world

img

பாசிசத்திற்கு எதிராக நியூயார்க்கில் கம்யூனிஸ்ட் கூட்டமைப்பு மாநாடு

அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி யின் (சிபியுஎஸ்ஏ) தேசியக்  குழு ஜூன் 24 அன்று நியூயார்க்கில் பாசிஸ்ட் ஆபத்துக்கு எதிராக தேசிய மாநாடு நடத்தியது. வின்ஸ்டன் யூனிட்டி அரங்கில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றவர்களில் பல விதத்தினர் இருந்தனர் என்பது ஒரு சிறப்பு அம்சம்.  இளைஞர்கள், மூத்தவர்கள், கருப்பு, வெள்ளை நிறத்தவர்கள், லத்தீன் அமெரிக்க இனத்தவர்கள், அமெரிக்க ஆதிவாசிகள், ஆசியாவைச் சேர்ந்த வர்கள், தொழிற்சங்க ஊழியர்கள், குடி யுரிமைப் போராட்டங்களுக்குத் தலைமை வகித்தவர்கள், வசிப்பிடம், சுகாதாரச் சூழல், சமாதானம் ஆகிய வற்றுக்காகப் போராடும் அமைப்பு களின் தலைவர்கள் ஆகியோர் இந்த மாநாட்டில் ஆர்வத்துடன் பங்கேற்ற னர். மற்றும் மதநம்பிக்கையாளர்களும், மதநம்பிக்கை இல்லாதவர்களும் இந்த பாசிஸ்ட் எதிர்ப்பு  மாநாட்டில் அணிவகுத்தனர். அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியும், இந்த மாநாட்டில் பங்கேற்ற கட்சி ஊழியர்களும் - அந்த நாட்டில் எதைச் சார்ந்த மக்களாக இருப்பினும் நீதிக் காக அவர்கள் நடத்துகிற போராட்டங் களுடன் முன்னில் நிற்பார்கள் என்ப தற்கான சான்றாகத்தான் வின்ஸ்டன் யூனிட்டி அரங்கமே நிறைந்து வழிந்த பல்வேறு தரப்பினரின் பங்கேற்பு வெளிப் படுத்தியது. கார்ப்பரேட் பெருமுதலாளி களின் சுயநலன்களுக்கு எதிரான போராட்டத்தின் ஒருபகுதியாகத்தான் பல்வேறு பிரிவு மக்கள் நடத்தும் நீதிக்கான பேராட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சி பார்க்கிறது.

வாதிட்டதும் போராடியதும்  கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான்! 

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப  காலத்தில் அமெரிக்காவில் கம்யூ னிஸ்ட் கட்சி நிறுவப்பட்டது. அன்று முதல் நடைபெற்றுவரும் அனைத்துப் போராட்டங்களிலும், இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டு களில் சமாதானத்திற்காக நடைபெற்ற போராட்டங்களிலும், 1930களிலும், 1940-களிலும் நடைபெற்ற பாசிஸத்திற்கு எதிரான போராட்டங்களிலும், இனப் பகைமையை எதிர்த்த  போராட்டங் களிலும், குடியுரிமைக்கான போராட்டங்களிலும், 1950-களிலும், 1960-களிலும், 1970-களிலும் வியட்நாம் மீதான அமெரிக்காவின் யுத்தத் தாக்குதல்களை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களில் எல்லாம் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி தீவிரமாகப் பங்கேற்றது. சமூகநலப் பாதுகாப்பும், வேலையில்லாமை இன்சூரன்ஸும் கேள்விகேட்பாரின்றி இருந்த காலத்தில் அவற்றுக்காக வாதிட்டதும், போராடியதும் அமெரிக்காவில் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான். 1940-களிலும், 1950-களிலும் மக்கார்த்தியிஸ்ட் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு இந்த கம்யூனிஸ்ட் கட்சியை அழித்து ஒழிப்பதற்கு அதிகார  வர்க்கம் முயற்சி செய்தது. கட்சியின் நூற்றுக்கணக்கான தலைவர்களும் ஊழியர்களும் சட்டவிரோதமாகக் கைதுசெய்து சிறையில் அடைக்கப் பட்டனர். ஆனால், இவற்றையெல்லாம் வென்று கம்யூனிஸ்ட் கட்சி தீரமுடன் செயல்பட்டு வருவதன் நல்ல அடை யாளம்தான் நியூயார்க்கில் நடைபெற்ற கம்யூனிஸ்ட கட்சி கூட்டமைப்பு மாநாடு. இன்றும் அமெரிக்காவில் அரசின் கடும் அடக்குமுறை நட வடிக்கைகளை யெல்லாம் சந்தித்தும் கூட கம்யூனிஸ்ட்டுகள் உறுதியாகத் தீர முடன் செயல்படுவது ஆட்சியாளர் களையும் அதிகார வர்க்கத்தையும்  நிச்சயமாக நிம்மதி இழக்கச் செய்யும்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பை “பாசிஸ்ட்”என்றே குடியரசுக் கட்சியில் உள்ள ஒருபகுதி தலைவர்கள்கூட குறிப்பிடுகிறார்கள். அமெரிக்காவில் மீண்டும் இந்த பாசிஸ்ட் அதிகாரத்திற்கு வருவதற்கு முயற்சிக்கும்போது அது அமெரிக்க மக்களுக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே ஓர் அச்சுறுத்தலாக மாறும் என்கிற விழிப்புணர்வுதான் பாசிஸ்ட் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்காக இந்த மாநாட்டை நடத்த கம்யூனிஸ்ட் கட்சியைத் தூண்டிய அம்சம். “மேக் அமெரிக்கா கிரேட் எகைன்”  (MAGA) என்ற முழக்கத்துடன் 2016-இல் அதிகாரத்திற்கு வந்த டிரம்ப் கடைசி யில் தேர்தல்கூட வேண்டாம் என்ற நிலை பாட்டுக்கு வந்ததை உலகம் கண்டது.  தேர்தலில் தோல்வியுற்ற டிரம்ப் பத வியைவிட்டு வெளியேற மறுத்ததை யும், நாடாளுமன்றக் கட்டடத்தையே கைவசப்படுத்த முயன்றதையும் அமெ ரிக்காவும் உலகமும் மறக்கவில்லை.

