ரஷ்யா முதல் முறையாக ‘ஃபெடார்’ என்ற மனித உருவிலான ரோபோவை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பியுள்ளது.
கசகஸ்தான் நாட்டின் பாய்கோர் மாகாணத்தில் உள்ள ரஷ்யாவின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சோயுஸ் எம் எஸ்-14 என்ற விண்கலத்தில், ‘ஃபெடார்’ என்ற மனித உருவ ரோபோ சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஸ்கைபோட் எஃப் 580 என்ற அடையாள எண் கொண்ட இந்த ரோபோ, 1.8 மீ உயரமும் 160 கிலோ எடையும் கொண்டது. சோயுஸ் விண்கலத்தில், இந்த ரோபோ ரஷ்ய கொடியை ஏந்தி, பைலட் இருக்கையில் அமர்ந்தவாறு விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இந்த ஃபெடார் ரோபோவுக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் கணக்குகளும் உள்ளன.
இந்த ரோபோ, குறைந்த புவியீர்ப்பு விசையில் எப்படி செயல்படுவது, தண்ணீர் பாட்டீலை எப்படி திறப்பது, ஸ்க்ரூ டிரைவர், ஸ்பானர், தீயணைப்பு கருவிகள் ஆகியவற்றை எப்படி பயன்படுத்துவது, சர்வதேச விண்வெளி மையத்தில் மின் வயர்களை இணைப்பது, துண்டிப்பது போன்றவற்றையும் பரிசோதித்து பார்க்கும். சர்வதேச விண்வெளி மையத்துக்கு கடந்த மாதம் சென்ற ரஷ்ய வீரர் அலெக்சாண்டர் ஸ்கோட்சோவின் மேற்பார்வையில் இந்த ரோபோ பணிகளை மேற்கொள்ளவுள்ளது.
இதே போன்று கடந்த 2011-ஆம் ஆண்டு அமெரிக்கா விண்வெளி மையமான நாசா, ரோபோனாட்-2 என்ற மனித ரோபோவை அனுப்பியது. ஆனால் அது தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக 2018-ஆம் ஆண்டு திருப்பி அனுப்பப்பட்டது. இதை அடுத்து, 2013 ஆம் ஆண்டு ஜப்பான் கிரோபோ என்ற சிறிய ரோபோவை அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.