சென்னை:
வங்கக்கடலில் உருவான நிவர், புரெவி புயல்களுக்குப் பிறகு, தற்போது இந்திய பெருங்கடலின் அமைதியைக் குலைக்க, அர்னாப் புயல் ஏற்படவிருப்பதாக செய்திகள் பரவின. அதைத் தொடர்ந்து, தமிழகத்தை மையமாக கொண்டு ஐந்து புயல்கள் அடுத்தடுத்து உருவாக உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன ஆனால் உண்மை என்ன?
தமிழகத்தில் அடுத்தடுத்து ஐந்து புயல்கள் உருவாக இருப்பதாகவும், டெளட்கோ புயல் டிசம்பர் 8 ஆம் தேதியும், டிசம்பர் 17 ஆம் தேதி யாஸ் என்னும் புயலும், 24 ஆம் தேதி குலாப் என்னும் புயலும், அடுத்த ஆண்டு 2021 ஜனவரி 1ஆம் தேதி ஷாஹீன்என்னும் புயலும், அடுத்த ஆண்டு, ஜனவரி 8ஆம் தேதி ஜவாத் என்னும் புயலும் உருவாவதாக ஒரு தகவல் வாட்சப் மற்றும் பிறசமூக வலைதளங்களிலும் பரப்பப்பட்டு வருகிறது.இத்தகைய தவறான வதந்திகளை ஃபார்வார்டு செய்வதை முற்றிலும் கைவிடுமாறு வானிலை குறித்த சிறப்பார்வம் கொண்ட தமிழ்நாடு வெதர்மேன் ப்ரதீப் ஜானும் ட்விட்டர் வழியே கோரிக்கை விடுத்துள்ளார்.கடலில் உருவாகும் புயல்களுக்கு ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து பெயர்களை வைக்கும் முறையை பின்பற்றுகின்றனர். அந்த வகையில் இந்தியப் பெருங்கடலில் உள்ள வங்கக் கடல், அரபிக் கடல்களில் உருவாகும் புயல்களுக்கு இந்த பகுதிகளில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான் மர், ஓமன், தாய்லாந்து, ஈரான், சவூதி அரேபியா, கத்தார், ஏமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 13 நாடுகள் சேர்ந்து பெயர் பட்டியலை வெளியிடுகின்றன.அவற்றில் வரிசைப்படி பெயர்கள் சூட்டப் படுகின்றன. இந்தப் பட்டியலில் 13 உறுப்பு நாடுகளுக்கு தலா 13 புயல் பெயர்கள் என மொத்தம் 169 பெயர்களை உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ளது.
பெயர்கள்
இந்தியாவுக்கான பெயர்களில் முரசு, நீர், உள்ளிட்ட பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அந்த வரிசையில், அர்னாப் என்னும் புயலின் பெயர் வங்கதேசத்தால் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. 13 நாடுகளால் பரிந்துரைக்கப்படும் புயலின் பெயர்களில் இதுவும் ஒன்று.புயலின் தாக்கம் மற்றும் தேதிகளைக் கடந்து, 13 நாடுகளால் புயலுக்கு வைக்கப்படும் பெயர்களும், அந்த பெயர்களின் பின்னுள்ள காரணங்களும், வரலாறும் ஒரு வித சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.சமூக வலைதளங்களில் பரப்பப்படும் இந்த புயலின் பெயர்கள் இந்த பட்டியலில் இருந்து எடுத்து பகிரப்படுகிறதே தவிர, இந்தத் தேதிகளும், அத்தகைய புயல்கள் எங்கு கரையைக் கடக்கும், மையம் கொள்ளும் என்பதற்கான எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம். அதிகாரப்பூர்வமான வானிலை ஆய்வு மையத் தகவலைத் தவிர வேறு எதையும் நம்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.