weather

img

தமிழகத்தில் இன்றும் கனமழை பெய்யும்... வானிலை ஆய்வு மையம்..

சென்னை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமையும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த 24 ஆம் தேதி வங்கக்கடலில் நிவர் புயல் உருவாகி சென்னை உள்ளிட்ட 18 வட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனைத் தொடர்ந்து தற்போது புரெவி புயல் உருவாகி தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.இந்த புயல் மன்னார் வளைகுடா அருகே வந்தபோது வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. அதனால் காற்றின் வேகம் குறைந்து டெல்டா மாவட்டங்களிலும், சென்னை, திருவள்ளூர் வரையிலான வட மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்தது.இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை இயல்பைவிட 2 செ.மீ. அதிகமாக பதிவாகியுள்ளது. சராசரியாக 38 செ.மீ. இருக்க வேண்டிய மழை இந்த ஆண்டு 39 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை இயல்பான மழை 66 செ.மீட்டர், இம்முறை 96 செ.மீ. மழை கிடைத்துள்ளது. இயல்பை விட குறைவான மழை நீலகிரி, சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய பகுதிகளில் பெய்துள்ளது.மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடிக்கக்கூடும்.இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (டிச. 6) ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யும்.ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழையும், அவ்வப்போது ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

கேரள கடலோரப் பகுதி, லட்சத்தீவு , மாலத்தீவு பகுதிகளிலும், திங்கட்கிழமை (டிச. 7) கேரள கடலோரப் பகுதி, தென் கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு , மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.இவ்வாறு அவர் கூறினார்.