what-they-told

img

அறிவியல் கதிர்

♦ ஒரு தாயின் தியாகம்

கில்லர் வேல் (killer whale) எனப்படும் திமிங்கலங்களில் தாய் பிள்ளைகளுக்காக  செய்யும் தியாகமும் பாசப் பிணைப்பும் மகத்தானது என்கிறார் வாஷிங்டன் திமிங்கல ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த நடத்தை மற்றும் சூழலியலாளர் மைகேல் வேய்ஸ். வாஷிங்டன் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியை சேர்ந்த இந்த பாலூட்டிகள், உணவுக்காக இடம் பெயர்வதில்லை. அந்தப் பகுதியில் கிடைக்கும் சால்மன் போன்ற மீன்களை வருடம் முழுவதும் இரையாக்கிக் கொள்வதில் அவை தனித்திறன் பெற்றுள்ளன. தாய் திமிங்கலம் ஒரு மீனைப் பிடித்துவிட்டு தலையை ஒரு சிலுப்பு சிலுப்பும்போது, பாதி மீன் தாயின் வாயிலும் மீதி மீன் அதற்குப் பின்னாலும் விழுகிறது.பின்னால் நீந்தி வரும் மகன் அதைக் கவ்விக் கொள்கிறது. தாயும் மகனும் ஒன்றாக நீந்துவது ஒரு புரிதலின் அடிப்படையிலும் சேர்ந்திருப்பதை விரும்புவதினாலும் நடைபெறுகிறது. ஆனாலும் அதன் நடத்தையிலிருந்து இப்படிப்பட்ட முடிவுகளை எட்டுவதில் திமிங்கல ஆய்வாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார் வெயிஸ். ஒரு குட்டியை  ஈன்றபின் அடுத்தடுத்த பிரசவங்கள் குறைவது இணைவதற்கு ஆண் கிடைக்காதது காரணம் அல்ல. ஏனெனில் இவை கூட்டமாக வாழும் சமூக உயிரினங்கள்.கூட்டத்தில் பால் ரீதியாக முதிர்ந்த ஒரு ஆண் திமிங்கலமாவது காணப்படுகிறது. ட்ரோன்களிலிருந்து பார்க்கும்போது அவை நிறைய பாலுறவு நடத்தைகளில் ஈடுபடுவது தெரிகிறது. ஆனால் தன்னுடைய இரையில் பாதியை குட்டிகளுக்கு கொடுத்து விடுவதால் பிரசவத்திற்கு தேவைப்படும் ஊட்ட சத்து போதிய அளவு தாய்க்கு கிடைக்காது.     ஆண் திமிங்கலங்கள் பிள்ளை வளர்ப்பில் ஈடுபட வேண்டியதில்லை. அதனால் நீண்ட நாட்கள் வாழ்ந்து நிறைய பிள்ளைகளுக்கு தகப்பன்களாக உள்ளன. பெண் திமிங்கலங்கள் 18 மாத கருத்தரிப்பிற்குப் பின் பிரசவிக்கின்றன. ஆனாலும் அவை  பிற்கால  தலைமுறைகளுக்கு  உதவ முடிகின்றன. ஏனெனில் மனிதர்களைத் தவிரத்து  மாத விலக்கு நின்று விடும் சில  பாலூட்டி வகைகளில் இவையும் ஒன்று. பெண் திமிங்கலங்களுக்கு 30 அல்லது  40 ஆண்டுகளுக்கு பிறகு மாத விலக்கு நின்றுவிடுகிறது. பிறகு 80 அல்லது  90  வயது வரை வாழ்கின்றன.  பிற பகுதிகளில் வாழும் கில்லர் திமிங்கலங்கள் இதைப் போன்று பிள்ளைகளுக்கு உணவை பகிர்ந்து கொடுக்கின்றனவா என்பது எளிதாக விடை காணும் கேள்வி அல்ல. அதிகம் மீன் கிடைக்கும்பகுதியிலுள்ள ஆண் திமிங்கலங்கள் தாயிடமிருந்து இரையைப் எடுத்துக் கொண்டு  தாயின் எதிர்கால கருத்தரிப்பை குறைக்கும் செயலில் ஈடுபடுமா என்கிற கேள்வியை வெயிஸ் எழுப்புகிறார். நார்வே நாட்டு ஆய்வாளரான ஈவ் ஜோர்டைன் அந்தப் பகுதியிலுள்ள கில்லர் திமிங்கலங்கள் இரையை பிள்ளைகளுக்கு தூக்கி எறிவதைக் காணவில்லை;ஆனால் மீன் கூட்டத்தை பெரும் வட்ட வடிவமாக்கி தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதைப் பார்த்திருக்கிறார். எனவே உணவை அடிப்படையாக் கொண்ட பிற பிணைப்புகள் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

♦ மாபெரும் அழிவு! மாபெரும் மீட்சி!

