world

img

காஸா மீது இஸ்ரேல் குண்டு மழை- அதிகரிக்கும் உயிரிழப்புகள்

பாலஸ்தீனத்தின், காசா பகுதி முழுவதையும் இஸ்ரேல் படையினர் குண்டுகளை வீசி தீவிரமாகத் தாக்கி வருவதால், காசா பகுதியில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது.

இஸ்ரேல் படையினர் வீசும் குண்டுகளால், பல வீடுகள் தரைமட்டமாகி, அதற்குள் இருந்த பலர் உயிருக்கு போராடிய காணொளி காட்சி வெளியாகி நெஞ்சை உலுக்கியது.

ஏற்கனவே, வான்வழித் தாக்குதலால், காசாவில் ஏராளமான இன்னுயிர்கள் பலியாகியிருக்கும் நிலையில், விரைவில்  தரைவழித் தாக்குதலை படுதீவிரமாக்க இஸ்ரேல் படை தயாராகி வருகிறது. எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் தொடர் தாக்குதல்களால், காசா பகுதிகளில் உள்ள பல மருத்துவமனைகள் செயலிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹமாஸ் படை அரசின் சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 5,791 பாலஸ்தீனர்கள் பலியாகியிருப்பதாகவும், நேற்று ஒரே நாளில் 704 பேர் பலியானதாகவும், 16,297 பேர் காயம்டைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் படையினரின் தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரித்திருப்பதோடு, குழந்தைகளின் எண்ணிக்கையும் கடுமையாக அதிகரித்திருப்பதாக அஞ்சப்படுகிறது.

கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்புப் படையினர் போராடி மீட்டு வருகின்றனர்.உயிரற்ற குழந்தைகளின் உடல்களை துணிகளால் சுற்றி அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் காட்சி காண்போரை கண்கலங்க செய்கிறது.