ஆம். அவள் கிடத்தப்பட்டுள்ளாள். ஐஸ் பெட்டிக்குள்... அசைவின்றி கிடக்கிறாள். அவள் வாய் ... துணியால் கட்டப்பட்டுள்ளது. அவள் போய்விட்டாள்.
ஆம். என்னை விட்டு போயே போய்விட்டாள். வாழ்ந்து முடித்து போய்விட்டாள். இல்லை. அவள் வாழாமலே போய்விட்டாள்.
ஆம். அவளும் இவ்வுலகில் சந்தோஷமாய் வாழத் தானே பிறந்தாள். ஆனால் நான்…நான்… அவன் மனசு விம்மியது.
திருமணம் என்ற ஒரே பந்தத்திற்காக ...உன் அத்தனை ஆசைகளையும் , விருப்பங்களையும் குழி தோண்டி புதைத்து விட்டேனே நான். சமையல் கட்டுக்குள்ளேயே உன்னை முடக்கி விட்டேனே…!!! .ஏன் நான்…..விழ இருந்த கண்ணீரை விழாமல் இருக்க பெரும் முயற்சி செய்தான் கணேஷ்.
எத்தனை தவிப்பு…. உனக்குள் இருந்திருக்கும். எத்தனை தடவை என்னிடம் கெஞ்சி இருப்பாய். கல்லாய் இருந்து விட்டேனே. நான் முறைக்கிற முறைப்பிற்கும், கத்துகிற கத்தலுக்கும் ... பயந்து ... உனக்குள்...ஒடுங்கி போனாயே…!!!
இன்று என் மனம் கனத்து கிடக்கிறது.. நான் ஏன் அப்படி செய்தேன்....? அவளுக்கு எது சந்தோஷமோ அதை ஏன் நான் அனுமதிக்கவில்லை....? ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு சந்தோஷம். சிலருக்கு பாடுவதில் சந்தோஷம். சிலருக்கு ஆடுவதில் சந்தோஷம். சிலருக்கு பேசுவதில் சந்தோஷம். அந்த உயிரில் அமைந்த இயல்பு அது…. அதை தடுக்க மற்றவருக்கு என்ன உரிமை…???
சிலருக்கு சில திறமைகள இயல்பாய் அமையும். கணவர் என்ற ஆணவத்தில், நான் உன் ஆசையை, திறமையை அலட்சியப்படுத்தி விட்டேனே…!!!
இந்த நிலையில் வருகின்ற ஞானோதயம்… ஏன் நீ கெஞ்சிய போது வரவில்லை. எனக்குள் உள்ள கணவன் என்கின்ற அகம்பாவம். ஈகோ.
உயிருடன் இருக்கும் போது அன்பு செலுத்துவதில்லை. இறந்த பின்பு போட்டோவிற்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது எவ்வளவு கேவலம்….!!! எவ்வளவு வேஷம். நான் தவறு செய்து விட்டேனே…!!! இன்று அனாதையாய் தவிக்கிறது என் மனசு.
அவளின் சங்கீத ஞானம். அந்த ஆர்வம். எனக்கு இல்லையே. . என்ன குரல் வளம்....!! என்ன இனிமை...!!! காது குளிர கேட்டுக் கொண்டே இருக்கலாம்...!!! ஆனால் ஒருநாளும் அவளை பாடப் சொல்லி நான் ரசித்ததே இல்லை. ஒரு நாளும் அவளை நான் பாராட்டியதே இல்லை.
நான் இல்லாத நேரத்தில், அவள் ஆனந்தமாய் பாடுவாள். அவளுக்குத் தெரியாமல் நான் ரசித்திருக்கிறேன். அவளின் குரல் வளத்தைக் கண்டு, நான் வியந்து போய் இருக்கிறேன்.
ஆனால் அவள் குரல் வளத்தினை மற்றவர்கள் ரசிப்பது எனக்கு பிடிக்கவில்லை ....எனக்கு பிடிக்கவில்லை என்பதற்காகவே , அவளை பலவாறு இம்சித்திருக்கிறேன். முகம் கொடுத்து பேசாமல் இருந்திருக்கிறேன். சிறு திருமண நிகழ்ச்சிகளில் கூட , அவளை பாட நான் அனுமதித்ததே இல்லை. எத்தனையோ வாய்ப்புகள் வந்த போதும், நான் முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டேனே...!!!
அவள் குரல் இனிமை.அதைவிட அவள் ... பாடல் அமுத கானம் தான்.
இன்று இப்படி ....இவள் வாய் மூடி.... படுத்துக் கொண்டிருக்கிறாளே....!!!
55 வயதில் இப்படி அசைவற்று கிடக்கிறாளே....!!! அந்த அமுத கீதம் பாடிய அந்த வாய் , இப்படி கட்டப்பட்டு.... கிடக்கிறாளே....!!!
