tamilnadu

img

‘உங்கள் அதிகாரத்தை விட வள்ளுவனின் அதிகாரம் வலிமையானது’ - மதுக்கூர் இராமலிங்கம்

வள்ளுவர்செய்     திருக்குறளை
மறுவறநன்     குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி
ஒருகுலத்துக் கொருநீதி
என்கிறார் மனோன்மணியம் பாடிய சுந்தரனார். 

ஆனால், மநுவாதிகளான பாஜக வினர் திருவள்ளுவரை தங்களது கூடாரத்தில் கொண்டு போய் அடைத்து விட முயல்கின்றனர்.  இது அப்பட்டமான அயோக்கியத்தனம். வள்ளுவர் திரு வுருவப் படமே கே.ஆர்.வேணு கோபால் சர்மா என்ற ஓவிய ரால் வரையப்பட்டது. இந்தப் படத்தையே தமிழக அரசு அங்கீ கரித்தது. வள்ளுவர் இந்த உரு வத்தில்தான் இருந்தார் என்று கூற முடியாது. மழித்தலும், நீட்டலும் வேண்டா என்பதுதான் அவரது வாக்கு. ஆனால், தங்களுக்கென்று இரவல் வரலாற்றையே பெற்ற இந்துத்துவா கூட்டத்தினர், திரு வள்ளுவர் இந்து மதத்தை சேர்ந்தவர்தான் என்று புதுக்கரடி ஒன்றை அவிழ்த்துவிட்டுள்ளனர். எச்.ராஜா சனாதன இந்து தர்மத்தின் அடிப்படையிலேயே வள்ளுவர் திருக்குறளை வடிவமைத்தார் என்று ஒரே போடாகப் போடுகிறார்.  பாஜவைச் சேர்ந்த நாராயணன், தமிழகத்தில் பிறந்த திருவள்ளுவர் ஹிந்துவே என்றும்  நாசமாய்ப் போன போலி மதச்சார்பின்மை அர சியலில் திருவள்ளுவரையும் இழுக்காதீர்கள், தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் தமிழக அர சியல்வாதிகளே என்றும் கூறியுள் ளார்.

பாஜவைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் சதுர்வர்ணம் மயாசிருஷ்டம் என்று  கீதை கூறிய கருத்தும் பிறப்பொக் கும் எல்லா உயிர்க்கும் என்று வள்ளு வர் கூறியதும் ஒன்று தான் என்கிறார்.  வேலிக்கு ஓணான் சாட்சி என்பதுபோல, தமிழக அமைச்சர் மா. பா.பாண்டியராஜன் திருவள்ளுவர் நாத்திகராக இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்று தன்னுடைய ஆரா ய்ச்சித் திறனை வெளியிட்டுள்ளார். நல்ல வேளை, வள்ளுவர் பாஜகவில் தான் மிஸ்டு கால் கொடுத்து உறுப்பினராக இருந்தார் என்று அவர் கூறவில்லை. வள்ளுவரை தன்னவராக்கிக் கொள்ள பல்வேறு தருணங்களில் முயன்றது உண்டு. ஆனால், வள்ளு வம் அனைத்தையும் நிராகரித்து உலகப் பொதுமறையாக உயர்ந்து நிற்கிறது.  வள்ளுவரிடம் சமண சமயச் சாயல் உண்டு என்பதே தமிழறிஞர் களின் பொதுவான கருத்து. அகர முதல எழுத்தெல்லாம் என்ற குற ளில் அவர், பகவன் என்று குறிப் பிடுவது அருகக் கடவுளையே என்பது ஆய்வாளர் முடிவு.

பாஜக வகையறா மேற்கோள் காட்டும் குறளில் உள்ள வாலறிவன் என்பதும் அருகக் கடவுளையே குறிக்கும். வாலறிவன் என்றால் தூய அறிவுடையவன் என்ற பொரு ளில் அருகக் கடவுளை குறிக்கும். இளங்கோவடிகளும் ‘அறிவன் அறவோன் அறிவுவரம்பி கந்தோன்’ என்று அருகக் கட வுளை குறிக்கிறார். வைதீக மதத்தின் வர்ணாசிரமக் கொடுமைகளுக்கு எதிராக வெடித்து எழுந்த மதங்களே புத்த, சமண மதங்களாகும். கடவுள் இல்லாத மதத்தை கனவு கண்ட புத்த பிரானையும் கூட இவர்கள் மகா விஷ்ணுவின்  11ஆவது அவதாரமாக மாற்ற முயன்று தோற்றார்கள்.  வள்ளுவர் ஊழ் குறித்து பேசியவர்தான். இது சமண சமயக் கோட்பாடுதான். ஊழில் பெருவலி யாவுள என்றும் அவர் பேசுகிறார். ஆனால், வள்ளுவர் கூறும் ஊழ் என்பது முறைமையைக் குறிக்கும் என்பது சிலரது கருத்து. அவர், விதிக் கோட்பாட்டையே முன் வைக்கிறார் என்று கொண்டாலும் கூட முயற்சி செய்தால், ஊழையும் உட்பக்கம் காண்பர் என்றும்  மனித முயற்சியை முன்னிலைப் படுத்துகிறார்.

