what-they-told

img

தோழர் மைதிலி சிவராமனுக்கு இன்று வயது 80 - எஸ்.குமாரதாசன்

பெண்ணுரிமை இயக்கத்தின் மகத்தான தலைவர் 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்களில் ஒருவரும், இந்திய பெண்ணுரிமை இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவருமான தோழர் மைதிலி சிவராமன், டிசம்பர் 14 (இன்று) தமது 80ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.  தலைசிறந்த பத்திரிகையாளராக, தொழிற்சங்கத் தலைவராக, எளிய தலித் பெண் தொழிலாளர்களின் பேரன்பை பெற்ற மாபெரும் தலைவராகவும், பல முகங்கள் கொண்ட, தமிழகத்தின் மகத்தான ஆளுமை தோழர் மைதிலி சிவராமன். 

1939 டிசம்பர் 14 அன்று பிறந்த அவர், மாணவர் பருவத்திலேயே அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு இடதுசாரி சிந்தனையாளராக மலர்ந்தார். 1968- 69களில் சென்னையில் ஆங்கிலத்தில் இடதுசாரி கருத்துக்களை பரப்பும் வகையில் ரேடிக்கல் ரேவியூ என்ற ஆங்கில பத்திரிகையை நடத்தி வந்தார் மைதிலி. அதுதான் சென்னையில் வந்த ஒரே இடதுசாரி ஆங்கில இதழ் ஆகும்.சென்னையில் செயல்பட்ட தொழிற்சங்கங்களுடன் இணைந்து களத்தில் நின்று போராடிய வீரப்பெண்ணாக வலம் வந்த தோழர் மைதிலி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு துடிப்புடன் முன்னின்று செயல்பட்டார். வியட்நாம், லாவோஸ், கம்போடியா நாடுகளில் விடுதலைப் போர் நடந்து வந்த நேரத்தில் அதற்கு ஆதரவாக சென்னையில் மைதிலியும், என்.ராம் போன்றவர்களும் மாணவர்களையும் தொழிலாளர்களையும் திரட்டி பல ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள்.

 அதுமட்டுமின்றி தென் வியட்நாம் புரட்சிகர அரசாங்கம் அமைக்கப்பட்டு அந்த அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி பென் சென்னைக்கு பலமுறை வந்துள்ளார். அது சமயம் அவர்களுக்கு சென்னை விமான நிலையத்திலும் சிறப்பான வரவேற்பும் கூட்டமும் நடத்தி ஆதரவு தெரிவிக்கப்பட்டது. வியட்நாம் மைலாய் கிராமத்தில் குழந்தைக்கு விஷம் கலந்து இனிப்புகளை வழங்கி அமெரிக்க ஏகாதிபத்தியம் கொன்று குவித்த செயலைக் கண்டித்து கண்டன குரல் சென்னையில் எழுப்பப்பட்டது. இளைஞர்களிடமும் பொதுமக்களிடமும் நன்கொடை வசூல் செய்து வியட்நாம் மக்களுக்கு அனுப்பி ஆதரவையும், சகோதரத்துவத்தையும் தெரிவித்தனர். இதுபோன்ற அனைத்து இயக்கங்களையும் ஒருங்கிணைத்தவர் தோழர் மைதிலி. 

1973 இல் பல்லாவரம் குவாரியில் தொழிற்சங்கம்  அமைத்து அதில் தோழர் கே.எம்.அரிபட் தலைவராகவும், மைதிலி சிவராமன் துணைத் தலைவராகவும், எஸ்.குமாரதாசன் செயலாளராகவும் செயல்பட்டோம். அங்கு இருந்த 200 பெண்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட தலித் தொழிலாளர்களை அணிதிரட்டி பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. 1976 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி கொண்டு வந்த அவசரநிலை காலத்தில் தென்னிந்தியாவில் வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது இங்கு மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போராட்டத்தில் இரண்டு கர்ப்பிணி பெண்கள் உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இருப்பினும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது.  இந்த போராட்டத்தால் 1978ல் குவாரி தொழிலாளர்கள் 500பேர் நிரந்தரம் செய்யப்பட்டனர். பிறகு சென்னை மாநகராட்சிக்கு மாற்றப்பட்டனர். அவர்கள் மைதிலியை கையெடுத்து கும்பிட்ட காட்சிகள் இன்றும் மனதில் நிழலாடுகின்றன.  இன்று அவர்கள் அனைவரும் பென்சன் பெற்று வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இன்று அந்தக் குவாரி தொழிலாளர்களின் வாரிசுகள்தான் பல்லாவரம் பகுதியில் கட்சியின் வாரிசுகளாக செயல்பட்டு வருகிறார்கள்.

1972ல் தமிழகத்தில் முதன்முதலில் மாதர் சங்க அமைப்பு கூட்டம் தோழர் பி.ஆர்.பரமேஸ்வரன் முன்முயற்சியால் நடந்தது. அதில் மைதிலி, ருக்மணி அம்மாள், கோவிந்தம்மாள்,  ஜெயம்மாள் மற்றும் விஜயா ஜானகிராமன் உட்பட 25 தோழர்கள் கலந்து கொண்டனர். அதில் மாநிலத் தலைவர் பாப்பா உமாநாத் கலந்து கொண்டு பேசினார். அதில் ஜனநாயக மாதர் சங்கத்தின் சென்னை - செங்கை மாவட்ட கமிட்டி உதயமானது. அதற்கு தலைவர் மைதிலி. ருக்மணி அம்மாள், கோவிந்தம்மாள் துணைத் தலைவர்கள். விஜயா ஜானகிராமன் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு இன்று தமிழகம் முழுவதும் ஆலமரமாக மாதர் சங்கம் செயல்பட்டு வருகிறது. 1969 ஆலந்தூரில் மார்க்ஸ் பொது நல மன்றம் துவக்கப்பட்டது. அந்த மன்றத்தில் உறுப்பினர்களுக்கு அரசியல் ரிப்போர்ட், அரசியல் வகுப்புகளை மைதிலி நடத்துவார். என்றென்றும் இந்த நினைவுகள் நீங்காதவை.தற்சமயம் மருத்துவ ஓய்வில் உள்ள தோழர் மைதிலி சிவராமன், பல்லாண்டு வாழ செங்கொடி இயக்கம் வாழ்த்துகிறது.

;