கீவ், ஜூன் 15- ரஷ்யாவின் பிடியில் இருக்கும் ஸப்ரோஸ்சியா, பாக்முத் ஆகிய பகுதிகளில் எதிர்த்தாக்குதலை நடத்த உக்ரைன் முனைந்திருப்பதால் மோதல் தீவிரமடைந் துள்ளது. உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவ்வி ரிஹ் மீதான ரஷ்யா வின் தாக்குதல்கள் மிகக் கடுமையாக இருந்துள் ளது. ரஷ்யா அனுப்பிய ஏவுகணைகள் தாக்கி ஒரே இரவில் 11 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பெரும் அளவில் சுரங்கப்பணிகள் மற்றும் இயற்கை வளங்கள் உள்ள ஊரான கிரிவ்வி ரிஹ் குறிவைத்துத் தாக்கப்பட்டிருக்கிறது. இங்கு ஏராளமான ஆயுதங்கள் குவித்து வைத்திருப்ப தால், உக்ரைன் படைகளுக்கு அது கிடைக்காமல் போக வேண்டும் என்ற நோக்கத்துடன் தீவிரமாகத் தாக்கியிருக்கிறார்கள். உக்ரைனின் எதிர்த்தாக்குதல் பற்றி மேற்கத்திய ஊடகங்கள் பெரும் அளவில் செய்தி களை வெளியிட்டு வருகின்றன. அந்தத் தாக்கு தல்களைப் பெரிய அளவில்தான் நடத்துகிறார்கள் என்று ரஷ்ய செய்தியாளர்கள் மத்தியில் உரை யாற்றிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால், உக்ரை னுக்கு ஏற்பட்டுள்ள சேதமும் பெரிய அளவில் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாஸ்கோ மீது தாக்குதல் நடத்த மீண்டும் முயல மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். உக்ரைனுக்குப் பல ஐரோப்பிய நாடு களும், அமெரிக்காவும் ஏராளமான அளவில் ஆயுதங்களை விநியோகித்து வருகின்றன. தான் வழங்கும் ஆயுதங்களை உள்நாட்டிற்குள்தான் பயன்படுத்த வேண்டும் என்று அமெரிக்காவும், சில ஐரோப்பிய நாடுகளும் நிபந்தனை போட்டுள்ளன.
ஆனால், பிரிட்டன் போன்ற நாடுகள் அத்தகைய நிபந்தனை எதையும் விதிக்கவில்லை. மாஸ்கோ மீதான தாக்குதல் களில் பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானங்கள் இத்தகைய நாடுகளில் இருந்து பெறப்பட்டவை என்று கூறப்படுகிறது. உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள ஒடெஸ்ஸா மற்றும் கிழக்குப் பகுதியில் உள்ள டோனெட்ஸ்க் ஆகிய பகுதிகள் மீதான தாக்கு தல்களில் ஏராளமான வீடுகள் நொறுங்கின. குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டார்கள். பலர் காயமடைந்திருக்கிறார்கள். கடந்த 15 மாதங்களாக இந்த சண்டை நடந்து கொண்டி ருக்கிறது. ஆனால் இதுவரையில் இல்லாத அள விற்கு வான்வழித் தாக்குதலை ரஷ்யா முடுக்கி விட்டிருக்கிறது என்று உக்ரைன் ராணுவச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. பல்வேறு கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ள நிலையில் இடிபாடுகளுக்கிடையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடக்கிறது. பேச்சுவார்த்தை எதையும் தொடங்கு வதை அமெரிக்கா ஆதரிக்கவில்லை. ஆயு தங்கள் விற்பனையை அதிகரிப்பது மற்றும் தனது தலைமையிலான ராணுவக்கூட்டணி நேட்டோவை விரிவுபடுத்துவது ஆகியவற்றை மட்டுமே இலக்காக அமெரிக்கா வைத்துள்ளது.இதனால் சீனா முன்வைத்த சமாதான அம்சங்கள் குறித்து உக்ரைன் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் அமெரிக்கா பார்த்துக் கொண்டது.
நேட்டோ விரிவாக்கம்
அமெரிக்கா தலைமையிலான ராணுவக் கூட்டணி நேட்டோவின் உயர் அதிகாரிகள், ஸ்வீடன், பின்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்திருக் கிறார்கள். நேட்டோவில் இணைய ஸ்வீடன் விருப்பம் தெரிவித்திருப்பது மற்றும் அந்த விருப்பத்திற்கு எதிராக துருக்கி நிலைபாடு எடுத்திருப்பது ஆகியவை பற்றி அவர்கள் விவாதித்திருக்கிறார்கள். நேட்டோவில் உள்ள ஒவ்வொரு நாடும், புதிதாக எந்த நாடும் சேரு வதற்கு ஒப்புதல் அளித்தாக வேண்டும் என்ற நிபந்தனை இருக்கிறது. ஸ்வீடன் உள்ளே வரு வதற்கு துருக்கி இன்னும் ஒப்புதல் தரவில்லை. ஸ்வீடனை உள்ளே அனுமதிப்பது குறித்துத் தாங்கள் முடிவு எதுவும் எடுக்கவில்லை என்றும், வரும் ஜூலை மாதத்திற்குள் எங்களால் முடிவு எடுக்க முடியாது என்றும் துருக்கியின் ஜனாதிபதி ரிசெப் தய்யிப் எர்டோகன் கூறியுள்ளார். ஜூலை மாதத்தில் நேட்டோ உச்சி மாநாடு நடைபெறவிருப்பதால், அதற்குள் ஸ்வீடனின் விருப்பத்திற்கு துருக்கி ஒப்புதல் தர வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஆனால், பாதுகாப்பு தொடர்பான தங்கள் கவலைகளைப் போக்க ஸ்வீடன் இதுவரையில் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று துருக்கி சுட்டிக்காட்டியிருக்கிறது.