விழுப்புரம், டிச.5- முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மகளிர் மற்றும் மகப்பேறு பிரிவில், குழந்தை திருட்டை தடுக்க நவீன நுண் அதிர்வெண் சென்சார் ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டது. இதற்கான தொடக்க விழா மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மருத்துவ கண்காணிப்பாளர் அறிவழகன், துணை கண்காணிப்பாளர் புகழேந்தி, ஆர்.எம்.ஓ., கதிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகப்பேறு பிரிவு துறைத் தலைவர்கள் ராஜேஸ்வரி, வில்வபிரியா, குழந்தைகள் நலப்பிரிவு துறைத் தலைவர் பிரபாகரன், மகப்பேறு பிரிவு மருத்துவர் ரம்யா, செவிலியர் கண்காணிப்பாளர் விஜயலட்சுமி, வார்டு மேலாளர் அஜீத்குமார், பணியாளர்கள் அமராவதி, சாரதபிரியா, அபிநயா உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் குந்தவிதேவி கலந்து கொண்டுபுதிய கருவியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மகப்பேறு பிரிவில் குழந்தை பிறந்தவுடன், குழந்தை, தாய், உதவியாளர் விபரங்களை ஐ.எம்.எஸ்., ஆப்பில் சேமித்து, தனித்தனியே குழந்தைக்கும், தாய்க்கும், உதவியாளருக்கும் டேக் அணிவிக்கப்படும். இந்த டேக் அணிந்து குழந்தையை வார்டிலிருந்து வெளியே எடுத்துச் செல்லும் போது, வார்டு முன் நுழைப் பகுதியில் உள் ஆன்டெனா மூலம் சென்சார் செய்யப்படும். டேக் அணிந்து செல்லும் போது எச்சரிக்கை அலாரம் ஒலிக்காது. டேக் அணியாதவர்கள், செவிலியர்கள் கூட குழந்தையை வார்டை விட்டு வெளியே தூக்கி வந்தால் எச்சரிக்கை ஒலி எழுப்பி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்” என்றார். குழந்தை, தாய், உதவியாளர் புகைப்படமும் இங்குள்ள வீடியோ மானிட்டரில் தெரியும் . வேறு அன்னிய நபர்கள் வார்டின் உள்ளே நுழைந்தாலும், தாய், குழந்தையின் நகர்வுகளை கண்காணிக்க இந்த சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் மருத்துவ மனையின் மகப்பேறு பிரிவில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு குழந்தை திருட்டு தடுக்கப்படுவதுடன், தாய்மார்கள், ஊழியர்களுக்கு பாதுகாப்பு மற்றும் மன அமைதியை ஏற்படுத்தும் வகையில் சென்சார் பொருத்தப்பட்டு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.