மிருணாள் சென் கல்கத்தாவில் படிக்க வந்தபோது ரூடால்ஃப் ஆர்ன் ஹைம் எழுதிய ‘ஃபிலிம் அஸ் ஆர்ட்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்தார். இதனால் இவருக்கு திரைப்படங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது. திரைப்பட விமர்ச னங்கள் எழுதிவந்தார். இவர் படித்து முடித்து சிலகாலம் மருந்துப் பொருள் விற் பனைப் பிரதிநிதியாக வேலையில் இருந்தார். பின் கல்கத்தா திரைப்பட ஸ்டுடியோவில் ஆடியோ தொழில்நுட்ப பணியாளராக பணியாற்றினார். 1950 முதல் முழுநேர திரைப்படப் பணிகளில் ஈடுபட்டார்.
இவரின் திரைப்படங்கள் நடுத்தர வகுப்பு மக்களின் குடும்பப் பிரச்சனைகளைச் சித்தரிக்கும் படங்களாக, குறைந்த செலவில் எடுக்கப்பட்டவை ஆகும். இவர் இயக்கி 1969இல் வெளிவந்த ‘புவன் ஷோம்’ (திரு. ஷோம்) என்ற திரைப்படம் இவரை உலக அளவிலும் இந்திய அளவிலும் பெரிய இயக்கு நராக அடையாளப்படுத்தியது. இத்திரைப்படம் நவீன இந்திய திரைப்பட இயக்கத்தின் முக்கிய அடையாளமாக கருதப்படுகிறது.
இவரது துவக்க கால படங்களில் மார்க்சியத்தின் தாக்கம் வெகுவாக காணப்பட்டது. இவர் ஒரு மார்க்சிய கலைஞராக அடையாளம் காணப்பட்டார். இவரது பல திரைப்படங்கள் கல்கத்தா நகரைக் கதைக்களமாகக் கொண்டவை. இவரது படங்களில் கல்கத்தா நகரமும் ஒரு கதாபாத்திரமாகவே இருக்கும். அந்த நகர் மக்களின் அழகியலையும், மதிப்புமிக்க வாழ்க்கை அமைப்பையும், சமூக ஏற்றத்தாழ்வுகளையும், நகரின் தெருக்கள் வழியாக அதன் பழமையைக் காண்பிப்பார்.
இவரின் பல திரைப்படங்கள் இந்தியாவில் விருதுகளை வென்றது மட்டுமல்லாது கேன்ஸ், பெர்லின், வெனிஸ், மாஸ்கோ, சிகாகோ, கெய்ரோ உள்ளிட்ட அனைத்து உலகத் திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு, விருதுகளை வென்றன. இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, பத்மபூஷண் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டங்கள் வழங்கியுள்ளன..