந்த படுகொலை  “மூடி மறைக்கப்பட்டது”. அந்த சம்பவத்தில் பலியானதாக அறிவிக்கப்பட்ட 35 என்ற எண்ணிக்கை மிகவும் குறைவானது. நம்பகமான மதிப்பீடுகளின்படி, பலி எண்ணிக்கை 300 முதல் 400 வரை இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மொசாம்பிக் படகு விபத்து  3 இந்தியர்கள் பலி  

மத்திய மொசாம்பிக்கில் உள்ள பெய்ரா துறைமுகத்திற்கு அருகே இந்தியப் பெருங்கடலில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கப்பலில் இருந்து துறைமுகத்துக்கு 21 பேர் பயணித்த போது இந்த விபத்து நடத்துள்ளது. அதில் 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அதில் ஐந்து பேர் இந்தியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெகுல் சோக்சியை நாடு கடத்த  பெல்ஜியம் நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு தப்பித்து ஓடிய மெகுல் சோக்சியை நாடு கடத்த பெல்ஜியம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வைர வியாபாரியான மெகுல் சோக்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,500 கோடி மோசடி செய்த வழக்கு உள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணையை தவிர்ப்பதற்காக 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து அவர் தலைமறைவாகி ஆன்டிகுவா தீவில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார். பின் கடந்த ஆண்டு முதல் அவர் பெல்ஜியத்தில் இருந்து வருகிறார். 

அரசியல் தலைவர்களை விடுவிக்க வேண்டும் : பாலஸ்தீனத்தில் எழுந்து வரும் கோரிக்கை

காசா, அக்.18 - காசாவின் மறுகட்டமைப்பு, எதிர்காலம் குறித்த விவாதங்களில் பாலஸ்தீன அரசியல் தலைவர்களின் பங்கு இருக்க வேண்டும். எனவே இஸ்ரேல் அடைத்து வைத்துள்ள பாலஸ்தீன அரசியல் தலைவர்களை  விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.   இஸ்ரேல்-ஹமாசுக்கு இடையே கையெழுத்தாகியுள்ள தற்காலிக போர் நிறுத்தத்தின்  அடுத்த கட்டமாக காசாவை நிர்வகிக்க சர்வதேசக் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது.  இத்தனை ஆண்டு காலம் பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கவும், அழிக்கவும் இஸ்ரேலுக்கு ஆயுத உதவியும் சர்வதேச ஆதரவையும் வழங்கிய மேற்குலக நாடுகளின் தலைவர்களின் ஆதிக்கம் இருக்கும் வகையில் தான் இக்குழு அமைக்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் இந்த குழுவின் தலைவராக இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் தான் காசா மறுகட்டமைப்பில் பாலஸ்தீன அரசியல் தலைவர்கள் இடம் பெற வேண்டும். அதற்காக இஸ்ரேல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.   இஸ்ரேலின் அரசியல் சிதைவுக் கொள்கை  கடந்த பல ஆண்டுகளாக இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன அரசியல் தலைவர்களைக் குறிவைத்து படுகொலை செய்தது மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மூலமாக சிறையில் அடைத்து வைத்துள்ளது. இதன் மூலமாக பாலஸ்தீனத்தின் அரசியல் தளத்தை சிதைத்து யாசர் அராஃபத்துக்குப் பிறகு பாலஸ்தீன மக்களின் அரசியல் தலைவராக யாரும் உருவாகிவிடாமல் இஸ்ரேல் தடுத்துவிட்டது.  ஃபதா (Fatah) மற்றும் பி.எல்.ஓ (PLO) அமைப்பின் முக்கியத் தலைவரான மர்வன் பார்குதி (Marwan Barghouti) பாலஸ்தீனத் தலைவர்களில் மிகவும் பிரபலமானவராகக் கருதப்படுகிறார். இவர் கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் கைதியாகச் சிறையில் உள்ளார். அதே போல மக்கள் விடுதலைக்கான பாலஸ்தீன முன்னணியின் (PFLP) தலைவர் அஹ்மத் சாஅதாத் 23 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளார். ஹமாஸ், இஸ்லாமிக் ஜிஹாத் ஆகிய அமைப்புகளின் அரசியல் தலைவர்கள் நாடு கடத்தப்பட்டோ அல்லது காசாவில் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டோ வருகின்றனர். உதாரணமாக, ஹமாஸ் நிறுவனர் ஷேக் அஹ்மத் யாசின் 2004 இல் கொல்லப்பட்டார். சலே அல்-அரூரி, இஸ்மாயில் ஹனியே போன்ற முக்கியத் தலைவர்கள் சமீபத்தில் கொல்லப்பட்டனர். ஐ.நா. அவை எந்தவொரு பாலஸ்தீனக் குழுவையும் தனது தடைகள் பட்டியலில் வைக்கவில்லை. மாறாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மட்டுமே பாலஸ்தீனக் குழுக்களைத் தன்னிச்சையாகப் பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்துள்ளன.  இத்தகைய சூழலில் தான் மர்வன் பார்குதி, அஹ்மத் சாஅதாத் போன்ற அரசியல் தலைவர்களை இஸ்ரேல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்களது அமைப்புகள் பாலஸ்தீனத்தின் எதிர்காலத்தை வெளிப்படையாக விவாதிக்க அனுமதிக்கப்பட வேண்டும். அந்தக் கருத்துக்களை காசா மறுகட்டமைப்பு பேச்சுவார்த்தைகளில் பிரதிநிதித்துவப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.