தொண்டு நிறுவனத்தின் பெயரில் உளவு பார்த்தவர்கள் கைது
புர்கினா ஃபாசோவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதானவர்கள் நெதர்லாந்தில் இருந்து இயங்கும் சர்வதேச தன்னார்வ நிறுவனப் பாதுகாப்பு என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்கள் எனவும் அந்நிறுவனத்திற்கும் இக்குற்றத்தில் பங்குள்ளது என்றும் கூறப்படுகிறது. கைதானவர்களில் ஒருவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கோவில் மருந்து தட்டுப்பாடு தீவிரமடையும் நெருக்கடி
காங்கோவின் கிழக்கு மாகாணங்களில் சுமார் 200 க்கும் மேற்பட்ட சுகாதார நிலையங்களில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஐ.நா அவைக்கு ஏற்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறையே மருந்து தட்டுப் பாட்டிற்கு காரணம் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. ருவாண்டாவின் ஆதரவுடன் எம்23 ஆயுதக்குழு அங்கு தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில் மருந்து பற்றாக்குறையால் சுகாதார சேவை தடைபடுவதுடன் மனிதாபிமான நெருக்கடியும் தீவிரமடையும் அபாயம் உருவாகியுள்ளது.
ஆப்கன் வெளியுறவு அமைச்சர் இந்தியா வருகை
ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தாகி ஒரு வார பயணமாக இந்தியா வந்து ள்ளார். இந்தப் பயணத்தில் இரு நாட்டுக்கும் இடையேயான உறவுகளை அதிகரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை முத்தாகி சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 10 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் அடுத்த பத்து ஆண்டுகளில் அமெரிக்காவில் சுமார் 10 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது என பெர்னி சாண்டர்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தானியங்கிமயமாக்கல் மூலம் ஏற்கனவே உள்ள செவிலியர்களில் 40, டிரக் ஓட்டுநர்களில் 47, கணக்காளர்களில் 64, கல்வி கற்பித்தல் உதவியாளர்களில் 65, உணவக ஊழியர்களில் 89 சதவீதத்தி னரின் வேலை பறிபோகலாம் என கூறியுள்ளார்.
இணைய சேவைக்கு அதிகம் வசூலிக்கும் நாடுகளின் பட்டியல்
இணைய சேவைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் முதல் இடம் பிடித்துள்ளது. அந்நாட்டில் ஒரு எம்பிபிஎஸ் இணைய பயன்பாட்டிற்கு 382.75 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதேபோல ஒரு எம்பிபிஎஸ் பயன்பாட்டிற்கு 229.12 ரூபாய் வசூலித்து கானா இரண்டாம் இடத்திலும், 183.83 ரூபாய் வசூலிப்பதன் மூலம் சுவிட்சர்லாந்து மூன்றாம் இடத்திலும் உள்ளன. இந்தியாவில் ஒரு எம்பிபிஎஸ் பயன்பாட்டிற்கான கட்டணம் 7.10 ரூபாய் வசூலிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.