what-they-told

img

குரூப்-4 தேர்வு முறைகேடு: இடைத்தரகர் வீட்டின் பூட்டை உடைத்து சிபிசிஐடி சோதனை

சென்னை,ஜன.30- டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில், தலைமறைவாகியுள்ள இடைத்தரகர் ஜெயக்குமார் வீட்டின் பூட்டை உடைத்து, சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை நடத்தினர். மேலும், பிரபல கொரியர் நிறுவனத்தின் 3 ஊழியர்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இடைத்தரகர் ஜெயக்குமார் சென்னை முகப்பேரில் தங்கியிருந்ததால் அந்த வீட்டை சிபிசிஐடி காவல்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், அந்த வீட்டில் சோதனை நடத்துவதற்கு நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்ற சிபிசிஐடி காவல்துறையினர், 5 பேர் கொண்ட வருவாய்த்துறை குழுவுடன் அங்கு சென்றனர். வீடு பூட்டிக் கிடப்பதால், வருவாய்த்துறையினர் முன்னிலையிலேயே பூட்டு உடைக்கப்பட வேண்டும் என்பதால், மதுரவாயலிலிருந்து வருவாய்த்துறை குழுவினர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையிலான சிபிசிஐடி காவலர்கள், இடைத்தரகர் ஜெயக்குமார் வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று சோதனை நடத்தினர். டிஎன்பிஎஸ்சி அலுவலக உதவியாளர் மாணிக்கத்திடமும் விசாரணை நடத்தினர்.  மேலும், விடைத்தாள்களை கொண்டுசென்ற விவகாரத்தில் பிரபல கொரியர் நிறுவனத்தின் 3 ஊழியர்களுக்கு தொடர்பிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. அந்த 3 ஊழியர்களையும் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த 3 பேரும் யார், முறைகேட்டுக்கு எப்படி உடந்தையாக செயல்பட்டனர் என்கிற விவரங்கள் வெளியாகவில்லை. இதனிடையே, முறைகேட்டின் மூலம் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த காவலர் சித்தாண்டியின் குடும்பத்தினர் தேர்வு எழுதியது தொடர்பான விவரங்களை, டிஎன்பிஎஸ்சியிடம் சிபிசிஐடி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தரகர்களின் புகலிடமாக டிஎன்பிஎஸ்சி மாற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 முறைகேடு விசாரணை திசை திருப்புவது திட்டமிட்ட உள்நோக்கமாக கருத வேண்டியுள்ளது. தற்போது ஏன் தேர்வாணைய அதிகாரிகளை அழைத்து அமைச்சர் பேசுகிறார்? தேர்வு முறைகேட்டில் திமிங்கலங்களை விட்டுவிட மீன் குஞ்சுகளை பிடிக்க முயற்சி நடக்கிறது. குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்த நிலையில் அமைச்சர் டி. ஜெயக்குமார் இத்தனை நாள் எங்கே போயிருந்தார்.  குரூப்- 4 முறைகேடு குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். விசாரணையை உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் நடத்த வேண்டும்.  எத்தனை தேர்வுகளில் முறைகேடு நடந்தது. அதன் ஆணிவேர் எங்கு உள்ளது என்பதை விசாரிக்க வேண்டும். விசாரிக்கவில்லை எனில் திமுக இளைஞரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். விசாரணை நியாயமாக நடைபெறுவதற்காக அமைச்சர் ஜெயக்குமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

;