what-they-told

img

இந்நாள் இதற்கு முன்னால் மே 05

1945 - இரண்டாம் உலகப்போரில், அமெரிக்க வீரர்களும் ஜெர்மனி வீரர்களும் ஓரணியில் நின்று போரிட்ட வினோதமான யுத்தமான இட்டர் கோட்டை யுத்தம் நடைபெற்றது. இட்டர் என்பது ஆஸ்திரியாவிலுள்ள ஒரு கிராமம். 1938இல் ஆஸ்திரியாவை ஜெர்மனி கைப்பற்றிய நிலையில், 1940இல் இக்கோட்டையை உரிமையாளரிடமிருந்து ஜெர்மன் அரசு குத்தகைக்குப் பெற்றதுடன், 1943இல் பறிமுதல் செய்து, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கைதிகளை அடைக்கும் சிறையாக மாற்றிக்கொண்டது. பிரான்சின் இரண்டு முன்னாள் பிரதமர்கள், முன்னாள் ராணுவத் தளபதிகள் உள்ளிட்ட பல மிக முக்கியமான கைதிகள் இங்கு அடைக்கப்பட்டிருந்தனர். ஏப்ரல் 30இல் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார். வேர்மாக்ட் என்பதுதான் ஜெர்மனியின் அதிகாரப்பூர்வ ராணுவம். சுட்ஸ்டாஃபல் (பாதுகாப்புப் படை - எஸ்எஸ்) என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருந்த நாஜிகளின் படையின், வாஃபன்-எஸ்எஸ் என்ற ஆயுதப்பிரிவு, துணை ராணுவப்படையாக, ராணுவத்துக்கு இணையாகச் செயல்பட்டதுடன், நாஜிகளின் இனப்படுகொலை உள்ளிட்ட மனிதநேயமற்ற நடவடிக்கைகளைச் செயல்படுத்தும் அமைப்பாகவும் இருந்தது. ஹிட்லரின் இறப்புக்குப்பின் மேலும் தாக்குதல்களைச் செய்ய ஜெர்மன் ராணுவத்தின் தளபதிகள் ஆங்காங்கே மறுத்தாலும், எதிரிப் பகுதிகளுக்குள் கண்ணில்படுபவர்களையெல்லாம் சுடுவது, ஆண்களை மொத்தமாகக் கொல்வது என்று மிகமோசமான தாக்குதல்களை எஸ்எஸ் படையினர் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தனர். இட்டர் கோட்டைச் சிறையிலிருந்து இரண்டு பேர் தப்பிச் சென்று, அமெரிக்க ராணுவத்திடமும், ஆஸ்திரிய (பாசிச) எதிர்ப்பியக்கத்திடமும் உதவி கோரினர். அமெரிக்க ராணுவமும் ஆஸ்திரிய எதிர்ப்பியக்கத்துக்கு ஆதரவாக, ஜெர்மன் ராணுவமான வேர்மாக்டின் ஒரு பிரிவும் வந்தனர். சிறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த எஸ்எஸ் படையினர் வெளியேறிவிட, சிறையிலிருந்த பெரும்புள்ளிகள் உட்பட அனைவரும் அங்கிருந்த ஆயுதங்களுடன் தயாராக இருந்தனர். இந்த மூன்று படைகளும், தாக்க வந்த எஸ்எஸ் படையினரை எதிர்த்துப் போரிட்டதே இட்டர் கோட்டை யுத்தம். 100 வீரர்கள் பிடிபட்டு, தோற்கடிக்கப்பட்ட எஸ்எஸ் படையில் இறந்தவர்கள் எண்ணிக்கை தெரியவில்லை. சிறைக் கைதிகளில் ஒருவர் மட்டும் உயிரிழந்தார். இரண்டு நாட்கள் கழித்து மே 8இல் ஜெர்மனி சரணடைந்தது.


அறிவுக்கடல்