மீண்டும் 4000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வால்ட் டிஸ்னி முடிவு செய்துள்ளது.
உலகின் புகழ்மிக்க நிறுவனங்களில் ஒன்றான வால்ட் டிஸ்னி நிறுவனம், கொரோனா நோய் தொற்று காரணத்தினால் அந்நிறுவனத்தின் பார்க்குகள், ஹோட்டல்கள் மற்றும் கப்பல் வியாபாரங்களை எல்லாம் மூடி இருப்பதால், இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 1 பில்லியன் டாலர் நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறது. இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில், சுமார் 3.5 பில்லியன் டாலர் நஷ்டத்தைச் சந்தித்து இருக்கிறது. இந்த தொடர் நஷ்டத்தின் காரணமாக 28,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகக் கடந்த செப்டம்பர் மாதம் அந்நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னாள் இந்த அறிவிப்பைவிட 4000 ஊழியர்களை கூடுதலாக (மொத்தம் 32,000) ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்தது. இதில் பெரும் பகுதி தீம் பார்க் வர்த்தகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் என டிஸ்னி நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது மீண்டும் 4,000 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக வால்ட் டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.
முன்னர் அறிவித்த 32,000 ஊழியர்கள் பணிநீக்கத்தை 2021ஆம் ஆண்டின் முதல் பாதியில் செய்ய உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
திட்டமிடப்படாத பணிநீக்கங்களை முன்பிருந்தே செய்துவந்த வால்ட் டிஸ்னி நிறுவனம் தற்போது அதை விட கூடுதலான பணிநீக்கங்களை செய்து வருகிறது. ஏற்கனவே கொரோனா நோய் தொற்றால் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள ஊழியர்கள் இப்போது, டிஸ்னி நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் கடும் அச்சத்தில் உள்ளனர்.