world

img

எங்கள் மீது சுமையை ஏற்ற வேண்டாம்

கொழும்பு, மார்ச் 16- சர்வதேச நிதியத்திடம்(ஐ.எம்.எப்) இருந்து வாங்கும் கடன்களுக்காக சுமையை அப்பாவி மக்கள் தலைமீது ஏற்ற வேண்டாம் என  இலங்கை மக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். மார்ச் 15 ஆம் தேதியன்று இலங்கையில் உள்ள பொதுத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடி யைத் தீர்ப்பதற்காக ஐ.எம்.எப். கடன் வாங்கும் தற்போதைய இலங்கை அரசு, அக்கடன் களுக்காக போடப்படும் நிபந்தனைகள் அனைத்திற்கும் தலையாட்டி உள்ளது. உடனடி யாக, மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் மீது கூடுதல் வரிகளைப் போட வேண்டும் என்பதுதான் பிரதானமான நிபந்தனையாகும். கடன் வழங்க அனுமதி தரும் முன்பாகவே விலைகளை எல்லாம் உயர்த்தி விட்டார்கள். குறிப்பாக, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக எகிறியுள்ளன. 290 கோடி அமெரிக்க டாலர் கடனை வழங்க  ஐ.எம்.எப். போட்ட நிபந்தனைகளை அப்படியே நடைமுறைப்படுத்தினால் மக்கள் பெரும் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என்பதால் கடும் அதிருப்தி நிலவுகிறது. விலைவாசி உயர்வுக்கு எதிராக மருத்துவம், கல்வி மற்றும் ரயில் போக்குவரத்து ஆகிய துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் போராடி வருகிறார்கள். அவர்களும் மேலும் பல துறைகளைச் சேர்ந்தவர்களும் இணைந்து நடத்திய ஒருநாள் வேலை நிறுத்தம் எழுச்சியுடன் நடந்துள்ளது. 

மார்ச் 15 அன்று நடக்கவிருந்த பள்ளித்  தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. வெளிநோயாளி களுக்குத் தர வேண்டிய சிகிச்சைகள் பாதிக்கப் பட்டன. சமார் 40 பெரிய தொழிற்சங்கங்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. கொழும்பு துறைமுகத்தில் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ததால் சரக்குகள் அனுப்பப்படவில்லை. வேகத்தைக் குறைப்போம் என்ற முழக்கத்துடன் இரண்டு மணி நேரம் வேலை நிறுத்தம் செய்த விமானத்துறை ஊழியர்களால், விமானங்கள் தாமதமாகக் கிளம்பிச் சென்றன. தங்கள் வேலை நிறுத்தம் குறித்துப் பேசிய  விமானப் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் சங்கத்தின் செயலாளரான ரஜிதா சேன விரத்னே, “இரண்டு மணி நேரம் கழித்து வேலை களைச் செய்வது என்ற எங்கள் நடவடிக்கை யை பரந்த அளவில் ஆலோசனை மேற்கொண்ட  பிறகே செய்தோம். ஆனால் புதிய வரிகளை  அரசு திரும்பப் பெறாவிட்டால் முழு நாள் வேலை நிறுத்தத்திற்கு செல்ல வேண்டியது வரும்” என்று கூறியுள்ளார். மற்ற தொழிற்சங்கங் களும், தங்கள் போராட்டங்கள் தொடரும் என்று கருத்து தெரிவித்துள்ளன.

வேலை நிறுத்தத்தை முறியடிக்க ராணு வத்தை இலங்கை அரசு இறக்கி விட்டுள்ளது. ரயில் நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் பணிகளை ராணுவமே மேற்கொள்ளும் என்று  அறிவித்திருக்கிறார்கள். இருப்பினும் வெறும் 5 விழுக்காடு மட்டுமே தொடர் வண்டிகள் இயங்கின என்று தொழிற்சங்கத் தலைவர்கள் கூறியிருக்கிறார்கள். அரசுத்தரப்பில் பேச்சு வார்த்தைக்கு அழைத்தபோது, தொழிற்சங்கத் தலைவர்கள் மறுக்காமல் கலந்து கொண்டனர். ஆனால், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த எந்தவித உறுதிமொழிகளும் தரப்படவில்லை. இத்தனைக்கும் பொருளாதார நெருக்கடி யைக் காரணம் காட்டி வேலை நிறுத்தங்களுக்கு ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான இலங்கை அரசு தடைகளை விதித்துள்ளது. அந்தத் தடை களைத் தகர்த்தே வெற்றிகரமான வேலை  நிறுத்தம் நடந்திருக்கிறது. நாடு தழுவிய போராட்டங்களும் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் ஏற்கனவே பட்டினி, வேலையின்மை உள்ளிட்ட நெருக்கடி களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விலைவாசி உயர்வு அவர்களை மேலும் துயரத்தில் தள்ளிவிடும் என்று இலங்கையின் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

;