what-they-told

img

மின்னல் தாக்கினால் மரணம் தானா?

மின்னல் மழைக்காலத்தில் நடக்கும் ஓர் அற்புதமான இயற்கை நிகழ்ச்சி. இடியோசை கேட்பதற்குச் சில வினாடிகளுக்கு முன் மின்னல் மின்னுகிறது. இடி உண்டாவதற்கு இது மின்னல்தான் காரணம். இந்த இடி, மின்னல் ஆகியவை பெரும்பாலும் மனிதனைத் தாக்குவதில்லை என்றாலும் சில வேளைகளில் மனிதனின் உடலைத் தாக்கிச் சிறு காயத்திலிருந்து மரணம் வரை ஏற்படுத்துகின்றன. எனவே இத்தகைய தாக்குதல்களிலிருந்து நம்மை எப்படிப் பாதுகாத்துக்கொள்வது? என அறிந்திருப்பது அவசியம். நாம் மின்னலுக்குக் கடவுளாக இந்திரனைக் கருதுகிறோம். சீனாவில் நெருப்பைக் கக்கும் பிராணியாக டிராகன் மின்னலுக்குரிய கடவுளாகக் கூறப்படுகிறது. உரோமர்கள் ஜீபிடர் கடவுளின் பேராயுதமாக மின்னலைக் கருதுகின்றனர். அமெரிக்காவில் இடி விழுந்த மரத்தின் கரியை மருந்திற்கும், மந்திரத்திற்கும் இன்றும் உபயோகப்படுத்துகிறார்கள். இவைகள் எல்லாம் மின்னலைப் பற்றிய சில செய்திகள். விஞ்ஞான ரீதியாகப் பார்ப்போமேயானால் மழைக்காலத்தில் 2,000 - 3,000 மீட்டர் உயரத்தில் வேகத்தில் மின்னல் உண்டாகிறது. மழைக்காலத்தில் மின்னல் உண்டாகிறது. மழைக்காலத்தில் மேகங்களில் மின்சக்தி நிறைந்திருக்கும். சில சமயங்களில் இரண்டு மேகங்கள் ஒன்றையொன்று நெருங்கி வரும் அப்பொழுது ஒரு மேகத்திலிருந்து மின்சக்தி மற்றொரு மேகத்திற்குப் பாயும். இவ்வாறு மின்சக்தி பாயும் போது கண்ணைப் பறிக்கும் ஒளி உண்டாகிறது. இதைத்தான் நாம் மின்னல் என்கிறோம். பெஞ்சமின் பிராங்கிளின் என்பவர், 1752 -ஆம் ஆண்டு தமது ஆராய்ச்சியின் மூலம் மின்னலின் தோற்றம் பற்றி முதல்முதலாக விளக்கிக்காட்டினார்.

மேகத்தினூடே தோன்றும் மின்னல் ஒரு செகண்டிற்கு 1,000த்திலிருந்து 85,000 மைல் வேகம் வரை பூமியை நோக்கி வருகிறது. இம்மின்னல் நேர்க்கோட்டில் வருவது இல்லை. படிப்படியாகத் தங்கித் தங்கித்தான் பூமியை அடைகிறது. ஒரு மின்னல் நாற்பது பிரிவுகளாகக் கூடப் பிரிந்து தாக்கும் தன்மையுடையது. மின்னல் பொதுவாக உயரமான கட்டிடங்களில் இடி தாங்கியைக் காண்கிறோம். இவ்விடிதாங்கி என்பது கட்டிடத்தின் உச்சியிலிருந்து நேரே பூமிக்குள் செல்லும் ஒரு செப்புக் கம்பியாகும். இதன் மேற்பகுதி கட்டிடத்தை விடச் சற்று உயரத்தில் இருக்கும். கீழ்ப்பகுதி ஒரு செப்புத் தகட்டுடன் இணைக்கப்பட்டு பூமிக்குள் ஈரமான பகுதியில் ஆழமாகப் புதைக்கப்பட்டிருக்கும். மின்னல் ஒரு முறை தாக்கிய இடத்தை மறுபடியும் தாக்காது என்ற கருத்து நிலவி வருகிறது. இது உண்மை அல்ல அமெரிக்காவில் உள்ள எம்பயர் என்ற கட்டிடத்தை ஒரு வருடத்தில் மட்டும் 42 முறையும், ஒரே சமயம் ஒரே நாளில் மழையின் பொழுது 12 முறையும் மின்னல் தாக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழை மேகங்களிடையே பறக்கும் ஆகாயவிமானங்கள் சில சமயங்களில் மின்னல் தாக்குதலில் சிக்குவது உண்டு. ஆனால் அத்தாக்குதலால் விமானம் தாக்குதலில் சிக்குவது உண்டு. ஆனால் அத்தாக்குதலால் விமானம் சேதமடைவதில்லை. ஆனால் அதிலுள்ள மின்சார ரேடியோவின் சாதனங்கள் மட்டும் பழுதடைகின்றன. பேருந்துகளும், புகை வண்டிகளும் மின்னலிருந்து தப்பித்துக் கொள்கின்றன. ஏனெனில் அவற்றின் அமைப்பு மின்னலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு ஏற்றாற்போல் உள்ளன.

