சென்னை:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதியில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் கன மழை பெய்த நிலையில் சென்னை கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, நந்தனம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதியில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, தேனி மற்றும் நாகை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழையும் பெய்தது.
இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜனவரி 9ஆம் தேதியன்று தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும் என கூறியுள்ளார்.ஜனவரி 10ஆம் தேதியன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப் படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரை தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகள் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.