பியாங்யாங், ஜூன் 27- கொரியாவில் ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சியால் போர் தொடங்கியதன் 73 ஆண்டுகள் நிறைவை அனுசரிக்கும் வகையில் வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் பெருந்திரள் பேரணிகள் நடந்துள்ளன. தலைநகர் பியாங்யாங்கில் நடந்த பல பேரணிகளில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பங்கேற்றனர். பேரணிகளின் நிறைவில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் கொரிய ஆளும்கட்சியின் தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர். பங்கேற்றவர்களின் கைகளில், “மறக்க வேண்டாம், எங்கள் குண்டுகள் பாயும் தூரத்தில்தான் உள்ளீர்கள்”, “அமைதியை அழிப்பவர்கள்தான் ஏகாதிபத்திய அமெரிக்கா” என்று எழுதப்பட்ட பதாகைகள் ஏந்தப்பட்டிருந்தன. சுமார் 20 லட்சம் மக்களின் உயிர்கள் தியாகம் செய்யப்பட்டு, வடகொரியாவின் இறையாண்மை பாதுகாக்கப்பட்டது. மூன்று ஆண்டுகள் நடந்த போரினால் பெரும் அழிவு ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு முன்னேற்றப்பாதையில் வட கொரியா சென்று கொண்டிருக்கிறது என்று கண்டனக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசினர். பேரணிகளிலும், கூட்டத்திலும் பங்கேற்றவர்கள் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது, ராணுவமயமாக்கல் குறைப்பு என்று பெரிய அளவில் பேசப்பட்டது. 2019 ஆம் ஆண்டில் இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேசினார்கள். அதன்பிறகு, திடீர் தடைகள் வட கொரியா மீது விதிக்கப்பட்டதால், பேச்சுவார்த்தைகள் கைவிடப்பட்டன. தென்கொரியாவோடு இணைந்து தொடர் போர்ப்பயிற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.