அரசாங்க ஆவணப்படி ‘டவுண் பஞ்சாயத்து’ அந்தஸ்துள்ள பேருர் அது. அந்த ஊரின் எல்லைப் பகுதியில் குளம் ஒன்று இருந்தது. அந்தப் பகுதியில் வாழும் குடிசை வாசிகள் அந்தக் குளத்தில் தான் குளிப்பார்கள். சிறார்கள் அங்கு நீச்சல் பழகுவார்கள். சலவை யாளர்கள் அங்கு துணி துவைப்பார்கள். குளத்தின் கரை, துவைத்த துணி களைக் காயப் போட ஏற்றதாக இருந்தது. சலவையாளர் சமுதாயத்திற்கு ‘வண்ணார்’ என்கிற பெயரும் உண்டு. அதனால் இந்தக் குளம் ‘வண்ணார் குளம’; என்றும் அழைக்கப்பட்டது. குளத்தங்கரையில் பரமேஸ்வரி ஆலயம் ஒன்றிருக்கிறது. அந்த பரமேஸ்வரி அம்மனின் அபிசேகத்திற்கு ஒரு காலத்தில் இந்தக் குளத்தில் இருந்துதான் பூசாரி நீர் எடுத்துப் போனதாகச் சொல்லூர்கள். குளத்தை ஒட்டி வாழ்கிற குடிசைவாசிகள் குடிநீருக்கு இந்தக் குளத்து நீர் பயன்பட்ட காலமும் ஒன்றிருந்தது. சலவையாளர்களின் துணி துவைப்பு, ஆண் பெண்களின் நீராடல் முதலியனவைகள் நிகழ்ந்தாலும் குளத்தில் அழுக்கு தேங்காது. அழுக்குகள் அத்தனையும் குளத்தில் வாழ்ந்த மீன்களுக்கு உணவாகியது. தினமும் குளம் சுத்தமாகி குளத்து நீர் தெளிந்த நீராகக் காட்சி தரும் என்பார்கள். நீருற்று ஒன்று குளத்தின் மூலையில் இருந்ததாகவும் மழைக்காலம், கோடை காலம் மழையே பொழியாத காலம் என்று முக்காலத்திலும் வண்ணார் குளம் நீர் நிரம்பிக் காட்சி தருவதை இன்று நடுத்தர வயதைக் கடந்தவர்கள்
கண்டதுண்டு.
குளத்தின் கரையை தொட்ட மாதிரி வண்டிப் பாதை ஒன்று போகிறது. வண்டிப் பாதையின் வலது புரத்தில் காலி இடம் கணிசமான பரப்பளவில் முள் மண்டிப் போய்க் கிடந்தது. அந்த இடம் தனியார் ஒருவருக்குச் சொந்த மானது. யாரோ விபரமான மனிதர் கூறிய யோசனைப் பிரகாரம்… அந்தக் காலி இடத்தை சுத்தம் செய்து… டவுண் பிளானிங் ஒப்புதல் பெற்று வீட்டு மனை யாக்கி விற்கத் தயாரானார் அந்த இடத்தின் உரிமையாளர். அவ்வளவுதான்… நீ நானென்று அப்ருவல் கிடைப்பதற்கு முன்பே முன்பணம் தந்து மனை யிடம் வாங்கத் தயாரானார்கள் நமது நடுத்தர வாசிகள். நடுத்தர குடும்பங்களில் வீட்டுப் பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து விட்டால்.. கிடைத்த வேலை நிரந்தரமாகி விட்டால் போதும்.. சொந்த வீடு கட்ட வேண்டும் என்கிற அசை துளிர்த்து விடுகிறது. அவர்களின் சொந்த வீட்டு தாகத்தை தணிக்க வங்கிகள், காப்பீட்டு நிறவனங்கள் உதவத் தயாராக இருக்கின்றார்களே..1 உழவர்கள் நிலம் வாங்க கடன் தராத வங்கிகள் வாகனம் வாங்க… வீடு வாங்க தாராள மனதுடன் நடந்து கொள்கிறார்கள் அல்லவா..? வண்ணார்குளம் கரையோரம் போகிற வண்டிப் பாதையை ஒட்டி புதிய குடியிருப்புக் கட்டுமானப் பணி தொடங்கியது. பணி தொடங்கிய ஆறேழு மாதங்களில் வீடுகள் தயாராகின. பத்தாவது மாதத்தில் வீடு தோறும் புகுமனை புகு விழா விசேடங்கள் நடந்தேறின. அடுத்தடுத்து புது வீடுகளில் ஜனங்கள் குடியேறி ‘சொந்த வீட்டுக்காரர்கள்’ என்கிற அந்தஸ்தைப் பெற்றார்கள்.
