tamilnadu

img

மாதர் சங்க நடைபயணம் இலக்கை அடையட்டும்

சிபிஎம் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா வாழ்த்து

தமிழகத்தில் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.இந்த வன்கொடுமைகளில் பெண்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்குழந்தைகளுக்கு எதிராகவும் பாலியல் வன்முறைகள் பல இடங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. இதனால் பெண்கள் தங்களது உரிமைகளை நிலைநாட்ட முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். அவர்கள் கல்வி,தொழில், இதர நடவடிக்கைகளில், சாதாரணமாக செயல்படுவதற்கு இத்தகைய பாலியல் வன்முறைகள் பெரும் இடைஞ்சலாகவும் கொடுஞ்செயலாகவும் இருக்கின்றன.  பாதிக்கப்பட்ட அத்தகைய பெண்கள் சார்பாக ஜனநாயக மாதர் சங்கத்தின் நடைபயணம் நடந்துள்ளது. பாலியல் கொடுமைகளிலிருந்து தமிழகம் மீளவேண்டும் என்பதே இந்த நடைபயணத்தின் நோக்கம். பெண்களுக்கு எதிரான, பெண்குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை எதிர்த்து தமிழகத்தின் சகலபகுதி மக்களும் ஒரே குரலில் கண்டனம் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். 

தேசபக்த தியாகிகள் கே.பி.ஜானகியம்மாள், பாப்பா உமாநாத் ஆகியோரால் துவக்கப்பட்ட இயக்கம் ஜனநாயக மாதர் சங்கம். பெண்கள் நலனில் அக்கறை உள்ளவர்களை திரட்டி, பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண மாதர் சங்கம் பாடுபட்டு வருகிறது. மாதர் சங்கத்தின் நடைபயணத்திற்கு தமிழகத்தில் உள்ள அனைத்துப்பகுதி மக்களும் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன். 

போதை மருந்து பழக்கத்தினால் தமிழகத்தில் உள்ள பல பகுதியினர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஒரு நாட்டைக் கெடுக்க வேண்டும் என்றால் அந்த நாட்டில் உள்ள ஒரு பகுதியினரை போதைப்பழக்கத்திற்கு ஆளாக்கிவிட்டு, அவர்களால்  ஒன்றுமே செய்ய முடியாத நிலைக்கு தள்ளிவிடுவதோடு, அவர்களால் தீங்குகளும் ஏற்படுகின்றன. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு முக்கிய காரணமாக விளங்குவதும் இந்த போதைப்பழக்கத்தின் தாக்கம்தான். போதைப்பழக்கத்திற்கு ஆளாகியவர்கள் அற்பஆயுளிலே இறந்துவிடுகின்றனர். அவர்களுடைய குடும்பங்களுக்கு மிகப்பெரிய கஷ்டங்களை ஏற்படுத்துகிறது. இப்பழக்கத்தால் தொழில் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட முடியாமல் அவர்களது கவனம் திசைதிருப்பப்பட்டு, தவறான வழிகளிலே ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆகவே போதைப்பொருள் உபயோகத்தை தமிழகத்தில் முற்றிலுமாக  தடுத்து நிறுத்த வேண்டும். போதைப்பொருட்கள் வருவதை தடுப்பதற்கு மத்திய,மாநில அரசுகள் பயனுள்ள, தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பத்தினர், தங்களது குடும்பத்தில் உள்ள ஒருவர் போதைப்பழக்கத்திற்கு ஆளாக முயற்சித்தால், அவரை தடுத்து நிறுத்தி, அந்த பழக்கத்தில் இருந்து பின்வாங்கச் செய்து,நல்ல வழிக்கு கொண்டுவர வேண்டியது அனைத்துக்குடும்பத்தினரின் கடமையாகவும் இருக்கிறது.

போதைப்பழக்கம் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை அழித்துவிடும்; கலாச்சாரத்தை அழித்துவிடும். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிக்கும். ஆகவே இதனை எதிர்த்து போராடுவது மிகமிக அவசியமாகும். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளையும்  பெண்குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளையும் போதைப்பழக்கத்தை எதிர்த்தும் ஜனநாயக மாதர் சங்கம் மேற்கொண்டுள்ள நடைபயண இயக்கத்திற்கு தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் கட்சி பேதமில்லாமல், சாதி, மத பேதமில்லாமல் ஆதரவுதரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

;