what-they-told

img

இந்நாள் பிப்.24 இதற்கு முன்னால்

1960 - கடலுக்கடியில் உலகைச் சுற்றிய முதல் பயணமான, ‘ஆபரேஷன் சாண்ட்ப்ளாஸ்ட்’ தொடங்கியது. நீண்ட பயணங்களுக்கு உகந்த கப்பல்களின் உருவாக்கமும், புவியின் வடிவம் கோளம்தான் என்ற (தாமதமான!) புரிதலும், 1519இல் உலகைச் சுற்றிய முதல் பயணத்தை ஃபெர்டினாண்ட் மெகல்லனை மேற்கொள்ளச் செய்தன. 5 கப்பல்களில் 270 பேருடன் தொடங்கிய அப்பயணத்தில், மெகல்லன் உட்பட 252 பேர் பலியாகிவிட, 18 பேரும், ஒரு கப்பலும் மட்டும் 1085 நாட்களில் (மூன்றாண்டுகள் 10 நாட்களுக்கு முன்னதாக) உலகைச் சுற்றி முடித்தனர். 1950களில் அறிமுகமான அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள், நீருக்கடியில் நீண்டகாலம் இருப்பதையும், பயணிப்பதையும் சாத்தியமாக்கியிருந்த நிலையில், கடலுக்கடியிலேயே உலகைச் சுற்றிய பயணத்தை அமெரிக்கக் கடற்படை மேற்கொண்டது. உண்மையில், விண்வெளியில் சோவியத் செய்துகாட்டியிருந்த சாதனைகள், தாங்கள் தொழில்நுட்ப அடிப்படையில் பின்தங்கியிருப்பதாக அமெரிக்காவை எண்ணச் செய்திருந்தன. ஸ்புட்னிக் போன்ற ஓர் ‘அவமானம்’ மீண்டும் அமெரிக்காவுக்கு ஏற்படாமலிருக்க, அணுசக்தி நீர்மூழ்கித் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா பெற்றிருக்கிற வளர்ச்சியையாவது நிரூபிக்க வேண்டும், சோவியத் அப்படியான சாதனையைச் செய்வதற்கு முன்பாக ‘ப்ராஜெக்ட் மெகல்லன்’ என்ற கடலுக்கடியில் உலகைச் சுற்றும் பயணத்தை முடித்துக்காட்டி, அமெரிக்காவின் அணுசக்தி நீர்மூழ்கித் திறனை நிரூபிக்க வேண்டும் என்று அமெரிக்க கடற்படைத் தளபதி இவான் ஆரண்ட், 1960 ஜனவரி 6இல் தலைமைத் தளபதிக்கு எழுதியிருந்தார். 1960 மே மாதம் நடக்கவிருந்த, நான்கு பெரும் சக்திகளின்(அமெரிக்கா, சோவியத், இங்கிலாந்து, ப்ரான்ஸ்) அல்லது, கிழக்கு-மேற்கு உச்சி மாநாடு என்பதில், சோவியத் அரசுத்தலைவர் நிகிட்டா குருஷ்ச்சேவை, அமெரிக்கக் குடியரசுத்தலைவர் ட்வைட் ஐசனோவர் சந்திக்கும்போது, அமெரிக்காவுக்குக் கவுரவமாக இருக்க, அதற்கு முன்பாக இந்தப் பயணம் நிறைவுற வேண்டுமென்ற அவரது வேண்டுகோளை, கடற்படைத் தலைமைத் தளபதி ஆர்லீ பர்க் ஏற்றுக்கொண்டார். அமெரிக்கா அதுவரை உருவாக்கியதிலேயே மிகப்பெரியதும், அதிகச் சக்திவாய்ந்ததும், அதிகச் செலவுபிடித்ததுமான, ட்ரைட்டன் கப்பல் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ராடார் பொருத்தப்பட்ட இந்த நீர்மூழ்கி, மெகல்லன் பயணித்த பாதையிலேயே பெரும்பாலும் பயணித்து, 60 நாட்கள் 21 மணி நேரப் பயணத்திற்குப்பின், 1960 ஏப்ரல் 25 அன்று உலகைச் சுற்றிய கடலடிப் பயணத்தை நிறைவு செய்தது.