tamilnadu

img

முகக்கவசம் அணிந்து கடைக்கு வந்த சிறுவன்.... பாராட்டிய காவல்துறை ஆய்வாளர் 

தஞ்சாவூர்
தஞ்சாவூர் நகரின் மேற்கு காவல்துறை ஆய்வாளர் செங்குட்டுவன் (52) வியாழனன்று அய்யங்கடைத் தெரு பகுதியில்  அத்தியாவசிய பொருள்கள் வாங்க வரும் பொதுமக்களிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். மேலும் முகக்கவசம் இல்லாமல் கடைக்கு சென்றவர்களை முகக்கவசம் அணிய வலியுறுத்தினார்.

அப்போது சைக்கிளில் வந்த, அதே பகுதியை சேர்ந்த சிவகார்த்திகேயன் (10) என்ற 5 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் முகக்கவசம் அணிந்தபடி வர, சிறுவனை நிறுத்திய காவல்துறை ஆய்வாளர், முகக்கவசத்தை காட்டி, இது என்வென்று கேட்க, "மாஸ்க்" எனவும், கொரோனா வைரஸ் வராமல் இருப்பதற்காக அணிந்து இருப்பதாகவும் சிறுவன் கூறியுள்ளான்.

இதைக் கேட்டு உற்சாகமடைந்த காவல்துறை ஆய்வாளர் செங்குட்டுவன் சிவகார்த்திகேயனிடம், பெரியவர்களே கொரோனா குறித்த விழிப்புணர்வு இல்லாமல் முகக்கவசம் அணியாமல் வெளியே வருகின்றனர். அவர்களிடம் கட்டாயம் அணிந்து கொண்டு வெளியே வரச் சொல்கிறோம். இந்தச் சின்ன வயசுல அக்கறையோடு முகக்கவசம் அணிந்து வந்த உன்னை வாழ்த்துகிறேன். இதேபோல் அவசியம் இருந்தால் மட்டுமே முன்னெச்சரிக்கையுடன் வெளியே வர வேண்டும்' என அவன் கைகளைக் குலுக்கி 'வெரிகுட்' என வாழ்த்து தெரிவித்து, பெற்றோர்களையும் மாஸ்க் அணியச் சொல்ல வேண்டும் என கூறி அனுப்பி வைத்தார். 

இந்த வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து செங்குட்டுவன் கூறியதாவது; பெரும்பாலானவர்கள் மாஸ்க் அணியாமல் அஜாக்கிரதையாக வருவதைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது. இந்த வைரஸ் உங்களுக்கு மட்டும் அல்ல, அனைவரையும் பாதிக்கும் என கூறி வருகிறோம். இது போன்ற மக்களுக்கு மத்தியில், சிறுவனின் செயல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று" என்றார்.