technology

img

வண்ணக்கதிர்- அறிவியல் கதிர்

♦ விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி
பழங்கள் மற்றும் காய்கறிகள் நீண்ட நாள் கெடாமலிருக்க தீங்கற்ற மேல்பூச்சு ஒன்றை ஐஐடி கவுகாத்தியிலுள்ள ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இந்த மேல்பூச்சு உண்ணத்தக்கது. நுண்பாசிகளின் வடிப்பு மற்றும் சர்க்கரை கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்கள் வரை பழங்களையும் காய்கறிகளையும் கெடாமலிருக்க இது உதவும். உருளைக்கிழங்கு,தக்காளி, ஸ்டராபெரி, ஆப்பிள், அன்னாசி ஆகியவற்றின் மீது இது சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது.

♦ வேட்டையாடு விளையாடு
லயன் பிஷ் எனப்படும் மீன் வேகமாக நீந்துபவை அல்ல. ஆயினும் அவை தன்னைவிட வேகமாக நீந்தும் இரையை பிடித்துவிடுகின்றன. பவளப்பாறைகளோடு ஒன்றி மறைந்திருந்து அவை இரையைப் பிடிப்பது ஒரு விதம். ஆனால் தெளிந்த நீரில் அவை எவ்வாறு இரையைப் பிடிக்கின்றன என்பது வேறு. இது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஒரு தொட்டியில் அவற்றை வைத்து சிறிய மீனை அவை பிடிப்பதை பதிவு செய்தனர்.இரையாகும் மீன் அவற்றை விட இரு மடங்கு வேகமாக நீந்தின.லயன் மீன்கள் அதன் குறுக்காக செல்லாமல் அதை பின்பற்றியே சென்றன.இடைவிடாது துரத்தின.இரை மீன்கள் சிறிது நேரம் வேகமாகவும் பின் நிற்பதுமாக இயங்கின. லயன் பிஷ் இரையின் அருகே நெருங்கி நெருங்கி செல்ல இந்த இடைநிற்றல் வழி வகுத்தது. 74%அவை வெற்றி அடைந்தன. நிதானமும் உறுதியும் போட்டியில் வெல்கின்றன என்கிற ஆங்கில பழமொழியை இது காட்டுகிறது என்று கூறும் பிரிடி ஆலன், வரையறுக்கப்பட்ட நீள அகல் தொட்டியில் நடந்தது திறந்த வெளியில் எவ்வாறு நடக்கும் என்பது தெரியவில்லை என்கிறார். சோதனை சாலையில் நடப்பதுவே இயற்கை வெளியிலும் நடப்பதானால் கரீபியன்,மேற்கு அட்லான்டிக் மற்றும் மத்திய தரைக்கடல் ஆகியவற்றில் மற்ற மீன் இனங்கள் அழிவிற்கு லயன் பிஷ்ஷின் வேட்டையாடும் தந்திரமே காரணம் எனலாம்.ஆனால் லயன் பிஷ்ஷின் அதீதப் பசி,உற்பத்திப் பெருக்கம் ஆகியவையும் அழிவிற்கு முக்கிய காரணங்களாக இருக்கலாம்.

♦ செயற்கை உயிர்?
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எலியின் மூல செல்களிலிருந்து(stem cell) கரு ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். இது மூளை மற்றும் துடிக்கும்  இதயம் ஆகியவற்றை உருவாக்குகிறது. விந்துவோ  சினை  முட்டையோ இல்லாமல் ஸ்டெம் செல்களைக் கொண்டு மாதிரி கருவை உருவாக்கியுள்ளார்கள். பாலூட்டிகளின்  கருவின் தொடக்க நிலையில் செயல்படும் மூன்று ஸ்டெம் செல்களை ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளும் விதத்தில் சோதனை சாலையில் இயக்கி இயற்கையில் நடப்பதை போல நிகழ்த்தியிருக்கிறார்கள்.

