what-they-told

img

இந்நாள் ஜன.20 இதற்கு முன்னால்

1942 - ‘யூதக் கேள்விக்கான இறுதித் தீர்வை’ செயல்படுத்தும் முறைகளையும், இடங்களையும் முடிவுசெய்த ‘வான்சீ மாநாடு’, பெர்லினின் புறநகர்ப் பகுதியான வான்சீ என்ற இடத்தில் நடைபெற்றது. ஜெர்மெனியால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஐரோப்பியப் பகுதிகள் முழுவதுமிருந்த யூதர்களை, போலந்திற்கு அனுப்பி அங்கு கொன்றுவிடும் திட்டத்தைச் செயல்படுத்துவதில், ஜெர்மன் அரசின் பல்வேறு துறைகளின் ஒத்துழைப்பையும் உறுதிப்படுத்துவதற்காக, இம்மாநாட்டை, ஜெர்மன் அரசின் முதன்மைப் பாதுகாப்பு அலுவலகத்தின் இயக்குனரும், எஸ்எஸ் படையின் இரண்டாம் நிலைத் தளபதியுமான ரீன்ஹார்ட் ஹேட்ரிச் கூட்டினார். 1933இல் ஆட்சியை நாஜிக் கட்சிக் கைப்பற்றியதிலிருந்தே, வன்முறைகள் உள்ளிட்ட நெருக்கடிகள்மூலம், யூதர்களை  முழுமையாக நாட்டைவிட்டு வெளியேற்றிவிட முயற்சித்துக்கொண்டிருந்த நிலையில், ஹிட்லருக்கு அடுத்த நிலையிலிருந்தவரும், பெயரளவுக்கிருந்த ஜெர்மன் நாடாளுமன்றமான ரீச்ஸ்டேக்-கின் தலைவரும், ஜெர்மன் வான்படையின் தலைவருமான ஹெர்மான் கோரிங், யூதக் கேள்விக்கான முழுமையான தீர்வு ஒன்றை வடிவமைத்துத் தருமாறு, 1941 ஜூலை 31இல் ஹேட்ரிச்சுக்கு எழுத்துமூலமான அனுமதியை அளித்தார். இதைத்தொடர்ந்து ஹேட்ரிச் உருவாக்கிய ‘கிழக்கிற்கான பொதுத் திட்டம்’, ஜெர்மெனியால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கிழக்கு ஐரோப்பிய மற்றும் சோவியத் பகுதிகளிலிருந்தவர்களை, அடிமை உழைப்பிற்காகவும், கொல்வதற்காகவும் சைபீரியாவுக்கு அனுப்ப உத்தரவிட்டது. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின் மக்கள்தொகையை 3 கோடியாகக் குறைப்பதற்காக, ‘பட்டினித் திட்டம்’ ஒன்றும் உருவாக்கப்பட்டது. ஜெர்மெனியிலிருந்த தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் ஆயுதத் தயாரிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டதால், 1941-42இல் உணவுதானிய உற்பத்தி குறைந்துபோனது. அதனால், (யூதர்களைப் போன்ற) ‘பயனில்லாத வாய்களை’ குறைக்கவும் திட்டமிடப்பட்டு, உணவுதானியம் ஜெர்மன் படைகளுக்கும், மக்களுக்கும் திருப்பிவிடப்பட்டதில், பல்லாயிரக்கணக்கானோர் பட்டினியால் பலியானார்கள். யூதர்கள், கம்யூனிஸ்ட் கட்சியினர், சோவியத்துகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோரைக் கொல்லுமாறு, 1941 ஜூலை 2இலேயே படைகளுக்கு ஹேட்ரிச் கடிதம் எழுதிவிட்டார். போலந்திலும், சோவியத்திலும் ஏராளமான படுகொலைகள் ஏற்கெனவே செய்யப்பட்டுவிட்ட நிலையில், முடிவுகளை எடுப்பதற்காக இம்மாநாடு கூட்டப்படவில்லை. மாறாக, இனப்படுகொலையைச் செய்யவேண்டிய முறைகளை விளக்கவே கூட்டப்பட்ட இம்மாநாடு, 90 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றது. பேசப்பட்டவற்றை விரிவாகப் பதிவு செய்வதைத் தவிர்த்திருந்தாலும், இம்மாநாட்டின் குறிப்புகளின் ஒரு பிரதி, ஜெர்மன் வெளியுறவுத்துறை அலுவலகத்திலிருந்து 1947இல் கைப்பற்றப்பட்டு, நூரம்பர்க் விசாரணையில் முக்கிய ஆவணமாகியது. இம்மாநாடு நடைபெற்ற வான்சீ இல்லம், இன்று இனப்படுகொலை நினைவிடமாக மாற்றப்பட்டுள்ளது.

;