பிரிஸ்டேன்
ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரான பிரிஸ்டேன் பகுதியைச் சேர்ந்த பள்ளிச் சிறுவன் குவாடன் பேலெஸ். 9 வயதைக் கடந்துள்ள இவர் மரபணு மற்றும் ஹார்மோன் பிரச்சனையால் வழக்கத்திற்கு மாறாக குள்ளமாக இருக்கிறார்.
கடந்த 20-ஆம் தேதி பள்ளி முடிந்தவுடன் பேலெஸ் தனது தாயிடம்," நான் குள்ளமாக இருப்பதால் மாணவர்கள் என்னைக் கிண்டல் செய்கிறார்கள். எனக்கு இந்த உலகத்தில் வாழவே படிக்கவில்லை. எனக்கு ஒரு கயிறு கொடுங்கள் அல்லது யாராவது என்னைக் கொலை செய்ய நினைத்தால் கூட எனக்குச் சந்தோஷம் தான்" எனக் காரில் அமர்ந்த படி கதறி அழுதார்.
இந்த நிகழ்வை அவனது தாய் தனது செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டே பேலெஸை சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார். மேலும் வீடியோவை சமூகவலைத்தளங்களில் லீக் செய்துள்ளார். இந்த வீடியோ பதிவிட்ட நாள் முதல் இன்று வரை வைரலாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவை கண்ட சிலர் பகிர்ந்து அந்த சிறுவனிற்காக ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லி சிறுவனைக் கிண்டல் செய்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சிறுவனிற்காகப் பல நாடுகளில் தனி அமைப்புகள் மூலம் நிதி குவிந்து வருகிறது.
இந்நிலையில், முரட்டு தனத்துக்கு பெயர் பெற்ற ரக்பி விளையாட்டுத் துறை ஒருபடி மேலே சென்று சிறுவனை உற்சாகப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் பிரபல ரக்பி தொடரான என்ஆர்எல் (தேசிய ரக்பி லீக்) தொடரின் ஒரு முக்கியமான ஆட்டத்தைத் துவக்கி வைக்க சிறப்பு விருந்தினராக குவாடன் பேலெஸ் அழைக்கப்பட்டுள்ளார். மைதானத்தில் எழுந்த பலத்த கரகோசத்திற்கு இடையே பேலெஸ் போட்டியை துவக்கி வைத்துள்ளார். பேலெஸிற்கு உயரம் வளரவில்லை என்றாலும் நல்ல மனிதர்களின் மனதால் ஒரே வாரத்தில் உலகின் முக்கியமான மனிதர்களில் ஒருவராக வளர்ந்துவிட்டார்.