world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ஷேக் ஹசீனா மீது  புதிய கைது உத்தரவு 

வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது மகன் சஜீப் வாஜேத் மீது மீண்டும் புதிய கைது உத்தரவை அந்நாட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அந்நாட்டு தலைநகரின் புறநகர் பகுதியில்  குடியிருக்கும் மக்களுக்கு வீடுகள் ஒதுக்கியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் இரண்டு வழக்குகளில் ஹசீனா, அவரது மகன் சஜீப் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 16 பேருக்கு  புதிய கைது உத்தரவு வாரண்ட்களை பிறப்பித்தது.

சிங்கப்பூரில் தேர்தல்: நாடாளுமன்றம் கலைப்பு 

சிங்கப்பூரில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அந்நாட்டு நாடாளுமன்றம் செவ்வாயன்று (ஏப்.15) கலைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தை கலைத்த சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் அந்நாட்டின்  14 ஆவது பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 23 முதல் துவங்கும் எனவும் அறிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 3 அன்று நடைபெறும் என அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

சுவர்களை சீனா தகர்க்கிறது;  கூட்டாளிகளை இணைக்கிறது - வாங் யீ 

சீனா “சுவர்களை தகர்க்கிறது” மற்றும் அதன் வர்த்தகக்  கூட்டாளிகளின் வட்டத்தை விரிவு படுத்துகிறது என சீன வெளியுறவுத்துறை அமைச் சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.  மேலும்முஷ்டிக ளால்மோதிக்கொள்வதற்கு பதிலாக நாங்கள் கை குலுக்குகிறோம் என்றும் அவர்தெரிவித்தார். அமெரிக்காவின் வர்த்தகப்போரை எதிர்கொள்ள சீனா தங்களுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளின் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்தி வரு கிறது. அது மட்டுமின்றி வர்த்தக உறவில் உள்ளநாடு களுடனான உறவையும் மேலும் வலுப்படுத்தும் ஒப்பந்தங்களையும் ஏற்படுத்தி வருகின்றது.

இஸ்ரேல் மக்களுக்கு  மாலத்தீவு தடை 

இஸ்ரேல் மக்கள் மாலத்தீவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இது இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதி ராகவும் பாலஸ்தீன மக்களுக்கு “உறுதியான ஒற்றுமையை” தெரிவிக்கும் வகையில் இந்த தடை விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ஜனாதிபதி முகமது முய்சு இச்சட்டத்தை அங்கீகரித்தார். இத்தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

60,000 ஆப்கானிஸ்தான்  அகதிகள் நாடு கடத்தல் 

கடந்த 13 நாட்களில் 60,000 ஆப்கானிஸ்தான் அகதிகளை பாகிஸ்தான் அரசு நாடு கடத்தி யுள்ளது என்று சர்வதேச குடியேற்ற அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது. 2023 செப்டம்பர் மாதம் முதல் இதுவரை சுமார் 24.3 லட்சத்துக்கும் அதிகமான போதிய ஆவணங்கள் இல்லாத ஆப்கானிஸ்தான் மக்கள், பாகிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து வலுக்கட்டாயமான முறையில் ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். பாக் அரசு 2025 க்குள் 30 லட்சம் ஆப்கானிஸ்தான் மக்களை நாடு கடத்த உள்ளது.

வர்த்தகப் போரில் வெற்றியாளர் யாரும் இல்லை :  ஜி ஜின்பிங் கருத்து 

ஹனோய்,ஏப்.15-  வர்த்தகப் போரிலும், வரி விதிக்கும் போட்டியிலும் வெற்றி பெற்றவர் யாரும் இல்லை என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். வியட்நாம் நாட்டிற்கு அரசு முறை பயணமாக சென்றிருந்த அவர் அங்கு இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்கா சீனா மீது 145 சதவீத வரிகளை விதித்துள்ளது. வியட்நாம் மீதும் 46 சதவீதம் வரை வரிகளை விதித்துள்ளது. இந்நிலையில் இரு நாடுகளும் ராணுவம், பசுமை பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு என சுமார் 45 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையே முரண்பாடுகள் இருந்தபோதிலும் கடந்த 18 மாதங்களில் இரண்டாவது முறையாக ஜி ஜின்பிங் வியட்நாம் சென்றுள்ளார். மேலும் அமெரிக்காவின் பொருளாதாரத் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் முரண்பாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இரண்டு நாடுகளும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த முன் வந்துள்ளதாக சில பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பயணத்தில் ஜி ஜின்பிங் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் டூ லாமுடன் சந்திப்பை நடத்தினார். இந்த சந்திப்பில் அமெரிக்காவின் வரிவிதிப்புகளால் ஏற்படும் இடையூறுகளுக்கு இடையே இரு நாடுகளுக்கும் இடையேயான வணிக ஒத்துழைப்பை பலப்படுத்த இரு நாடுகளும் உற்பத்தி மற்றும் உற்பத்தியான பொருட்களை சந்தைப்படுத்தும் விநியோகச் சங்கிலிகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவெடுத்துள்ளன.   இந்த ஒப்பந்தத்தின்படி சீனாவின் நிதி உதவியுடன் சில திட்டங்களை வியட்நாமில் முன்னெடுக்க உள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் அது பற்றிய  விளக்கங்கள் வெளியிடப்படவில்லை. சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெறும் ஒப்பந்தங்கள் மற்றும் அமைதியான உறவுகள் உலக அமைதிக்கும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நல்லுறவை மேம்படுத்துவதற்கும் அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கும் எதிரான நடவடிக்கைகளில்  முதன்மையான ஒன்றாகும்.