what-they-told

img

மழைக்கால நோய்கள்... தற்காப்பும்...தீர்வும்...

காய்ச்சல், சளி, இருமல் போன்ற மழைக்கால நோய்கள் அதிகரித்துள்ள நிலையில், அவை வரும் முன் காப்பது குறித்தும் வந்தபின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு: கோடை காலம், குளிர் காலம், மழைக்காலம் என ஒவ்வொரு பருவத்துக்கும் ஒவ்வொரு விதமான நோய்கள் மனிதர்களை தாக்குகின்றன. அந்த வகையில் மழைக்காலம் தொடங்கி ஆங்காங்கே சாதாரண காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், டெங்கு, மலேரியா, டைபாய்டு என பல்வேறு வகையான காய்ச்சல்கள் பரவி வருகின்றன. இயற்கையிலேயே மனித உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி, குறிப்பிட்ட அளவு வரை நம்மைப் பாதுகாக்கிறது. அதனையும் மீறிய வீரியத்தோடு நோயின் தாக்கம் இருக்கும்போது மருத்துவர்கள் தரும் மருந்துகள் மட்டுமே உரிய தீர்வைத் தரும்.

சாதாரணக் காய்ச்சலுக்கும் வைரஸ் காய்ச்சலுக்கும் வித்தியாசங்கள் உண்டு. சாதாரணக் காய்ச்சல் என்பது பருவநிலை மாற்றத்தால் ஏற்படுவது. இவ்வகை காய்ச்சல்கள், முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் இரண்டு மூன்று தினங்களில் சரியாகி விடும். வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டால் தொடர் கண்காணிப்பும் தடையற்ற சிகிச்சையும் தேவை என்கின்றனர் மருத்துவர்கள். காற்று, உணவு, கொசுக்கள், ஈக்கள் என பல்வேறு வழிகளில் நோய்க்கிருமிகள் நம்மை வந்தடைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சுய சுத்தம் மட்டுமல்லாது, சுற்றுச்சூழலையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறும் மருத்துவர்கள், வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளின் மூலமும் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறுகின்றனர். காய்ச்சல் ஏற்பட்டால் சுய மருத்துவம் எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். காய்ச்சலுக்கு என்றே தனியாக வார்டுகள் அமைத்து, தொடர் சிகிச்சை மற்றும் தொடர் கண்காணிப்பை அரசு மருத்துவமனைகள் வழங்கி வருகின்றன.

நோய் முற்றிய நிலையில் அரசு மருத்துவமனையை நாடும்போது, அதன் தன்மையை சோதிப்பதற்கு காலதாமதம் ஆவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே காய்ச்சல் ஏற்பட்டால் தாமதிக்காமல் அருகிலுள்ள அரசு மருத்துவமனையை நாடுவது நல்லது.தற்போதைய சூழலில் பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் டெங்கு காய்ச்சலுக்குக் காரணமான ஏடிஎஸ் வகை கொசுக்கள், 5 மில்லி லிட்டர் நன்னீரில் கூட இனப்பெருக்கம் செய்யக்கூடியவை என மருத்துவர் ரகுநந்தனன் குறிப்பிடுகிறார். காய்ச்சல் வராமல் தற்காத்துக் கொள்வதற்கு பிரதான அறிவுரையாக மருத்துவர்கள் கூறுவது சுய சுத்தம். குறிப்பாக வெளியில் சென்று வந்தால் கைகளை அடிக்கடி கழுவும் பழக்கத்தை பெரியவர்கள் பின்பற்றுவதோடு, அதனை இளம் தலைமுறைக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்கின்றனர். 

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் - என்ற குறள் உணர்த்தும் பொருள் நோய்களுக்கும் பொருந்தும். அனைத்துவகையான நோய்களுக்கும் மருந்துகளும் சிகிச்சையும் இருந்தாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே நோய்கள் வராமல் தற்காத்துக் கொள்ள முடியும்.

;