♦ நம்மால் தாங்க முடியும் வெப்பம்
மனித உடலானது ஒரு கால இடைவெளியில் வெப்ப மாறுதல்களுக்கு தன்னை தகவமைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது. புவியியல் காலகட்டத்தில் பல தட்பவெப்ப நிலை மாறுபாடுகள் ஏற்பட்டன. அவற்றையெல்லாம் மனிதர்கள் தாக்குபிடித்துள்ளார்கள். ஆனால் நாம் இப்போதுள்ள காலத்தில் இப்படிப்பட்ட மாறுதல்கள் முன்பைவிட விரைவாக நடைபெறுகின்றன என்கிறார் ஒரேகானிலுள்ள போர்ட்லேண்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விவேக் ஷான்டாஸ். இப்படிப்பட்ட வெப்பம் மனித ஆரோக்கியத்தை பல வழிகளில் பாதிக்கிறது.தசைப்பிடிப்பு,மயக்கம், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வெப்ப அதிர்ச்சி போன்றவை ஏற்படலாம்.உடலில் நீர்க்குறைபாடு சிறுநீரகம், இதயம் ஆகியவற்றை பாதிக்கும்.அதீத வெப்பம் நம்முடைய நடத்தையில் கூட மாறுதல்களை ஏற்படுத்தும். வலிந்து தாக்குதல்,கவனம் செலுத்த இயலாமை ஆகியவை ஏற்படலாம். உடல் வெப்பத்தை 98.2 டிகிரியில் வைப்பதற்கு நமது உடல் பல வழிகளில் செயல்படுகிறது.இதயம் வேகமாக இரத்தைத்தை பாய்ச்சுவதன்மூலம் வெப்பத்தை தோலுக்குகடத்துகிறது,தோலின்மேல் செல்லும் காற்று அதை எடுத்துக் கொள்கிறது.வியர்வையின் மூலமும் வெப்பத்தை குறைக்கிறது. ஒரு மனித உடலால் தாங்கக்கூடிய அதிக பட்ச வெப்பம் 35டிகிரி செல்சியஸ் என்று கருதப்பட்டு வந்தது.இதுவும் காற்றிலுள்ள ஈரப்பதத்திற்கு தகுந்தாற்போல் மாறக் கூடியது. ஆனால் தற்போது டானியல் விசேலியோ குழுவினர் நடத்திய ஆய்வில் ஆரோக்கியமான இளம் வயதினர் கூட இதை விட குறைவான வெப்பத்தையே தாங்க முடியும் என்று தெரிய வந்துள்ளது. 18இலிருந்து 34 வயது வரை உள்ள 24 நபர்களை வெவ்வேறு விதமான வெப்பதட்ப சூழலில் நாம் அன்றாடம் செய்யும் நடவடிக்கைகள் ஒத்த நடப்பது,மெதுவாக சைக்கிள் ஓட்டுவது போன்ற சில உடற்பயிற்சிகளை செய்ய வைத்தனர். 1.5 -2 மணி நேர சோதனையில் அவர்களது வெளிவெப்பத்தையும் உள் வெப்பத்தையும் அளந்தனர்.மிதவெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த சூழலில் 30இலிருந்து 31 டிகிரி வரையே பங்கெடுப்பாளர்களால் தாங்க முடிந்தது.அதி வெப்ப மற்றும் வறண்ட சூழலில் 25இலிருந்து 28 டிகிரி வரையே தாங்க முடிந்தது. இது ஆரோக்கியமான இளம் வயதினருக்கான மிதமான செயல்பாடுகளுக்கானது.கடினமான பணிகளுக்கு தாங்கு சக்தி இதைவிட குறைவாக இருக்கும்.அதேபோல் சிறுவர்களுக்கும் வயதானவர்களுக்கும்.ஆகவே மனித உடலின் வெப்பத்தை தாங்கும் சக்தி விஞ்ஞானிகள் கருதியிருந்ததை விட குறைவாக உள்ளது.இந்த நூற்றாண்டின் பகுதிக்கு மேல் தெற்கு ஆசியாவிலும் மத்திய கிழக்கு பகுதிகளிலும் வெப்பம் 35 டிகிரி செல்சியத்தை தாண்டும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் இலட்சக்கணக்கான மக்கள் அபாயத்திலுள்ளார்கள்.

;