tamilnadu

img

விருதுநகர் மாவட்டத்தில் சுகாதார ஆய்வாளர், சிறுவன் உட்பட 3 பேருக்கு கொரோனா

விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் சுகாதார ஆய்வாளர், 11 வயது சிறுவன் உட்பட மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது.

விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக இராஜபாளையத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. பின்பு, விருதுநகர், திருவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சிலர் என மொத்தம் 11  பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டது.  

இந்நிலையில், ஏற்கனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட இராஜபாளையம் முதியவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர், ஆய்வக பரிசோதகர், கணிப்பொறி இயக்குநர் மற்றும் அவரது உறவினர் என 4 பேருக்கும், அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவரின் மனைவி மற்றும் தாயார் ஆகியோருக்கும் கொரோனா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  17 ஆனது. எனவே, அனைவரும் மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 19 அன்று,  விருதுநகர் அருகே உள்ள குமாரபுரத்தைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவிக்கு தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும்,  டி.சேடபட்டியைச் சேர்ந்த 38 வயது இளைஞர் ஒருவருக்கும் வைரஸ் தொற்று இருப்பதும் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டது. இதையடுத்து, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது.  திருவில்லிபுத்தூர் அருகே உள்ள ஆர்.ரெட்டியபட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும்  சுகாதார ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. மேலும், விருதுநகர் அருகே உள்ள குமராபுரத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் மற்றும் 29 வயதுடைய பெண் ஒருவருக்கும் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
 

;