what-they-told

img

தட்டான்களை காப்போமா?

கல்லைத் தூக்கு கருப்பட்டி தரேன்… கல்லைத்  தூக்கு கருப்பட்டி தரேன்…" எனச் சொல்லிக்  கொண்டே ஒரு கையில் சின்னக் கல்லையும், மறுகையில் தட்டானையும் பிடித்துக்கொண்டு, தட்டானை கல்லைத் தூக்கச்சொல்லியதும், தட்டானைப் பிடித்து அதன் வாலில் நூலைக் கட்டி பறக்கவிட்ட சின்ன வயது ஞாபகங்கள்.
ஹெலிகாப்டரும் தட்டானும்:
தட்டான்கள் பற்றி பல ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க நடைபெற்றிருக்கின்றன. உங்களுக்குத் தெரி யுமா? மிக நீண்ட தொலைவிற்கு வலசை போகும்  திறன் கொண்ட ஒரே பூச்சியினம் தட்டான்தான். காற்றில்  மேலடுக்கு நகர்வு மூலம் பல்லாயிரம் கிலோமீட்டர் சென்று திரும்பும் திறன் அவற்றிற்கு உண்டு. மணிக்கு  20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்திற்கு பறக்கும். இவற்றால் நின்றுகொண்டே பறக்க முடியும். அப்படியே  180டிகிரி தன்னைத் திருப்பிக்கொண்டு பின்னால் பறக்க முடியும். தட்டானைப் பார்த்துதான் ஹெலிகாப்டர்  வடிவமைக்கப்பட்டது என்று கூட சொல்வார்கள். பொதுவாக இரண்டு வகை தட்டான்கள் இருக்கின்றன. ஒன்று சாதாரண தட்டான். மற்றொன்று ஊசித்தட்டான். இதை வேறுபடுத்தி அறிந்துகொள்ள எளிமையான வழி இருக்கிறது. தட்டான் வந்து அமரும் போது அதன் இறக்கைகள் விரிந்த நிலையிலேயே இருந்தால் அது சாதாரண தட்டான். தனது முதுகுப் பகுதியுடன் இறக்கைகளை மடக்கிக் கொண்டு அமர்ந்தால் அது ஊசித்தட்டான். இதை ரயில் தட்டான் என்றும் சொல்வார்கள். ஏறத்தாழ 6ஆயிரம் வகை தட்டான் இனங்கள் உலகம் முழுவதிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 503 இனங்கள் இந்தியாவில் இருக்கின்றன. 325 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே பூமியில் வாழும் பூச்சியினம் தட்டான் மட்டுமே என்று ஆய்வுகள் சில கூறுகின்றன. உலகில் எல்லா இடங்களிலும் இவற்றைப் பார்க்க முடியுமாம்.
தட்டன்கள் இன பெருக்கம் கொசுக்களைக் கட்டுப்படுத்தும்:
மழைக்காலத்தில் கொசுக்கள் மூலமாக பரவும் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் பணியை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக செய்துவந்தது தட்டான்கள்தான். தட்டான்களுக்கு நீர்நிலைகள்தான் உலகம். இனச்சேர்க்கைக்குப் பிறகு பெண் தட்டான்கள் ஆயிரக்கணக்கான முட்டை களை நீர்நிலைகளில் இட்டு விட்டுச்செல்லும். நம்  வெப்பமண்டல சூழலுக்கு அம்முட்டைகள் 10 நாள்களில் பொரித்துவிடும். முட்டையிலிருந்து வெளிவரும் இளம்உயிரியானது சுமார் ஓராண்டு முதல் ஐந்து ஆண்டு வரை நீரிலேயே வாழும். அந்தக் காலகட்டத்தில் அதன் முக்கிய உணவு கொசுக்கள் மற்றும் அதன் முட்டைகளும் தான். தன்னால் முடிந்தவரை கொசுக்களை கட்டுப்படுத்துவதற்கு கொசுக்களின் மூட்டை மற்றும் கொசு புழுக்களை உண்டு முதிர்ச்சியடைந்து நீரை விட்டு வெளியேறிவிடும். தனது உடலைச் சுற்றியிருக்கும் உறை போன்ற பகுதியை உடைத்துக்கொண்டு இறக்கைகள் முழுமையாக வளர்ச்சியடைந்த தட்டானாக வெளியே வரும். நீரில் இருக்கும் போதும் , வெளியே பறக்க ஆரம்பத்த பிறகும் கொசுக்கள்தான் அதன் பிரதான உணவு. இரண்டு மீட்டர் வரை துல்லியமாகப் பார்க்கும் திறன் உடைய இரண்டு கூட்டுக்கண்கள் தட்டானுக்கு உண்டு. அவை, கொசுக்களை வேட்டையாடும் முறை  வித்தியாசமானது. பறக்கும்போது தனது ஆறு கால்களையும் ஒன்று சேர்த்து கூடை போன்ற அமைப்பை ஏற்படுத்திக் கொள்ளும். அந்தக் கூடைக்குள் விழும் கொசுக்கள்தான் அந்நேரத்து உணவு. பறந்துகொண்டே சாப்பிடும் அல்லது செடியில் அமர்ந்துகொண்டு சாப்பிடும். பின்னர் கூடைக் கால்களோடு மீண்டும் வேட்டைக்குப் புறப்பட்டு விடும். இப்படிக் கொசுக்களின் உற்பத்தியை மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தியது தட்டான் கள்தான். இன்று கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களை தட்டான்கள் உற்பத்தியால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். டெங்கு  காய்ச்சலை பரப்பும், 'ஏடீஸ்' கொசு புழுக்களை அழிக்க, அரசு நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்தாலும்  கொசு உற்பத்தியினை கட்டுப்படுத்துவது தற்போது பெய்துவரும் மழையினால் ஏற்படும் கொசுத் தொல்லைகளில் இருந்து மக்களை பாதுகாப்பது தட்டான்கள் மட்டுமே .  கடந்த காலங்களில் மழை குறைந்ததா லும், பருவநிலை மாற்றத்தாலும், மரங்கள் வெட்டப்படுவ தாலும், நீர் நிலைகள் அழிக்கப்படுவதாலும் அவற்றின்  இனப்பெருக்கம் என்பது குறைந்து வந்தது.  சேலம் மாவட்ட பகுதியில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், பருவநிலை மாறியதால், இப்பகுதியில் கடந்த சில நாட்களாக, தட்டான் பூச்சிகள் உற்பத்தி அதிகரித்துள்ளது. காலை நேரங்களில், தட்டான் பூச்சிகள் அதிகளவில் பறக்கின்றன. இந்த பூச்சிகள் கொசுப் புழுக்களை, உணவாக உட்கொள்ளும். தட்டான் பூச்சிகள் உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்தில், டெங்கு காய்ச்சல் மட்டுமின்றி, இதர நோய்களை பரப்பும் கொசுக்கள் உற்பத்தி குறையும்' என்றனர். இப்படி மனிதனை நோயில் இருந்து பாதுகாத்திடும் பூச்சியினம் மனிதனின் பேராசையால் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதால் அது மனிதனுக்கே எதிராக மாறுகின்றது, இயற்கை வளங்கள் என்பது உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் பாதுகாத்திடவே உருவானது. அவற்றை மனித இனம் மட்டும்தான் தன்னுடைய சுய லாபத்திற்காக அழித்து நோய்களை பரப்பிட நினைக்கின்றது. -ஜெ. பொன்மாறன்