tamilnadu

img

அனைத்து குளறுபடிகளையும் சரிசெய்து உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்துக!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை, நவ.30- அனைத்து குளறுபடிகளையும் சரி செய்து உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த ஏற்பாடு செய்ய வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது. கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் வெள்ளியன்று (29.11.2019) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், அ. சவுந்தரராசன், பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் அதிமுக அரசு காலங்கடத்தி வருகிறது. தேர்தலை நடத்த வேண்டிய அதிகாரம் படைத்த தமிழ்நாடு தேர்தல் ஆணையம் நீதிமன்ற தடைகள் ஏதுமில்லாத சூழ்நிலையிலும் தேர்தலை நடத்தாமல் கைகட்டி அமைதி காத்து வருகிறது. உள்ளாட்சி நிர்வாகம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் செயல்பாடுகளால் நிலைகுலைந்து உள்ளது. ஊழல் முறைகேடுகள் தலைவிரித்தாடுகின்றன. மத்திய அரசு அளிக்க வேண்டிய உள்ளாட்சிக்கான மானியத் தொகை ரூ. 7000 கோடிக்கும் மேல் கிடைக்கவில்லை. மொத்தத்தில் உள்ளாட்சி நிர்வாகத்தின் அடிப்படை பணிகளான குடிநீர், சுகாதாரம், கழிவுநீர் அகற்றம், சாலை பராமரிப்பு அனைத்தும் ஸ்தம்பித்து சீர்கேடு அடைந்துள்ளது.

உச்சநீதிமன்றம் டிசம்பர் மாதம் 13ஆம் தேதிக்குள் தேர்தலுக்கான கால அட்டவணையை வெளியிட வேண்டுமென இறுதியாக உத்தரவிட்டுள்ளது. இதற்கு பின்னரும் முறையான தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அதிமுக அரசு மேற்கொள்ளவில்லை. மாநிலம் முழுவதும் தொகுதி வரையறைகள் மேற்கொள்ளப்பட்டதில் பல்லாயிரக்கணக்கான புகார்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே நேரடி தேர்தல் என அறிவிக்கப்பட்டிருந்த தேர்தல்கள் மறைமுகத் தேர்தல் என கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன. 

ஊராட்சி சட்ட விதிகளுக்கு விரோதமாக

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தனித்தனியான மாவட்ட ஊராட்சிகள் அமைக்க வேண்டுமென்ற ஊராட்சி சட்ட விதிகளுக்கு விரோதமாக, ஒரே மாவட்ட ஊராட்சியாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி துவங்கி, கிராம ஊராட்சி வார்டுகள் வரை அனைத்து பொறுப்புகளுக்கும் தலித், பழங்குடியினர், பெண்களுக்கான முறையான இடஒதுக்கீடு அறிவிக்கப்படவில்லை. 

மேலும், இதுவரை நடந்த தேர்தல் முறைக்கு மாறாக, பல கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்புகள் உட்பட பல குழப்பங்களை அதிமுக அரசு ஏற்படுத்தி வருகிறது. இத்தகைய குழப்பங்களை உருவாக்குவதோடு இதில் நீதிமன்றத் தலையீட்டின் மூலம் தேர்தலை தள்ளிப்போட முடியுமா? என்ற உள்நோக்கத்துடனேயே அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. அதிமுக அரசின் இத்தகைய போக்கு மக்கள் பிரதிநிதிகள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தலைமை தாங்கும் அடிப்படை ஜனநாயக உரிமையை தட்டிப்பறிக்கும் நடவடிக்கையாகும். எனவே, உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள அடிப்படையில் தற்போது நிலவும் அனைத்து குறைபாடுகளையும் சரிசெய்து உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

;