world

img

மேரி மெக்லியேட் பெத்யூன் கல்வியாளர், சமூக உரிமைப் போராளி!

  வெள்ளை நிறவெறியின் முழங் கால்கள் இன்னமும் கருப்பின  மக்களின் கழுத்தை நெரிக்கும் நிகழ்காலம் இது. ஆனால் எழுபதாண்டுகளுக்கு முன்னரே  அமெரிக்க வானின் விடிவெள்ளியாய் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் கல்வித்தாயாய், சமூக உரிமைப் போராளியாய் விளங்கியவர் மேரி மெக்லியேட் பெத்யூன்.  ஆபிரகாம் லிங்கனின் கருப்பின அடிமை  விடுதலைச் சட்டம் நடைமுறைக்கு வந்து  அமெரிக்கா முழுவதும் நிறவெறி மேகங்கள் மெல்ல விலகத் தொடங்கியிருந்த காலம். வட அமெரிக்க அட்லாண்டிக் கடற்கரை யோரத்தின் தெற்கு கரோலினா மாகாணம் மேயெஸ்விலி கிராமத்தின் ஆப்பிரிக்க அமெ ரிக்க அடிமைப் பண்ணையில் வசித்த சாமு வேல், பாட்ஸி இணையருக்கு பதினைந்தாவது பிள்ளையாக 1875 ஜூலை 10 ஆம் நாள் மேரி  மெக்லியேட் பெத்யூன் பிறந்தார். பதினோரா வது வயது வரை எழுத படிக்கத் தெரியாமல் தனது பெற்றோர்களின் வயலில் பருத்தி எடுத்துக் கொண்டிருந்த மேரி மெக்லியேட் பெத்யூன், எல்மா வில்சன் நடத்திய தேவாலயப்  பள்ளியில் சேர்ந்து ஐந்து வருட ஆரம்பக் கல்வியை முடித்தார்.

 மேரி கிறிஸ்மன் என்ற ஆசிரியரின் உதவி யால் மேற்படிப்புக்காக 1887இல் ஸ்காட்டியா சென்ற மேரி மெக்லியேட் பெத்யூன் ஆசிரியப் பயிற்சி, செவிலியர் பயிற்சி முடித்து 1894இல் பட்டம் பெற்று, மேயெஸ்விலி திரும்பி எல்மா வில்சன் நடத்திய தேவாலயப் பள்ளியிலேயே ஆசிரியராக பணியில் சேர்ந்தார். சக ஆசிரிய ரும் சமூக சேவகருமான ஆல்பர்ட்டை திரு மணம் செய்துகொண்டு ஆல்பர்ட் பெத்யூன் என்ற குழந்தையையும் பெற்றெடுத்தார். பத்து வருட ஆசிரியப் பணிக்குப் பிறகு கிழக்கு கடற் கரையோர புளோரிடா மாகாணத்திற்கு குடிபெயர்ந்தார்.  புளோரிடாவின் டாய்டோனாவில் 1904ஆம் ஆண்டு அமெரிக்க வாழ் ஆப்பிரிக்க பெண்களுக்காக படிப்புடன் தொழிற்பயிற்சி யையும் கற்றுத்தரும் தனது கனவு திட்டமான டாய்டோனா தொழிற் பயிற்சி பள்ளியை தொடங்கினார். ஐந்து மாணவர்களோடு தொடங்கிய பள்ளி இரண்டே வருடத்தில் இரு நூற்றைம்பது மாணவர்களை கொண்ட கல்வி  நிறுவனமாகியது. கடின உழைப்பாலும் பல்வேறு தனிமனித, அமைப்புகளின் உதவி யாலும் 600 மாணவர்களுடன் குக்மேன் கல்வி  நிறுவனத்தோடு இணைந்து, 1929 ஆம் ஆண்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாண வர்களை கொண்ட பெத்யூன் குக்மேன் கல்லூரி யாக வளர்ச்சியடைந்து சிறந்த மருத்துவமனை யாகவும் திகழ்ந்தது. இந்தக் கல்வி நிறுவனங்க ளின் தலைவராகவும், முதல்வராகவும் பொறுப்பேற்ற மேரி மெக்லியேட் பெத்யூன்  கருப்பின மக்களின்  கல்வி அடையாளமான தோடு கலங்கரை விளக்கமானார்.