அவளை பாட அனுமதித்திருந்தால், இன்றைக்கு ஒரு பி. சுசிலாவாகவும், வாணி ஜெயராமுவாகவும், ஒரு ஜானகியாகவும், ஏன் அவர்களுக்கு மேலும், ஆகியிருப்பாள். இன்று தமிழகமே துக்கம் அனுசரித்து இருக்கும்.
ஆனால் இன்று ஒரு 100 பேருக்கு மட்டுமே தெரிந்தவளாய் இந்த உலகத்தினை விட்டு விடை பெற்று செல்கிறாள்…!!!
அவளை அனுமதித்திருந்தால், இன்று பார் போற்றும் பாடகியாய் இருந்திருப்பாள். இவ்வளவு சீக்கிரம் உலகை விட்டுப் போயிருக்க மாட்டாள். அவள் அவளவில் நிறைவான வாழ்வு வாழ்ந்திருப்பாள்.
ஆனால் என்னை விட்டுப் போய் விடுவாளோ என்ற நினைப்பு என்னுள். அதனாலேயே அனுமதிக்கவில்லை நான். நான் சாதாரணமானவனாய் இருந்து, அவள் , அனைவரும் போற்றும் பாடகியாய் இருப்பது என்னால் நினைத்து கூட பார்க்க முடிய வில்லை. அவள் சாதாரண குடும்பப் பெண்ணாய் இருப்பதைதே நான் விரும்பினேன். அதனாலயே அவளை நான் முடக்கி விட்டேன்.
இன்று அவள் இறுதி ஊர்வலத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பி இருக்ககூடும்.. செய்தித்தாளில் முக்கிய செய்தியாய் முதல் பக்கத்தில் வந்திருக்கும். ஆனால் இவை ஏதும் இன்றி, அவள் வாய் கட்டப்பட்டு...இன்று மிகச் சாதாரணமான மனிதப்பிறவியாய் யாருக்கும் தெரியாமல் இவள் மறைந்து போக போகிறாள்.. இவள் புதை குழிக்குள் போகப் போகிறாளே.
ஜயோ... மகா பாவி நான்…!!!
நான் ஏன் இப்படி நடந்து கொண்டேன்..???. அவளின் சந்தோசத்தை அழித்து என் சந்தோசத்துக்காக ...அவளை கொலை செய்துவிட்டேனே.
நான் ஒரு கொலையாளி…!!!. கொலையாளியே தான்…!!! மனைவியே என்னை மன்னித்துவிடு.
திடீரென்று அவள் வாய் திறக்கப்பட்டு, அவளின் குரல்வளையில் இருந்து ஏதோ அசைந்து வாய் வழியே ஒரு ஒளிப்பிழம்பு பீறிட்டு வெளியேறுவதைப் போல ஒரு கணம் உணர்ந்தான்.
என்ன இது... இது நிஜமா...? பிரமையா...? அவள் வாய் ஒரு கணம் திறந்தது போல் இருந்ததே....ஏதோ. ஒரு ஒளிபோல்....சீ..... என்ன இது. நிஜமாய் நடந்தது போல் இருக்கிறதே…!!!
சிறிது நேரம் சற்று குழம்பி…. வியந்து போன…. கணேஷ். இயல்புநிலை க்கு வந்து, ஆகவேண்டிய காரியங்கள் முடிந்து, இறுதி சடங்கு முடிந்து , உறவினர்கள் எல்லாம் அவரவர் இல்லம் போய் சேர்ந்தாகிவிட்டது.
வீட்டில் வெறுமை ஆட்கொண்டது. எப்போதும் மயான அமைதி . ஆனால் அவ்வப்போது அவளின் அமுத கானம் மட்டும் … என் காதுகளுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது.
வருடங்கள் உருண்டோடின.
எட்டாவது படிக்கும் என் பேத்தியின் குரலும் அவள் குரல் போலவே இனிமையாக இருக்கிறது. எப்போதும் ஏதாவது ஒரு பாடலை பாடி கொண்டே இருக்கிறாள்.
மகன் ரவியும் தன் மகளின் ஆர்வத்தினை ஊக்குவிக்க ஆர்வம் காட்டினான். ஸ்கூல் முடிஞ்சு தினம் பேத்தியை பாட்டு வகுப்பிற்கு அழைத்து செல்வது இந்த தாத்தாவின் வேலை.
இவளை நிச்சயம் சிறந்த பாடகியாய் உருவாக்கி விட வேண்டும் என்ற நினைப்பு என்னுள் வலுவாக. பேத்தியின் திருமணத்திற்கு முன்பே , அவளை பார் போற்றும் பாடகியாய் ஆக்கிவிட வேண்டும் என தீர்மானித்த அந்த கணத்தில்….
ஏணோ… சட்ரென்று நினைவு வந்தது , அந்த நிகழ்வு. அன்று தனது மனைவியின் குரல்வளையில் இருந்து, ஏதோ அசைந்து அவள் வாய் வழியே ஒளிபிழம்பாய்........ ஒளிப்பிழம்பு எங்கே போனது....?
நினைவு வந்து சிலிர்த்து போனான் கணேஷ். மனைவியின் குரல் பேத்தியின் குரலாய்…