tamilnadu

img

‘தமிழ் மகன்’ சு.வெங்கடேசனை நாடாளுமன்றம் அனுப்புவீர்

மதுரை, ஏப்.13-மதுரை நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்களும், இளம்தலைமுறை வாக்காளர்களும் இத்தொகுதியில் போட்டியிடும் ‘தமிழ் மகன்’ சு.வெங்கடேசனை நாடாளுமன்றம் அனுப்பிட வேண்டும் என, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகரும், அப்துல் கலாம் லட்சிய இந்திய கட்சியின் தலைமை வழிகாட்டியுமான வி. பொன்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மதுரையில் சனிக்கிழமை, சு.வெங்கடேசனை ஆதரித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:திமுக கூட்டணியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் எனது நண்பர். அதேபோல் அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன் போட்டியிடுகிறார். அவரும் எனக்கு நண்பர்தான்.சு.வெங்கடேசன் கடந்த 20 ஆண்டுகளாக அரசியல் பணியாற்றி வருகிறார். நல்ல எழுத்தாளர். காவல்கோட்டம் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். கீழடி அகழ்வாய்வை பாஜக அரசு மூடி மறைக்க முயற்சித்தபோது அகழ்வாய்வின் பெருமைகளை, தமிழர்களின் தொன்மையான நாகரீகத்தை வெளிக்கொணர்ந்தவர்.அதிமுகவின் ராஜன் செல்லப்பா மதுரை மேயருக்கு போட்டியிட்டபோது என்னை சந்தித்தார். அப்போது வைகையாற்றில் சோழவந்தான் முதல் மதுரை வரை இரண்டு தடுப்பணைகள் கட்டி நீரைத் தேக்கி வைக்கலாம்; அதன்மூலம் மதுரை அனைத்து அம்சங்களிலும் வளம்பெறும் என்பது உள்பட பல ஆலோசனைகளை வழங்கினேன். வைகையில் சாக்கடை கலப்பதை தடுக்க வேண்டுமென வலியுறுத்தினோம். அவரும் செய்வதாக உறுதியளித்தார். அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்தார். சகல அதிகாரமும் கையில் இருந்தும் ராஜன் செல்லப்பா மேயராக இருந்தவரை அந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை. இன்றைக்கும் வைகையில் சாக்கடைதான் ஓடுகிறது.


வைகையில் சாக்கடை கழிவு கலப்பதை தடுக்க வேண்டு மென்ற அதே கோரிக்கையை சு.வெங்கடேசனிடமும் வைத்துள்ளேன். தாம் வெற்றிபெற்றுச் சென்று நிச்சயம் நிறைவேற்றுவதாகக் கூறியுள்ளார். வைகையைப் பற்றியும், வைகை நாகரிகத்தைப் பற்றியும் பெரும் கனவோடும் திட்டத்தோடும் களப்பணி ஆற்றி வருபவர் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன். மதுரையின் இளைய வாக்காளர்கள் நோட்டாவிற்கு ஓட்டுப் போடுவதனால் பயனில்லை. மதுரை மண்ணைப் புரிந்த, மாற்றுச் சிந்தனைகள் கொண்ட, மாற்று எண்ணம் கொண்ட நல்லவேட்பாளர் சு.வெங்கடேசன். அவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அவரது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். பணத்தால், சாதியால், மதத்தால் யாரும் வாக்குகளை வாங்கிவிட முடியாது.நல்ல கருத்துக்களை ஏற்க மோடி தயாரில்லை. இன்றைக்கு உள்ள சூழ்நிலையில் மோடி பிரதமராக முடியாது. மதத்தையும் ராணுவத்தையும் காட்டி மட்டும் வெற்றிபெற்றுவிட முடியாது. மாநிலக் கட்சிகளின் ஆதரவோடு மத்தியில் ஆட்சி அமைய வேண்டும். எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய அடிமைகளின் கைகளில் சிக்கி, பாஜகவின் கைப்பாவையாக மாறிவிட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

;