tamilnadu

அரிசி ஆலையிலிருந்து கொத்தடிமைகள் மீட்பு

வேலூர், மே 29-காட்பாடி அருகே ரூ.50 ஆயிரம் கடனுக்காக அரிசி ஆலையில் 4 ஆண்டுகள் கொத்தடிமைகளாக இருந்த குழந்தைகள் உள்பட 15 பேரை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர். காட்பாடியை அடுத்த மாதாண்டகுப்பம் கிராமத்திலுள்ள தனியார் அரிசி ஆலையில் கொத்தடிமைகளாக தொழிலாளர்கள் பணியமர்த் தப்பட்டிருப்பதாக வேலூர் சாராட்சியர் கே.மெகராஜூக்குத் தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் காவல்துறையினருடன் இணைந்து அதிகாலை அப்பகுதிக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர்.அப்போது, அங்குள்ள அரிசி ஆலையில் குழந்தைகள் உள்பட 15 பேர் கொத்தடிமைகளாக பணியமர்த்தப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக அனைவரையும் மீட்ட அதிகாரிகள், அவர்களை சாராட்சியர் அலுவலத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த குமாரி(40), மகன்கள் நாகராஜன்(20), சரவணன்(22), அவரது மனைவி சோனியா(21), இவர்களது 2 ஆண் குழந்தைகள், கே.பி.புரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்(26), அவரது மனைவி சுதா(24), அவர்களது 7 வயது மகள், 5 வயது மகன், ராஜேந்திரனின் 2-ஆவது மனைவி சுகுணா, அவரது 3 வயது மகன் சுரேஷ்(33), சாந்தி(20), அவர்களது ஒன்றரை வயது மகன் என்பது தெரிய வந்தது.ரூ.50 ஆயிரம் கடனுக்காக 4 ஆண்டுகளாக அரிசி ஆலையில் கொத்தடிமைகளாகப் பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களுக்கு விடுதலைச் சான்றிதழையும், அரசின் முதற்கட்ட நிவாரணத் தொகையையும் அளித்த சார்-ஆட்சியர், அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டார். மீட்கப்பட்டவர்களுக்கு காட்பாடி செஞ்சிலுவை சங்கம் சார்பில் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.