அமெரிக்காவின் எஃப்-35 விமானத்தை தாக்கிய ஈரான்
டெஹ்ரான், மார்ச் 20 - அமெரிக்க ராணுவ வரலாற்றில் இதுவரை யாரும் சாதிக்காத ஒன்றை ஈரான் சாதித்துள்ளது. உலகின் மிகவும் நவீனமான போர் விமானமாகக் கருதப்படும் எஃப்-35 லைட்னிங் II விமானத்தை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) ஏவுகணை மூலம் தாக்கியுள்ளது. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இதை “வான்வெளி ஆதிக்கத்தின் முதுகெலும்பு” என்று கருதுகின்றன. நடந்தது என்ன? இரவு 2:50 மணி அளவில் ஈரான் வான்வெளி யில் பரந்த அமெரிக்க ராணுவத்தின் எஃப்-35 விமானத்தை ஈரான் தாக்கியதாகவும் “விமானம் கடுமையாக சேதமடைந்துள்ளது, அது கீழே விழுந்திருக்கும் சாத்தியம் அதிகம்” என்றும் அறிவித்தது. இச்சூழலில் அமெரிக்க ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் கேப்டன் டிம் ஹாக்கின்ஸ், எஃப்-35 விமானம் அவசரமாக மேற்கு ஆசியா வில் தரையிறக்கப்பட்டது எனவும் விமானி பாது காப்பாக இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். அந்த விமானம் முழுமையாக அழியவில்லை என்றாலும், அந்த விமானம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. எஃப்-35 முக்கியம் என்ன? உலகின் மிகப்பெரிய ஆயுத உற்பத்தி நிறுவன மான லாக்கீட் மார்ட்டின் நிறுவனம் தான் இந்த எஃப்-35 லைட்னிங் II என்ற ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை உருவாக்கியது. இந்த ஒரு விமானத்தின் விலை ரூ.800 கோடிக்கும் (100 மில்லியன் டாலருக்கும்) அதிகம். இந்த விமானம் சாதாரண ரேடாரில் தெரியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரேடார் அலைகளை உறிஞ்சும் சிறப்பு பொருள் மற்றும் தனித்துவமான வடிவமைப்பு காரணமாக சக்தி வாய்ந்த ரேடாரில் சிக்காது. அதிக வான்வெளி கண்காணிப்பு அமைப்புகள் இருந்தால் கூட அதனால் கண்டறிய முடியாத வகையில் பயணித்து தாக்கும் திறன் இதற்கு உண்டு. எதிரி ரேடாரை இயங்காமல் செய்யும் மின்னணு திறனும் உண்டு. இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகவும் விலையுயர்ந்த மிகச்சிறப்பான போர் விமானம் இது தான் என அமெரிக்காவும் அதன் அடிபொடிகளும் கூவி வரும் நிலையில்தான் ஈரான் அந்த விமானத்தை வீழ்த்தியுள்ளது. இந்தத் தாக்குதல் அமெரிக்க ராணுவம், அதன் ராணுவ கூட்டாளிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது விமானத்தின் மீதான தாக்குதலாக மட்டும் அல்ல மேற்கத்திய நாடுகளின் போர் திறன் மீதான நேரடி தாக்குதல். இத்தாக்குதலுக்கு பின்னால் சீனா, ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவிகள் இருக்கலாம் என ராணுவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