வேள்வி என்கிற வைதீக மதம் கால்நடைகளை கொன்று குவித்தது. இதை சமண, பவுத்த மதங்கள் கடுமையான எதிர்த்தன. இளம் கன்றுக்குட்டியில் எந்தெந்த பாகம் யாருக்கு என்றெல்லாம் பங்கீடு செய்யும் வேத வரிகள் உண்டு. இதை எதிர்த்து கொல்லாமை என்கிற அதிகாரத்தை வள்ளுவர் முன்வைக்கிறார்.  உழவு செய்வதே பாவம், பிராம ணர்கள் அதை செய்யக் கூடாது என்று தடுத்தது வைதீக மதம். ஆனால், உழவுத் தொழிலை தலை மேல் வைத்துக் கொண்டாடினார் வள்ளுவர். சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்று உழவின் பின்னே உலகம் சுழலும் என்று பேசியவர் உழவர்களின் கை மடங்கி வேலை செய்யவில்லை என்றால், உல கத்தை துறந்துவிட்டோம் என்று  சொல்லும் துறவிகள் கூட சோற்று க்கு தாளம் போட வேண்டியிருக்கும் என துறவிகளைவிட உழவர்களை முன்னிறுத்தினார். ஆனால் இன்றைக்கு விவசாயிகளுக்கு கடன் தர மறுக்கும் மோடி அரசு, சாமியார்களுக்கு தாராளமாக வங்கிகள் கடன் தர வேண்டும் என்று  சிபாரிசு செய்கிறது. இவர்களா வள்ளுவரின் வழி வந்தவர்கள்?

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வள்ளுவர் கூறு வதும்  நான்கு வர்ணங்களையும் நான்தான் படைத்தேன் என்று  பகவானே கூறுவதாக சொல்லப் பட்டுள்ள பொய்யுரையும் ஒரு போதும் ஒன்றாகாது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதே வள்ளு வத்தின் குரல். ‘பகுத்துண்டு பல்லு யிர் ஓம்புதல்’ என்கிற குரலை வேதங்களில் எங்கேயாவது கேட்ட துண்டா? இது மனிதர்கள் பகுத்து உண்டு வாழ வேண்டும் என்று மட்டும் கூறவில்லை. உலகில் உள்ள எல்லா உயிர்களும் பகுத்து உண்ண வேண்டும் என உலகளாவிய பல்லுயிர் பாதுகாப்பை பேசுகிறது.  வள்ளுவரின் காலம் குறித்து மாறுபட்ட கருத்துகள் இருந்த போதும், இன்றைக்கு இருக்கிற வடிவத்திலான இந்து மதம், வள்ளுவர் காலத்தில் இருந்ததே இல்லை. இன்று இந்துக்கள் அல்லது இந்து சமூகத்தினர்  என்று அழைக்கப் படும் மக்கள் ஆங்கிலேயரின் வருகைக்கு முன்பு அவ்வாறு தங்களை அழைத்துக் கொள்ள வில்லை. இதை நான் சொன்னால்  கோபித்துக் கொள்வார்கள். மகா பெரியவர் காஞ்சி காமகோடி பீடா திபதி கூறுகிறார் ‘‘நமக்குள் சைவர்கள், வைணவர்கள் என்று  வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தா லும், வெள்ளைக்காரன் நமக்கு இந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ, நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது”. 

வள்ளுவர் காலத்தில் இந்து மதமே இல்லாதபோது, அவர் எப்படி இந்துவாக இருந்திருக்க முடியும். இன்னொரு விவாதத்தையும் நோக்குவோம்.  ஆண்டாள் திருப்பாவையில் ‘மையிட்டு எழுதோம், மலரிட்டு நாம் முடி யோம், செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்றோதோம்’ என்று வருகிறது. அதாவது, மார்கழி நோன்பு இருக்கும் பெண்கள் என்னவெல்லாம் செய்ய மாட்டோம் என்று சொல்கிற பாடல் இது. தீக்குறளை சென்றோதோம் என்பதற்கு காஞ்சி பெரிய சங்கராச் சாரியார், திருக்குறளை படிக்க மாட்டோம் என்பதுதான் இந்த வரிக்கு விளக்கம் என்று கூறினார். 1963 ஜுன் மாதம் மதுரையில் பேசிய போது, அவர் இவ்வாறு கூறினார். இதற்கு எதிர்ப்பு எழுந்தது. குமுதம் பத்திரிகை கண்டித்து தலையங்கம் எழுதியது. இருந்தாலும், காஞ்சி சங்கராச்சாரியார் அதன்பிறகும் அளித்த விளக்கம் மழுப்பலாகவே இருந்தது. 

வ.உ.சிதம்பரனார் திருக்குற ளில் காணப்படும் கடவுள் வாழ்த்து,  வான்சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய அதிகாரங்கள் திருவள்ளு வர் எழுதியது அல்ல, இடைச்செரு கல் என்று கூறியுள்ளார். திருக்குற ளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் தன்னுடைய கைச்சரக்கை ஏராள மாக கலந்துவிட்டதால், மணக்குட வர் உரையை வ.உ.சி. பதிப்பித்தார். அப்போதும்கூட பரிமேலழகர் உரையைவிட, மணக்குடவர் உரை வள்ளுவருக்கு நெருக்கமாக இருப்பதை படித்தவர்கள் புரிந்து கொள்ள முடியும். ஆனால், ஒன்று சொல்லலாம். இவர்களைப் பற்றி வள்ளுவர் அன்றே பாடிவிட்டார். “ மக்களே போல்வர் கயவர்”.  அதிகாரம் கையில் இருக்கிறது என்பதால் இவர்கள் வள்ளுவரை வளைக்க முயலலாம். ஆனால் இவர்களது அதிகாரத்தை விட வள்ளுவனின் அதிகாரம் வலிமை யானது. ஏனெனில், குறளில் இருப்பது 133 அதிகாரம்.