world

ஒரே குரலில் பேசுவோம்! ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஜாம்பியா அழைப்பு

லுசாகா, செப்.17- ஐக்கிய நாடுகள் சபையின் தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்த 27வது மாநாட்டில் ஆப்பிரிக்க மற்றும் குறைந்த வளர்ச்சி அடைந்த நாடுகள் அனைத்தும் ஒரே குரலில் பேச வேண்டும் என்று ஜாம்பியா வலி யுறுத்தியுள்ளது. தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்துத் தொடர்ந்து உலக நாடுகள் மத்தியில் விவாதம் நடைபெற்று வருகிறது. பணக்கார நாடுகள்தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டாலும், அந்த நாடுகள் இதுவரையில் தீவிரமான நடவடிக்கை களை எடுக்கவில்லை. இந்நிலையில் அடுத்த தட்ப வெப்ப நிலை குறித்த மாநாடு நவம்பர் மாதத்தில் எகிப்தில் நடைபெறப் போகிறது. இந்த மாநாட்டை ஒன்று சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும் என்று ஏழை நாடுகளுக்கு ஜாம்பியா அழைப்பு விடுத்திருக்கிறது. ஆப்பிரிக்கப் பேச்சு வார்த்தைப் பிரதிநிதிகளின் தலைமைப் பொறுப்பில் ஜாம்பியா இருக்கிறது.

அந்தப் பொறுப்பில் இருந்து தான் ஜாம்பியா, ஏழை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது குறித்துக் கருத்து தெரிவித்த ஜாம்பியாவின் பசுமைப் பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் காலின்ஸ் ஜோவு, “தட்ப வெப்ப நிலை குறித்த ஐ.நா.சபையின் 27ஆவது மாநாட்டில் தங்கள் நலன்கள் குறித்து ஏழை நாடுகள் ஒரே குரலில் பேசும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “2030 ஆம் ஆண்டுக்குள் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேற்றத்தில் 45 விழுக்காட்டைக் குறைப்போம் என்கிற பணக்கார நாடுகளின் உறுதிமொழி நடைமுறைக்கு வர வேண்டும்” என்றார். நவம்பர் 6 முதல் நவம்பர் 18 ஆம் தேதி வரையில் ஐ.நா. சபை ஏற்பாடு செய்துள்ள தட்பவெப்ப நிலை குறித்த மாநாடு நடக்கவிருக்கிறது. நவம்பர் 2021இல் நடக்கவிருந்த இந்த மாநாடு கொரோ னா பெருந்தொற்று காரணமாக தள்ளிப் போடப் பட்டிருந்தது.

;