 கு க்ளக்ஸ் க்ளான் (Ku Klux Klan- KKK))  என்ற வெள்ளை நிறவெறி அமைப்பின் பெருந் தொந்தரவுகளையும் நெருக்கடிகளை யும் கடந்து, மிகச் சிறந்த கல்வி நிறுவனமாக வளர்ந்த பெத்யூன் குக்மேன் கல்லூரி அமெரிக்க அரசின் பாராட்டினைப் பெற்றது. கருப்பினத்தவருக்கு மட்டுமல்லாது பொதுச் சமூகத்தின் விடுதலை குறித்து எழுதியும், செயல்பட்டும் வந்த மேரி மெக்லியேட் பெத்யூன் பல்வேறு பெண்கள் அமைப்பின் உறுப்பினராகவும் இருந்தார். பெண்கள் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வாக்காளர் பதிவு இயக்கங்களை நடத்தியதோடு அமெரிக்க குடியரசு கட்சிக்கு ஆதரவான நிலையிலிருந்தார்.  முதல் உலகப் போருக்கு பிந்தைய காலத்தில் தனது கல்லூரியின் வழியாக செஞ்சிலுவை சங்கங்கள் முன்னெடுத்திருந்த உதவிகளில் பெரும் பங்காற்றினார். தொடர்ந்த  அவரது சமூகப் பணிகளால் 1924 ஆம் ஆண்டு  புளோரிடாவில் வண்ண மயமான மகளிர் கழ கங்களின் (National Association of  Colored Women’s Clubs) தேசிய சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்க பட்டார். இவரது சமூகப் பணிகளை அறிந்த அமெரிக்க ஜனாதி பதி கால்வின் கூலிட்ஜ் குழந்தைகள் நலன் தொடர்பான மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். மேலும் மற்றொரு ஜனாதிபதியான ஹெர்வர்ட் ஹீப்பரின் தலைமையிலான குழந்தைகள்நல ஆரோக்கியக் குழுவில் உறுப்பினராக இடம்பெற்றார்.  

பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் ஜனாதிபதி யாகப் பதிவியேற்ற 1935 ஆம் ஆண்டு மேரி மெக்லியேட் பெத்யூனை அமெரிக்க அரசின் சிறுபான்மையினநல சிறப்பு ஆலோசகராக நியமித்தார். அதே ஆண்டில் மேரி மெக்லியேட் கருப்பின மக்களின் முன்னேற்றத்திற்கு பயன்தரும் வகையில் நீக்ரோ பெண்கள் தேசியக் கவுன்சிலை (National Council of Negro Women) உருவாக்கி அதன்  தலைவரானார். இக்காலத்தில் கருப்பினத்த வரை விசாரணையின்றி கொல்கிற (Lynching) கொடுமைக்கு எதிராக மேரி மெக்லியேட் பெத்யூன் பல்வெறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். மேலும் 1936 ஆம் ஆண்டு  ரூஸ்வெல்ட் தனது தேசிய இளைஞர் நிர் வாகத்தின் (National Youth Administration) நீக்ரோ விவகாரங்களின் இயக்குநராக மேரி மெக்லியேட் பெத்யூனை நியமித்தார். அமெரிக்க அரசின் இத்தகைய மிக உயர்ந்த பதவியைப் பெற்ற முதல் நீக்ரோ பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீக்ரோ இளைஞர்களுக்கு கல்வி, நிதியுதவி ஆகிய வற்றில் பெரும் பங்காற்றியதோடு கருப்பின மக்களின் பிரச்சனைகளை தீர்க்கிற, விவாதிக்கிற இக்குழு கருப்பு அமைச்சரவை (Black Cabinet )  என்று வர்ணிக்கப்பட்டது.  மேரி மெக்லியேட் பெத்யூனின் முப்பத்தைந்து ஆண்டுகால கல்வி மற்றும் சமூகப் பணிகளை பாராட்டி 1940 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 நாள் பெத்யூன் குக்மேன் கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்டின் மனைவி எலியனார் ரூஸ்வெல்ட் கலந்து கொண்டார்.