252 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் மிகப் பெரும் தொடர் எரிமலை  வெடிப்புகளால்  பெர்மியன் ட்ரையாசிக்  (Permian-Triassic ) எனும் மாபெரும் அழிவு ஏற்பட்டது. கடல் வெப்பம் அதிகரித்தது.கடல் நீர் அமிலமயமாகி, ஆக்சிஜன் வெளியேற்றம் ஏற்பட்டது.  கடல் நச்சுத்தன்மை கொண்டதாக மாறியது. பரவலான உயிரில்லா பகுதிகள் தோன்றின. 80%க்கும்  அதிகமாக கடல் உயிரினங்கள் மறைந்து போயின.இந்த மாபெரும் அழிவிற்குப் பின் உயிர்கள் எப்போது மீண்டெழுந்தன என்பதைக் கண்டுபிடிப்பது சவாலாக இருந்தது. 2010இல் ஆய்வாளர்கள் சீனாவிலுள்ள லுவோபிங் உயிர்ப் படிமங்களை ஆய்வு செய்து 10 மில்லியன் ஆண்டுகளுக்குள் ஒன்றுடன் ஒன்று இணைந்த  கடல் உயிர்சூழல் மீண்டும் தோன்றின என்று முன்மொழிந்தனர்.  இதன் பின் மேற்கு அமெரிக்கா மற்றும் சீனாவில் காணப்பட்ட  படிங்களை ஆய்வு செய்ததில் மூன்று மில்லியன் ஆண்டுகளுக்குள்ளேயே கடல் பல்லுயிர் சூழல் தம்மை நிறுவிக்கொண்டன என்று கூறப்பட்டது. 2015ஆம் ஆண்டு சீனப் புவியியல் பல்கலைக் கழகத்தை சேர்ந்த படிம ஆய்வு மாணவர் சூ டை, டிரையாசிக் காலத்தை சேர்ந்த பாறைகளை ஆய்வு செய்தபோது அதனுள்ளே இறால் வகை மீனின் படிமத்தைக் கண்டார்.  நான்கு ஆண்டுகள் தொடர்ந்து அங்குள்ள படிமங்களை ஆய்வு செய்ததில், மிக நீண்ட  உடல் கொண்ட வேட்டையாடும் மீன்கள், விலாங்கு போன்றவை,கடல் பஞ்சுகள்,நத்தைகள், இவற்றின் மலக்கழிவுகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. அங்கு எரிமலை சாம்பல்களும் காணப்பட்டன. இவற்றை ஆய்வு செய்ததில் அவை 250.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தியவை என்று தெரிந்தது.  இதன் மூலம் மாபெரும் அழிவுக்குப் பிறகு ஒரு மில்லியன் ஆண்டுகளுக்குள்ளேயே கடல் உயிர் சூழல் மீண்டன என்று தெரிகிறது. மேலும் உயிர்கள் முற்றிலும் அழிந்துவிடவில்லை என்றும் தோன்றுகிறது என்கிறார் ஜெர்மனி நாட்டு ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த படிம ஆய்வாளர் வில்லியம் ஃபாஸ்டர். அந்த காலகட்டத்தில் கடல் வெப்பம் 35டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. இதை தாக்குப் பிடிக்க முடியாமல் அங்கிருந்து கடல் வாழ் உயிரினங்கள் இடம் பெயர்ந்தன என்று முன்பு கருதப்பட்டது. இப்போது கண்டுபிடிக்கப்பட்ட படிமங்கள், அந்த உயிரினங்கள் வெப்பத்தை தாங்கிக்கொண்டன என்று காட்டுகிறது. இந்தப் படிமங்கள் குறுகிய கால உயிர் சமூகமே;நிலைத்த சமூகம் அல்ல என்கிறார் இன்னொரு ஆய்வாளர். ஏனெனில் இங்கு காணப்படும் அம்மோனாயிட்ஸ் மற்றும் கொனோடான்ட்ஸ் உயிரினங்கள்  அழிந்துவிட்டன என்று சுட்டிக் காட்டுகிறார். மேற்கொண்டு செய்யப்படும் ஆய்வுகள் இந்தக் கேள்விகளுக்கு பதில் கொடுக்கும்.2019க்குப் பிறகு மீண்டும் அங்கு சென்று ஆய்வை தொடர உள்ளார் டை. 

;