world

img

இந்தியா - ரஷ்யா உச்சி மாநாடு : புடினுடன் பிரதமர் மோடி சந்திப்பு

மாஸ்கோ,ஜூலை 9- இந்தியா - ரஷ்யா இரண்டு நாள்  உச்சி மாநாடு ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது. உக்ரைன் -ரஷ்யா போர் துவங்கியதால் இரண்டு ஆண்டுகள் நடைபெறாத இம்மாநாடு தற்போது நடத்தப்பட்டுள்ளது.

இதில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றனர். இம்மாநாட்டில் இருநாடுகளுக்கும் இடையேயான சர்வதேச ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது; மின்சாரம், எரிசக்தி, பாதுகாப்பு சுற்றுலா உள்ளிட்டவை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் இருந்து ரஷ்யாவிற்கு புதிய பொருளாதார வழித்தடம் உருவாக்குவது குறித்தும் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு  முதல் வர்த்தக வழித்தட ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அந்த வழித்தடம் மும்பையில் இருந்து ரஷ்யாவின் 5 நகரங்களை இணைக்கிறது.தற்போது அதன் தொடர்ச்சியாக  சென்னையில் இருந்து  விளாடிவோஸ்டாக் வரை கிழக்கு கடல் சார் வழித்தடத்தை உரு வாக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனுடன் யெகாடெரின்பர்க் மற்றும் கசான் ஆகிய இரு நகரங்களில் புதிய துணைத் தூதரகங்களை திறக்க இந்தியா திட்டமிட்டுள்ளது குறித்தும் தெரிவித்துள்ளனர். மேலும் உக்ரைன் - ரஷ்யா போர் முனையில் ராணுவ உதவியாளர்கள் என்ற பெயரில் கட்டாயமான முறையில் பணியாற்ற வைக்கப்பட்டுள்ள  அப்பாவி இந்தியர்களை மீட்டு இந்தியாவிற்கு அனுப்பிவைப்பது குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்த உச்சி மாநாட்டிற்குப் பிறகு இந்திய பிரதமர் மோடி ஆஸ்திரியா செல்வது குறிப்பிடத்தக்கது.