பாசிசத்திற்கு எதிரான போர்

மீண்டும் அமெரிக்காவை உற்று நோக்குகிற பாசிஸ்ட் அச்சுறுத்தலுக்கு எதிராகப் போரிடுவதே இந்த கம்யூ னிஸ்ட்  கூட்டமைப்பின் இலட்சியம். அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜோஸிம்ஸ் மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசுகையில் இவ்வாறு கூறினார்: “பாசிஸத்தின் ஆபத்து தூரத்தில் இல்லை. புத்த கத்திற்குத்  தடைவிதித்தது அதைத் தான் காட்டுகிறது. குடியரசுக் கட்சி ஆட்சிசெய்கிற மாநிலங்களிலெல்லாம் இந்த ஆபத்து படர்ந்து பற்றுகிறது. அமெரிக்க செனட் சபையிலேயே வெளிப்படையான இனவெறியின் அட்டகாசம் நிகழ்கிறது. அலபாமா வைச் சேர்ந்த குடியரசுக் கட்சியின் செனட் உறுப்பினர் ட்யூபர்வில் என்ப வர் இராணுவத்தில் உள்ள வெள்ளை நிறத்தவர்களின் மேலாதிக்கத்திற்கு ஆதரவான நிலைபாடு எடுத்தது இதற்கு ஓர் உதாரணம் மட்டுமே.” வலதுசாரி தீவிர தேசியவாதமும், வெள்ளைநிற மேலாதிக்கமும் இன்று அமெரிக்காவில் சர்வசாதாரணமாக உள்ளன என்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜோஸிம்ஸ் கூறினார். நல்ல மாற்றத்திற்காக வாதாடுபவர்களை கம்யூனிஸ்ட் சதிகாரர்கள் என்று இவர்கள் அவதூறு செய்கிறார்கள். அமெரிக்காவின் 14 மாநிலங் களில் கருச்சிதைவுத்  தடைச்சட் டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள் ளது. அமெரிக்காவில் 2 கோடியே 20 இலட்சம் வரையான பெண்களின் வாழ்க்கை மீதும், சுதந்திரத்தின் மீதும் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. ஃப்ளோரிடாவில் ‘கே’ என்ற சொல்லை உச்சரிக்கக்கூடத் தடை விதிக்கப் பட்டுள்ளது. வாக்களிப்பதற்கான இந்தப் பிரிவினரின் உரிமைக்குத் தடைவிதிக்கிற 18 மசோதாக்கள் 10 மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்டு சட்டம் ஆகியுள்ளன.

