tamilnadu

img

மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை:வைகோ

சென்னை,பிப்.1- மத்திய பட்ஜெட் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் வரவு செலவுத் திட்ட உரையைத் துவங்கும் போது, பொருட்கள் மற்றும் சேவை வரி  நாட்டை ஒற்றுமைப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார். ஆனால், பாஜக அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடி மக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு ஆகியவை நாட்டைப் பிளவுபடுத்தி இருக்கிறது என்பது தான் உண்மை” என்று கூறியுள்ளார். 2020-21 நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 10  விழுக்காடு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், நடப்பு நிதி ஆண்டில் 4.8 விழுக்காடாக பொருளாதார வளர்ச்சி சரிந்துள்ள நிலையில், அதிலிருந்து மீள்வதற்கான சாத்தியக்கூறுகள் தெரியவில்லை என்று அவர் சாடி யுள்ளார்.

புதிய கல்விக் கொள்கைக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து விரிவாக விவாதிக்காமல், நடப்பு ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்துவோம் என்ற அறிவிப்பு எதேச்சதிகாரமானது என்றும் கல்வித் துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிப்பது நாட்டின் தற்சார்ப்பு சூழலை சீர்குலைத்து, உயர் கல்வித்துறை மற்றும் ஆராய்ச்சித் துறைகள் வணிகமயமாகும் ஆபத்து ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ரயில்வே துறையை முழுமையாக தனியார் மயமாக்க வும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. 14 லட்சம் ஊழியர் களைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறையின் பொதுமக்கள் சேவை கடும் பாதிப்புக்குள்ளாகும். காப்பீட்டுத் துறையில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும் எல்ஐசி பங்குகளை தனியாருக்குத் தாரை வார்ப்பது என்ற முடிவு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதைப் போல லாபம் ஈட்டக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்கப்பட்டு 2.1 லட்சம் கோடி திரட்டப்படும் என்ற அறிவிப்பு பொதுத்துறை நிறுவனங்களைச் சீரழித்துவிடும் என்றும் வைகோ கடும் விமர்சனம் செய்திருக்கிறார்.

;