world

img

"வாருங்கள், இன்னும் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கலாம்" - சர்வதேச சமுகத்திற்கு ஜி ஜின்பிங் அழைப்பு

பெய்ஜிங், அக்.17- உலகம் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் இணைந்து எதிர்கொள்ளலாம் என்று மக்கள் சீனத்தின் ஜனாதிபதியும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டில் வேலையறிக்கையை முன்வைத்துப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அப்போது பேசிய அவர், "எந்தவித மேலாதிக்கத்தையும் சீனா எதிர்பார்க்காது. நாட்டை விரிவுபடுத்தும் எந்தவித நடவடிக்கைகளிலும் சீனா இறங்காது. அதேவேளையில், ஒற்றை அதிகாரத்தை உருவாக்கும் முயற்சியை நாங்கள் கடுமையான எதிர்ப்போம். குறிப்பிட்ட நாடுகளைக் குறிவைத்து குழுக்களை உருவாக்குவதையும் ஏற்றுக் கொள்ள இயலாது" என்றார்.
ஐக்கிய நாடுகள் சபையை மையப்படுத்தும் சர்வதேச அமைப்பைப் பாதுகாப்பதில் சீனா உறுதியாக இருக்கும் என்று கூறிய அவர், அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய குவாத் மற்றும் ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இணைந்து உருவாக்கிய அவ்கஸ் ஆகிய குழுக்கள் சீனாவைக் குறிவைத்தே உருவாக்கப்பட்டன என்று சுட்டிக்காட்டினார். 
சர்வதேசச் சட்டங்களையும், ஐக்கிய நாடுகள் சாசனத்தின் அடிப்படையிலான அணுகுமுறைகளையும் சீனா ஆதரிக்கும். அதே வேளையில் இவற்றைப் பாதுகாப்பதிலும் உறுதியாக இருக்கும் என்றும் தனது அறிக்கையில் ஜி ஜின்பிங் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில், "சமத்துவம், வெளிப்படைத்தன்மை, ஒத்துழைப்பு மற்றும் ஒன்றிணைந்த நலன்கள் ஆகியவற்றின் அடிப்படையிலான புதிய சர்வதேச உறவுகளை சீனா பேண விரும்புகிறது. இந்த உலகத்துக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் பெரும் பலன்களைத் தரும் வெளிப்படையான உலகப் பொருளாதாரத்தை அமைப்போம். அதற்காகத் தனது பங்கைச் செலுத்த சீனா தயாராக இருக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.
அறிக்கையை முன்வைத்துப் பேசுகையில், "சரியான வழியில் பொருளாதார உலகமயமாக்கலை ஏற்படுத்துவதில் சீனா பக்கபலமாக இருக்கிறது. மேம்பாட்டுக்கான சர்வதேச சூழலை உருவாக்குவதில் மற்ற நாடுகளுடன் கைகோர்க்க சீனா உறுதியுடன் உள்ளது. சர்வதேச அரசு அமைப்பை சீர்திருத்துவதிலும், மேம்படுத்துவதிலும் தீவிரமான பங்கை சீனா ஆற்றுகிறது" என்று ஜி ஜின்பிங் குறிப்பிட்டார்.

இணைந்து செயலாற்றலாம்
உலக அளவில் பல்வேறு சவால்கள் எழுந்துள்ளதை அங்கீகரித்துப் பேசிய ஜி ஜின்பிங், "அனைத்து நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அமைதி, மேம்பாடு, நியாயம், நீதி, ஜனநாயகம் மற்றும் விடுதலை ஆகிய மனிதகுலத்தின் மதிப்பீடுகளை மதித்து நடக்க வேண்டும். பரஸ்பர புரிதலை ஏற்படுத்தி அனைத்து மக்களுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்த வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.
அனைத்து வகையான உலக சவால்களையும் எதிர்கொள்ள நாம் அனைவரும் ஒன்று சேரலாம் என்று அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்த அவர், "உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து மக்களுடனும் கைகோர்த்து இயங்க சீன மக்கள் தயாராக இருக்கிறார்கள். இதன் மூலம் இன்னும் ஒளிமயமான எதிர்காலத்தை மனித குலத்திற்கு நம்மால் உருவாக்க முடியும்" என்று வலியுறுத்தியுள்ளார்.