what-they-told

img

இரண்டாவது சுதந்திரப் போர்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான பேரியக்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தொடர் முழக்க இசைப் போராட்டம் வியாழனன்று (டிச. 26) நடைபெற்றது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடே நெருப்புக் கனலில் தகித்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் அடி வருடியாக இருக்கும் அதிமுக அரசு, இதற் கெதிராக போராடினால் அனுமதி அளிக்க மறுக்கிறது. அப்படியே அனுமதி அளித்தா லும் மைக் செட் போடக் கூடாது, பந்தல் போடக் கூடாது என காவல் துறை மூலம் மிரட்டுகிறது. 

கடந்த 23ஆம் தேதி சென்னையில் பேரணி நடத்தியதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தோழமைக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட 8 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்காசியில் 3 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக அரசு தமிழக மக்கள் 8 கோடி பேர் மீது வழக்கு போட்டாலும் போராட்டம் ஓயாது.  உலகில் எங்கும் இல்லாத விதமாக நாட்டில் 3இல் 1 பகுதியில் இணையதள சேவையை துண்டித்துள்ளது மத்திய அரசு. பெரும்பாலான இடங்களில் அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ளது. காஷ்மீரில் துவக்கிய அட்டூழியத்தை இன்று நாடு முழுவதும் அரங்கேற்றப் பார்க்கிறார்கள். இதற்கெதிராக போராடிய 21 பேரை பாஜக அரசுகளின் போலீஸ் சுட்டுக் கொலை செய்துள்ளது. இப்படி மனித உயிர்களைக் கொன்று குவித்து விட்டு பொருட்களை சேதப்படுத்தாதீர்கள் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுக்கிறார். உண்மையில் பொருட்களை சேதப்படுத்தி யது யார் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். 

தேசிய பதிவேடு குறித்து விவாதிக்கப் படவில்லை என பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால் உள்துறை அமைச்சர் அமித்ஷா குடியுரிமை பதிவேட்டை நாடு  முழுவதும் அமல்படுத்தியே தீருவோம் என்கிறார்.  மதம், சாதி, மொழி அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தக் கூடாது என அரசி யலமைப்புச் சட்டம் கூறுகிறது. இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரையும் இந்தியா வில்தான் பிறந்தார்களா என ஆய்வு செய்வ தற்கு நீங்கள் யார்? உங்களுக்கு யார் அந்த அதிகாரத்தை வழங்கியது? இவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி மனுஸ்மிருதியை அமல்படுத்தப்பார்க்கி றார்கள். பன்முகத் தன்மையை ஏற்க மறுக்கிறார்கள். இந்த நாடு பிளவுபட ஒருபோதும் அனுமதியோம். 2ஆவது சுதந்திரப் போராட்டம் துவங்கியுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான பேரியக்கம் சார்பில் சென்னையில் வியாழனன்று நடைபெற்ற தொடர் முழக்க இசைப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆற்றிய உரையிலிருந்து...

;