what-they-told

img

கொரோனா தடுப்புப் பணி தேவை ஒருங்கிணைப்பும் ஊழியர்கள் அதிகரிப்பும் - சி.ஸ்ரீராமுலு

தமிழகத்தையே பயமுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை மாநகராட்சியில், வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சி வேகம் எடுத்தது. கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியான ஜெ.ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறையின் செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்ட பிறகு, தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பரிசோதனை முடிவில் ஒருவருக்கு கொரோனா  ‘பாசிட்டிவ்’ என்றால் அவரது இல்லத்துக்கு மாநகராட்சி ஊழியர்கள் பட்டியலுடன் வந்து கொண்டிருந்தனர். தற்போது, தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வதோடு செல்பேசிக்கு குறுஞ்செய்தியும் அனுப்பப்படுகிறது.அதன் தொடர்ச்சியாக மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள், ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்களுடன் காவல்துறையும் சேர்ந்து கொள்கிறது.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஏதேனும் உடல் நலக்குறைவு என்றால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். மற்றவர்களுக்கு செவிலியர்கள் தினசரி பரிசோதனை செய்கிறார்கள். நோயாளிகளுக்கும் தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்கும் மூன்று வேளை உணவும் வழங்கப்படுகிறது.  நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் குறித்தும் அவர்களது உடல்நிலை பற்றியும், வைரஸ் தொற்றால் பாதித்த நபர்கள் குறித்து உடனுக்குடன் மாநகராட்சி, சுகாதாரத் துறைக்கும் தகவல் கொடுத்து வருகின்றனர். ஆனால் களப்பணியில் ஈடுபடும் தற்காலிக பணியாளர்களுக்கு எவ்வித பணி பாதுகாப்பும் கிடையாது என்பது தனிக்கதை!

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தொடர்ந்து ஆலோசனை வழங்குகிறார்கள். உடல் நலம் குறித்தும் விசாரிக்கிறார்கள். இதில் துறைகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை என்பது கவனிக்க வேண்டியதாகும்.உதாரணம், சைதாப்பேட்டையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம் தனியார் மருத்துமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டது. பிறகு வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டது. தனிமை காலம் முடிந்து ஒரு வாரத்தை கடந்த நிலையில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட காவல்துறையினர் கேட்ட கேள்வியை திரும்பத் திரும்பக் கேட்டு சுமார் 10 முறைக்கு மேல் போன் செய்து அந்த குடும்பத்திற்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கின்றனர். எழும்பூர் தொகுதிக்குட்பட்ட கேசவன் பிள்ளை பூங்கா (கே.வி. பார்க்) சிறப்பு முகாமில் 9 ஒன்பது நாட்கள் தங்கியிருந்த பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த 3 பேர் வீடு திரும்பியும் தனிமைப்படுத்திக் கொண்டனர். தனிமைக் காலம் முடிந்து மூன்று நாட்கள் கடந்த நிலையில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மாநகராட்சி ஊழியர் ஒருவர் தற்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? வீட்டிற்கு எப்போது வருவீர்கள்? கேட்ட கேள்விக்கு விளக்கம் அளித்த பின்பும் அதனை கவனத்தில் கொள்ளாமல்  தொல்லை கொடுப்பது அவர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதைவிட கொடுமை, ராயபுரம் 49 வது வட்ட திமுக செயலாளர் ஜெயபாலனின் மனைவி நிர்மலா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது உடலை மாநகராட்சி ஊழியர்கள்தான் அடக்கம் செய்தனர். ஆனால் மூன்று தினங்கள் கழித்து ஜெயபாலனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மாநகராட்சி அதிகாரி ஒருவர், உங்கள் மனைவியின் உடல்நலம் இப்போது எப்படி இருக்கிறது?  உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வாருங்கள் என்று கூறியிருக்கிறார். அவர் இறந்துவிட்டார் என்று சொன்னதும் இறப்புச் சான்று கேட்டிருக்கிறார்.  கொரோனா வைரஸின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அச்சத்தின் பிடியில் உறைந்து கிடக்கும் மக்களில் பணம் இருப்பவர்கள், வசதி படைத்த வர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறுகிறார்கள். 

வங்கி ஊழியர் ஒருவரின் குடும்பத்தில் 8 பேருக்கு வைரஸ் தொற்று. அப்போலோ, மியாட், ரேலா, பாலாஜி, எஸ்.ஆர்.எம். சவிதா போன்று அதிகம் பிரபலமான மருத்துவமனை கிடையாது அது. ஆனாலும், மூன்று நாட்கள் சிகிச்சைக்கு ரூ.75 ஆயிரம் (ஐந்து நபர்கள்), பாதிப்பு அதிகமான ஒருவருக்கு மூன்றரை லட்சம், தொற்று உறுதியானவருக்கு  1லட்சத்து 25 ஆயிரம் என ஒட்டுமொத்தமாக ஐந்தரை லட்சம்  ரூபாய் வசூலித்துள்ளது. அரசு மருத்துவமனைகளிலும் உயர்ரக சிகிச்சைகள் அளிக்கப்படு கின்றன. அதற்கான கருவிகளும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதற்காக முதலமைச்சர் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளதை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து, மாத்திரைகள் மட்டுமின்றி மூச்சுத்திணறலை கட்டுப்படுத்த தேவைப்படும் கருவி, ஊசி மற்றும் உயர்தர பரிசோதனைக்கு தேவையான உபகரணங்களும் உள்ளன. ஆனால். இந்த வசதிகள் முழுமையாக பயன்படுத்தப்படுகிறதா?  அதற்குத் தேவையான, மருத்துவர்கள், ஊழியர்கள் ஏற்பாடுகள் உள்ளனவா? அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமே தொற்றுக்களை கண்டறிவதும் விரைந்து குணப்படுத்துவதும் நடைபெறும்.

;