வீடுகளில் குடி புகுந்து மாமூல் வாழக்கை வாழ ஆரம்பித்த பிறகுதான் சரியான கழிவு நீர் வடிகால் வசதி இல்லை என்பது அவர்களுக்குத் தெரிந்தது. சாக்கடை நீர் போக சரியான வழி இல்லாமல் “பிளாட்டுக்கள எப்படி அப்ருவல் கொடுத்தாங்க…? நாமளும் அதக் கண்டுக்கிடாம வீடக் கட்டிப் பிட்டோமே..1” போன்ற கேள்விகள் குடியிருப்புவாசிகளிடம் எழும்பின. அந்தக் குடியிருப்பு வாசிகள் ஒன்றாய் சேர்ந்து டவுண் பஞ்சாயத்து ஆபீசுக்குப் போனார்கள். அலுவலக மேலதிகாரியான செயல் அலுவலரைப் பார்த்தார்கள். விசயத்தை விளக்கினார்கள். கழிவுநீர் தேங்காமல் வேறு பக்கம் திருப்ப வேண்டும்.. அதற்காக அலுவலக ரீதியாக… இல்லை வேறு முறையில் பணம் தரத் தயார்.. அதாவது கையூட்டுக் கொடுக்கச் சம்மதம் என்றனர். சாக்கடைக்கு சரியான போக்கிடம் ஏற்பாடு செய்து… சாக்கடையை விரட்டியடிக்க வேண்டினார்கள்.
செயல் அலுவலர் எவ்வளவு வாங்கினாரோ… வாங்கினவற்றில் மற்ற ஊழியர்களுக்கு எவ்வளவு வழங்கினாரோ… இவருக்கு அதில் எவ்வளவு கிடைத்ததோ… தெரியவில்லை. அரசு விதிகளில் உள்ள எந்த ஓட்டையைப் பயன்படுத்தினாரோ… யாருக்குத் தெரியும்…? அந்த குடியிருப்;பில் இருந்து வெளியேறுகிற கழிவு நீரை சிமிண்ட்டு பைப்புக்கள் மூலம் வண்ணார் குளத்திற்கு வழி அனுப்பி வைத்தார்;. ஆம். குடியிருப்பில் சாக்கடை தேங்கா மல் சுத்தமாக்கி.. குளத்தை அசுத்தமாக்கினார். கழிவு நீர் குளத்தில் சேர்ந்தவுடன்.. மீன்கள் செத்து மிதக்க.. துப்புரவு தொழிலாளர்களை வைத்து அப்புறப்படுத்த… குளம் குட்டையாகிப் போனது. கழிவு நீர் வடிகாலாக மட்டும் இருந்த வண்ணார்குளம் குடியிருப்பு வாசிகளுக்கு குப்பைக் கிடங்கானது. காலப்போக்கில் பேருராட்சி நிர்வாகமே அதில் குப்பையைக் கொட்ட அது பேருராட்சி குப்பைக் கிடங்கானது. இதற்கு சில அரசியல் கட்சியினர் முணுமுணுத்தார்களே தவிர எதிhப்பு நடவடிக்கை களில் இறங்காமல் மௌனம் காத்தனர். வரவிருக்கிற உள்ளுராட்சி தேர்தலில் அந்தக் குடியிருப்பு வாக்குகள் விழாமல் போய் விடுமென பயந்தார்கள். எப்படியும்; அந்த வீடுகளில் நூறு வாக்குகள் இருக்கலாம்… பஞ்சாயத்து தேர்தலில் 100 ஓட்டுக்கள் என்பது பெரிய எண்ணிக்கை ஆயிற்றே…! நியாயங்களுக்காக முழுவீச்சாய் போராடிய இயக்கத்தின் போராட்டங்கள் வெற்றியடையவில்லை. இதுதான் குளம், குட்டையயாகி, குட்டை குப்பைக் கிடங்கான கதை ஆகும்.