tamilnadu

img

திருவில்லிபுத்தூர் சுகாதார ஆய்வாளருக்கு கொரோனா.... தொடர்பில் இருந்த 35 பேருக்கு பரிசோதனை

விருதுநகர்: 
விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த சுகாதார ஆய்வாளர் ஒருவருக்கு வியாழக்கிழமை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த 4 மருத்துவர்கள் உட்பட 35 பேரிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் வியாழக்கிழமை திருவில்லிபுத்தூர் அருகே உள்ள ஆர்.ரெட்டியபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய சுகாதார ஆய்வாளர் ஒருவருக்கும், விருதுநகர் அருகே குமராபுரத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் மற்றும் 29 வயதுடைய பெண் ஒருவருக்கும் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில், சுகாதார ஆய்வாளருடன் தொடர்பில் இருந்த 31 பேர் மற்றும் திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் 4 மருத்துவர்கள் என மொத்தம் 35 பேரிடம் வெள்ளியன்று ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன. அவை பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் வெளியான பிறகே அதில் யாருக்கும் தொற்று உள்ளதா? என கூற முடியும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் 11 வயது சிறுவன் மற்றும் 29 வயது பெண்ணுடன் தொடர்பில் இருந்த 30க்கும் மேற்படடோரிடமும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
 

;