தேர்தலில் விவாதிக்க வேண்டிய முக்கிய விஷயம்

2024-இல் நடைபெறவுள்ள தேர்த லுக்கு ஒன்றரை ஆண்டு மட்டுமே மீதம் உள்ள நிலையில் தேர்தலுக்கு முன்னு ள்ள விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம் என்பது தனிநபர் என்ற நிலை யில் டிரம்ப் என்பதோ, பைடன் என்பதோ அல்ல. முக்கிய அறிஞர்களும் முத லாளித்துவ ஊடகங்களும் கூறுவது போல இளைஞர்களுக்கும் மூத்தவர் களுக்கும் இடையிலான போட்டி அல்ல. மாறாக, மக்களுக்கு வேலை  வாய்ப்பும், குடியிருப்பு வசதியும், சுகாதாரச் சூழலும் உறுதி செய்வதே தேர்தலில் விவாதிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்றும் கம்யூ னிஸ்ட் தலைவர் ஜோஸிம்ஸ் கூறினார்.  அவர் மேலும் கூறுகையில், தேர்தலில் முன்வைக்க வேண்டிய மற்ற விஷயங் கள் கருச்சிதைவு உரிமை, போலீஸ் நடத்துகிற கொலைபாதகங்கள், கைவசம் துப்பாக்கி வத்திருப்பவர்கள் நடத்துகிற தாக்குதல்கள், மாண வர்கள் வாங்கியுள்ள கடனிலிருந்து மீட்சி, சுற்றுச்சூழல் பிரச்சனைகள் ஆகியவையெல்லாம் தேர்தலில் முன்வைக்க வேண்டிய விஷயங்களாக இருக்க வேண்டும் என்றார். அதே சமயம், அரசாங்கம் பின்பற்றுகிற வெளி யுறவுக் கொள்கை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது என்றார்.   தொழிலாளர்களின் குடும்பங்களை  ேம்படுத்த வேண்டுமென்றால், ஒரு லட்சம் கோடி டாலர் வரையான அமெரிக்க இராணுவ பட்ஜெட்டைக் குறைக்க வேண்டும் என்றும், மாண வர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. சீனா வுடனான பனிப்போரை நிறுத்திக் கொள்ள  வேண்டும் என்றும், காலநிலை மாறுதல் பிரச்சனையில் சீனாவுடன் ஒத்துழைக்கவாவது வேண்டும் என்றும் ஜோஸிம்ஸ் அமெரிக்க அரசை வலியுறுத்தினார்.

தொழிலாளி வர்க்கத் தலைமையில் மட்டுமே!

அவர் தொடர்ந்து கூறுகையில், தொழிலாளி வர்க்கத்தின் தலைமை யில் மட்டுமே பாசிஸத்தைத் தோல்வி யுறச் செய்ய முடியும் என்றார்; புதிய சமுதாயத்தை உருவாக்குவதற்குத் தொழிலாளி வர்க்கத்தால் மட்டுமே முடியும் என்றார். சமாதானத்திற்கான இயக்கம் உள்பட  அனைத்து இயக்கங் களிலும் தொழிலாளி வர்க்கத் தலைமை யை உறுதி செய்ய வேண்டுமென்றார் ஜோஸிம்ஸி. மிதவாதிகளும், ஊசலாட்டக்காரர்களும் வலதுசாரி பக்கம் எளிதில் தாவிவிடுவார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதனால், மக்களின் போராட்ட முன்னணிக்கு முதுகெலும் பாக இருக்க வேண்டியது தொழிலாளி வர்க்கம்தான் என்பதைத் தமது தோழர் களுக்கு நினைவூட்டினார் ஜோஸிம்ஸி.  அமெரிக்காவில் தொழிலாளி வர்க்கம் இப்போது பல துறைகளிலும் வெற்றி பெற்று வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். ஜார்ஜியாவில் உருக்குத் தொழிலாளர்கள் ப்ளூ போர்ட் எலெக்ட்ரிக் பஸ் பிளாண்டில் தொழிற்சங்கம் ஆரம்பிப்பதில் வெற்றி பெற்றனர். கலிஃபோர்னியாவில் அமேசான் கம்பெனி டிரைவர்களும், டெஸ்பாட்ச் தொழிலாளர்களும் தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ளனர். 300 வரையான ஸ்டார்பக்ஸ் ஸ்டோர்களில் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. 2023-லும் சங்கத்தைப் பதிவுசெய்ய வேண்டி விண்ணப்பங்கள் அதிகரித்து வருகின்றன. இது 2022-ஆம் ஆண்டில் அதற்கு முந்தைய ஆண்டைவிட  53 சதவீதம் அதிகமாகும். இந்த ஆண்டு அதைவிட அதிகமாக இருக்கும் என்று தான் இதுவரையான நிலவரம் காட்டு கிறது. வரலாற்றில் முன்பு எப்போதும்  இல்லாத அளவுக்கு வேலைநிறுத்தத் திற்கு ஆதரவான வாக்கெடுப்புக்குத் தொழிலாளர்கள் முன்வருகிறார்கள். நியூயார்க்கில் அமெரிக்க கம்யூ னிஸ்ட்டுகள் நடத்திய கூட்டமைப்பு மாநாட்டின் விவாதங்கள் தெளிவாக்கு வது, பாசிஸத்தை எதிர்த்துத் தோல்வி யுறச் செய்வதற்கான போராட்டத்தை வெற்றிப் பெறச்செய்ய தங்களால் முடி யும் என்ற தன்னம்பிக்கையைத்தான்!

நன்றி: ‘சிந்தா’- மலையாள 
வார இதழ் (5.7.2023)
- ஆர்ய ஜினதேவன்
- தமிழில் : தி.வரதராசன்

 

 

;