மழைக்காக மரத்தடியில் ஒதுங்கி நிற்கும் மனிதனை மின்னல் நேராகத் தாக்காவிட்டாலும், மரத்தில் விழும் மின்னல் அதன் கீழ் இருப்பவரையும் தாவித் தாக்குகிறது. மின்னல் தாக்குவதால் மனிதனுக்கு எப்பொழுதும் தீங்கு ஏற்படுவதில்லை. எத்தனையோ முறை மின்னல் தாக்குண்டவர் எவ்வித ஆபத்தும் இன்றித் தப்பிப்பது உண்டு. உதாரணமாக, அமெரிக்காவில் சில்வியா என்பவரைக் காலிலிருந்து தலை முடிவரை மின்னல் 7 முறை தாக்கியும் அவருக்கு எவ்விதத் தீங்கும் ஏற்படவில்லை. அவர் நன்றாக உயிர் வாழ்கிறார். கிழக்கு ஆப்பிரிக்காவில் ஒரு முறை சர்ச்சில் கூடியிருந்த 300 பேரை மின்னல் தாக்கியது. இதில் 100 பேர் மட்டும் சில நாள் நினைவிழுந்திருந்தனர் 4 பேர் மட்டும் மரணம் அடைந்தனர். மற்றவர்களுக்கு எவ்விதக் கோளாறும் ஏற்படவில்லை. 

மின்னலால் தாக்கப்பட்ட மனிதனின் உடலில் ஏற்படும் விளைவுகள்

மின்னல் தாக்குவது என்பது அதிக வெளிச்சத்துடன் கூடிய பெரிய தீப்பொறி தாக்குவதைப்போல் தான். மின்னல் தாக்கிய சில விநாடிகளில் உடலில் இரத்த அழுத்த அழுத்தம் குறைந்து மயக்கம் வரும். பின்னர் நரம்பு மண்டலம் பழுதடைந்து உயிர் போவதும் உண்டு. (மின்னல் தாக்குண்டவர் அனைவரும் இந்நிலையை அடையவார்கள் என்று சொல்வதற்கில்லை) சில சமயம் சட்டையை மட்டும் இம்மின்னல் கிழித்து விட்டு, உடலுக்கு எவ்விதத் தீங்கும் இழைக்காது போவதும் உண்டு.  இதற்கு நேர் மாறாகச் சில சமயம் உடலில் சிறு காயம் கூட இன்றி மரணம் நேரலாம். இம்மின்னலின் அதிக வெளிச்சம் காரணமாக விழித்திரை கிழிந்து கண் குருடாவது உண்டு. மேலும் கண்ணிமைகளில் அழற்சி, இரத்தக்கசிவு, கண்ணின் பாப்பா அமைப்பில் மாறுதல் போன்றவையும் ஏற்படலாம். உடலில் வலிப்பு, ஞாபகமறதி, தன்னிலை தடுமாற்றம் செவிட்டுத்தன்மை, ஊமையாதல், உள் காயம் சிராய்ப்பு, புண், எலும்பு முறிவு போன்றவை சில வேளைகளில் ஏற்படும், சில சமயம் தலையில் மட்டும் பொசுங்கும் மின்னல் என்பது மின்சாரம்தான். மின்சாரம் உலோகங்களில் எளிதில் பாயும். உடம்பில் உலோகம் ஏதாவது அணிந்திருந்தால், உதாரணமாக ஜிப், பெல்ட், பக்கிளி நகை ஆகியவை மூலம் மின்னல் பாய்ந்து ஆங்காங்கே பரவலாக பரண்செடியைப் போல தீக்காயங்களை உண்டாக்கும்.

இம்மின்னல் தாக்குண்டவருக்கு நாம் செய்ய வேண்டிய முதலுதவிகள்

சாதாரணமாகத் தீக்காயங்களுக்கு வெறும் வெளிப்பூச்சு மருந்துகள் மட்டும் போதுமானது. ஆனால் மூச்சும் இருதயத் துடிப்பும் நின்றவர்களுக்கு வாயின் மூலமோ அல்லது முதுகை அமுக்கியோ செயற்கைச் சுவாசம் கொடுக்க வேண்டும். இருதயத் துடிப்பு இருக்கின்றதா என்பதைப் பார்த்து நெஞ்சுக் குழிக்கு இடதுபுறம் அமுக்கி இருதயத் துடிப்பை உண்டாக்க வேண்டும். இதில் ஓரளவு குணமடைந்த பின் நோயாளியை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து தேவைப்பட்டால் செயற்கைச் சுவாசம் கொடுக்க வேண்டும். இத்துடன் பிராணவாயும் கொடுத்தால் நோயாளி மரண அபாயத்திலிருந்து தப்பிக்க வழி உண்டு.

மின்னல் தாக்குதலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் தடுப்பு முறைகள்

மழை வரும் போது, மரத்தடியில் ஒதுங்குவது நம்மவர்களின் பழக்கம். மின்னல் மின்னும் போது மரத்தடியில் ஒதுங்கவே கூடாது. மழையில் நனைந்து செல்லும் பொழுது உலோகப் பொருட்கள் உடலில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மழைக்கு உபயோகிக்கும் குடையில் இரும்புப் பிடி இல்லாமல் இருப்பது அவசியம். மழை பெய்து கொண்டிருக்கும் பொழுது வெட்டவெளியில் நனைந்து கொண்டு ஒதுங்கக்கூடாது. நீரில் நீந்தக்கூடாது. தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கக்கூடாது. வெட்ட வெளியில் மின்னல் மின்னும் பொழுது மழைக்கோட்டுப் போட்டிருந்தால் அதன் மேல் படுத்துக் கொள்ள வேண்டும். மின்னல் மனிதனைத் தாக்கிச் சிறு காயங்கள் முதல் மரணம் வரை ஏற்படுவது ஏதோ சிலவேளைகளில் மட்டும்தான். மேற்கூறிய தடுப்பு முறைகளைக் கையாண்டால் அவற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

தஞ்சை டாக்டர் சு.நரேந்திரன்
எம்.எஸ்., பி.எச்.டி, சிறப்பு நிலைப் பேராசிரியர்
தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் -1


 

;