what-they-told

img

இந்நாள்... இதற்கு முன்னால்... ஜூன் 25

1678 - வெனிசைச் சேர்ந்த எலெனா கோர்னாரோ பிஸ்கோப்பியா(ஆங்கிலத்தில் ஹெலனா  கோர்னாரோ), முனைவர் பட்டம் பெற்ற உலகின் முதல் பெண்மணியானார். முதல் டாக்டர் பட்டம் 1150இல் பாரிசில் வழங்கப்பட்டாலும், தொடக்கத்தில் கற்கவும், பட்டம் பெறவும் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். பதுவா பல்கலைக்கழகத்தின் சார்பில் பதுவா பேராலயத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்வில், ஒரு மணிநேரம் ஆய்வுரை நிகழ்த்திய எலெனா, இசைக்கருவிகளிலும் மிகச்சிறந்த திறன் பெற்றிருந்தார். இவர் பட்டம்பெற்ற அடுத்த சில மாதங்களிலேயே பட்டத்திற்கான கல்விக்கு மற்றொரு பெண் அனுமதிக்கப்பட்டார் என்பதிலிருந்து, அதற்கான வழியை எலெனா திறந்து வைத்தார் என்பதை விளக்கும்.

'நான் கற்பிக்கிறேன்' என்ற பொருளுடைய லத்தீன் சொல்லான டாக்கியோ(டாஷியோ) என்பதிலிருந்து உருவான டாக்ட்டரேட் என்பதை, கற்பிப்பதற்கான உரிமமாக வழங்குவது, மதபோதகர்கள் டாக்டர் என்று அழைக்கப்படுவதிலிருந்து, இடைக்கால ஐரோப்பாவில் தொடங்கியது. கற்பிப்பதற்கான உரிமையை வழங்கும் அதிகாரம் திருத்தந்தையிடமே(போப்) இருந்த நிலை, 1231இல் பாரிஸ் பல்கலைக்கழகத்துக்கு அந்த அதிகாரத்தைத் திருத்தந்தை வழங்கியபோது மாறியது. இறையியல், மருத்துவம், சட்டம் ஆகியவற்றைக் கற்பிக்கும் உரிமைபெற்றவர்கள் டாக்டர் என்றும், கலை, இலக்கணம் உள்ளிட்ட பிற துறைகளைக் கற்பிப்பவர்கள் மாஸ்ட்டர் என்றும் அழைக்கப்பட்டனர். ஆசிரியரைக் குறிக்கும் லத்தீன் சொல்லான மாஜிஸ்ட்டர் என்பதிலிருந்துதான் மாஸ்ட்டர் தோன்றியது! குறிப்பிட்ட துறைகளில் 3 அல்லது 4 ஆண்டுகள் பயின்றவர்கள், அத்துறையின் ஆசிரியர் ஆவதற்கான கல்விபயிலும் தகுதி பெற்றுவிட்டதைக் குறிக்க, பின்னாளில் பேச்சிலர் பட்டங்கள் வழங்கப்பட்டன. வீரப்பெருந்தகை(நைட்) ஆவதற்கான பயிற்சியாக, நைட் ஒருவரிடம் உதவியாளராகப் பணியாற்றுபவரைக் குறிப்பிடும் லத்தீன் சொல்லான பேக்கலாரியஸ் என்பதிலிருந்தே பேச்சிலர் என்பது உருவானது.

ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில், உண்மையான அறிவு கூர்நோக்கிய அனுபவத்திலிருந்தே பெறப்படுகிறது என்ற கருத்து வலுப்பெற்றதைத் தொடர்ந்து, இறையியல், மருத்துவம், சட்டம் ஆகியவற்றைத் தவிர்த்த பிற துறைகள் மெய்யியல்(தத்துவம்) என்று ஏற்கப்பட்டன. முதல் பிஎச்டி பட்டம் 1810இல் ப்ரஷ்ய(ஜெர்மன்) அரசால் உருவாக்கப்பட்டாலும், அது ஜெர்மானிய மாஸ்ட்டர் பட்டமாகத்தான் இருந்தது. லத்தீனில் 'ஃபிலாசஃபியே டாக்டர்' என்பதிலிருந்து பிஎச்டி என்றழைக்கப்பட்டாலும், ஆகஸ்ஃபோர்ட் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களும், இங்கிலாந்து காமன்வெல்த் நாடுகள் சிலவும் டிஃபில்(டாக்டர் ஆஃப் ஃபிலாசஃபி) என்றழைக்கின்றன. சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ஃபிலாசஃபி என்பதற்கு பதிலாக, துறையின் பெயருடன் டாக்டர் என்பது சேர்த்துப் பட்டமாக வழங்கப்படுகிறது.

=== அறிவுக்கடல்===