மனிதர்களின் காதில் உள்ளே இருக்கும் செவிப்பறை துளை விழுந்தால் நோய்த்தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது . அவ்வாறு துளை விழுந்த பின் காதுகளில் வலி ஏற்பட்டு , பின்பு செவித்திறன் இழக்கும்வரை பாதிப்பாகும் . இதனை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய ஆராய்ச்சியாளர்களால் எடுத்த முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியில் முடிந்தன .
தற்போது, அமெரிக்காவிலுள்ள ஹார்வர்ட் பல்கலை விஞ்ஞானிகள் உயிரி பாலிமர்களை கொண்டு , "போனோகிராப்ட்" என்ற செயற்கை செவிப்பறையை உருவாக்கி உள்ளனர். இந்த போனோகிராப்ட்-ஐ விலங்குகளிடம் சோதனை செய்த போது , ஒரு செவிப்பறையைப் போல் செயல்பட்டிருப்பதாகவும், காது கேட்கும் திறனைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. அதோடு, இயற்கையாக இருக்கும் செவிப்பறையில் ஏற்பட்டுள்ள துளை அடைபடுவதற்கும் இந்த போனோகிராப்ட் ஒரு சாரமாக இருப்பதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அனைத்திற்கும் மேலாக, போனோகிராப்டை நேரடியாகக் காதுக்குள் செலுத்திப் பொருத்திவிட முடியும் என்பதால் வலிமிக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்று அறிவித்துள்ளனர் .
தற்போது, ஹார்வர்டு விஞ்ஞானிகள் , போனோகிராப்டை சந்தைக்குக் கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளனர். விரைவில், செவிப்பறை பாதித்தோருக்குத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் அளித்துள்ளனர் .