tamilnadu

விடுமுறை அளிக்காத தொழிற்சாலைக்கு சீல்

வேலூர், ஏப்.19- ராணிப்பேட்டையில் தேர்தல் விதிகளை மீறி விடுமுறை அளிக்காத தோல் தொழிற்சாலைக்கு வருவாய் கோட்டாட்சியர் இளம்பகவத் அதிரடியாக ‘சீல்’ வைத்தார். மக்களவை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி அனைத்து தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டும். இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.இந்நிலையில், வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சிப்காட்டில் இயங்கி வரும் தனியார் தோல் தொழிற் சாலைக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. இங்கு 15 பேர் வேலை செய்தனர். இதையறிந்த ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் இளம்பகவத், வாலாஜா தாசில்தார் பூமா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு சென்று விசாரித்தனர். அங்கு அனைத்து தொழிலாளர்களும் பணிக்கு வந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள், அங்கிருந்த தொழிலாளர்களை வெளியேற்றி தொழிற்சாலையை பூட்டி ‘சீல்’ வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

;