அதன்பிறகு எலியனார் ரூஸ் வெல்ட் ‘லட்சியம் மிக்க இப்பள்ளி மக்களுக்கு  சேவைசெய்கிற தலைவர்களை உருவாக்கு  கிறது’ என்று அமெரிக்கப் பத்திரிகை யொன்றில் எழுதியிருந்தார்.     அமெரிக்காவின் மகளிர் இராணுவப் படைகளை உருவாக்கும் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக  இருந்த மேரி மெக்லி யேட் 1942 ஆம் ஆண்டுகளில் இராணு வத்திற்குள் பெண்கள் அமைப்பை உருவாக்கி  இரண்டாம் உலகப் போரில் பங்கேற்கச் செய்தார். அமெரிக்க அரசின் மிக உயர்ந்த அரசுப் பதவியிலிருந்த போதிலும் அமெரிக்கப் பத்திரிகைகளான பிட்ஸ்பர்க் கூரியர், சிகாகோ டிஃபெண்டர், நேஷனல் நோட்ஸ், ஆப்ராமெரிக்கன் வுமன் ஆகியவற்றில் நிறம், இனம் என்ற பெயரில் மனிதர்களுக்குள் பாவிக்கப்படும் வேற்றுமைகள் குறித்து தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தார்.  பொருளியல் அறிஞர் வில்லியம் ஜே.  டிரண்ட், கல்வியாளர் பிரெட்ரிக் டி பேட்டர்சன்  ஆகியோரது தலைமையில் ஒருங்கிணைந்த நீக்ரோ கல்லூரி நிதியினை (United Negro College Fund) உருவாக்கி ஐம்பது மில்லி யனுக்கும் மேற்பட்ட தொகையினை முப்பத்தி யேழு கல்லூரி, பல்கலைகழகங்களில் கற்கும் மாணவர்களின் கல்வி, வேலைவாய்ப்புகளில் பயனடையச் செய்தார்.  

  அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன், மேரி  மெக்லியேட்டை 1945 ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்தாபக மாநாட்டில் கலந்துக்கொள்ளச் செய்தார். அம்மாநாட்டில் கலந்துக்கொண்ட ஒரே ஆப்பிரிக்க அமெ ரிக்க பெண்மணி இவரேயாவார். ஐந்து அமெ ரிக்க ஜனாதிபதிகளுக்கு அரசியல் ஆலோசக ராக உயர் பதவியிலிருந்த மேரி மெக்லியேட் பெத்யூன் பணிநிறைவு பெற்ற பிறகு புளோ ரிடாவின் டயடோனா கடற்கரையில் உள்ள தனது வீட்டில் ஓய்வுக் காலங்களை கழித்து 1955 மே 18 இல் காலமானார். அவரது மறைவு  குறித்து, அமெரிக்க இனங்களுக்கிடையே நல்லெண்ணத்தின் வளர்ச்சியில் மிகவும் சக்திவாய்ந்த காரணிகளில் ஒன்று என்று  நியூயார்க் டைம்ஸ் எழுதியது. அமெரிக்காவின்  பிரசித்திப்பெற்ற எபோனி மாத இதழ் அமெரிக்க கருப்பின வரலாற்றில் புகழ்வாய்ந்த ஐம்பது  நபர்களில் பெத்யூனும் ஒருவரென புகழாரம் சூட்டியது. அவர் இறுதியாக வாழ்ந்த வீட்டினை  அமெரிக்க அரசு நினைவு இல்லமாக அறிவித்த தோடு வாஷிங்டன் டிசியில் அவருக்கு சிலை நிறுவியது. பல்வேறு கல்வி நிலையங்களுக்கு அவரது பெயர் சூட்டிய அரசு, 1985 ஆம் ஆண்டு அவரது நினைவாக அஞ்சல் தலையினை வெளியிட்டது.  நடப்புக் கல்வியாண்டிலும் மாணவர் சேர்க்கைக்கென நாற்பத்தி மூன்று பட்டப் படிப்புகளுடன் அறிவிப்புகளை வெளியிட்டி ருக்கும் பெத்யூன் குக்மேன் பல்கலைக்கழகம், “ஆப்பிரிக்காவின் டிரம்ஸ் இன்னும் என் இத யத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஒரு  நீக்ரோ பையனோ பெண்ணோ இருக்கும் வரையிலும் அவர்கள் என்னை ஓய்வெடுக்க  விடமாட்டார்கள்” என்ற மேரி மெக்லியேட் பெத்யூனின் வார்த்தைகளுக்கு உயிர்சாட்சி யாக விளங்குகிறது. 

-ப.செல்வகுமார்

;